லண்டன் வட்ட மேஜை மாநாட்டில் அதிரையர்!

Publication7

நமது அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் எத்தகைய பாரம்பரியமானது என்பதற்குக் கீழ்க் காணும் தகவல் ஓர் எடுத்துக்காட்டாகும்:

நமது அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் 1920 இல் தோற்றுவிக்கப்பட்டது என்பதால், இதன் செயல்பாடுகளும் அக்கால கட்டத்தின் நிகழ்வுகளுடன் பின்னிப் பிணைந்து வந்துள்ளது. நம் இந்திய நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்தது, 1947 இல் என்பது அனைவருக்கும் தெரியும்.

அந்த நேரத்தில் அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க முக்கிய நிர்வாகிகளாக இருந்தவர்கள்:

தலைவர்: முஹம்மது முஹிதீன் (சுண்டைக்கா மோமியாக்கா)

செயலாளர்: அ.மு.க. அபுல் பரகாத் (புலவர் பஷீர் அவர்களின் தந்தை)

பொருளாளர்: சேகனா வீட்டு அப்துல் லத்தீப் ஹாஜியார்

இளைஞரும் ஆர்வமுள்ள காந்தியவாதியுமாக இருந்த செயலாளருக்கு ஒரு சிந்தனை முகிழ்த்தது. ‘இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுப்பது பற்றி, லண்டனில் வட்ட மேஜை மாநாடு கூடுகிறார்களாம். அதற்கு அதிரையின் பங்கு வேண்டாமா?’

அன்று ஆங்கில அறிவைப் பெற்றிருந்த சங்கச் செயலாளர், சங்கத்தின் சார்பாக, இங்கிலாந்து ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் இந்தியாவுக்குக் கட்டாயம் சுதந்திரம் கொடுத்தே ஆகவேண்டும் என்ற தீர்மானத்தை ஆங்கிலத்தில் எழுதினார்கள். அதன் கீழே மூவரும் கையொப்பமிட்டு, லண்டனில் நடந்துகொண்டிருந்த வட்ட மேஜை மாநாட்டிற்குத் தந்தி மூலம் அனுப்பிவைத்துள்ளார்கள்.

இந்தியாவின் கடைக்கோடி கிராமமான அதிரையிலிருந்து வந்த அந்தத் தீர்மானம், நம் தேசியத் தலைவர்களும் ஆங்கில ஆட்சியாளர்களும் குழுமியிருந்த அந்த மாநாட்டில் வாசிக்கப்பட, அவர்களின் பதிவேட்டில் இடம்பெற்றது.

இந்தியச் சுதந்திரத்தில் நம் அதிரைக்கும் பங்குண்டு என்பதை உணர்த்தும் இந்த வரலாற்று நிகழ்வை, அண்மையில் நமதூர் எ.எல்.எம். பள்ளி ஆண்டுவிழாவின்போது, அதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ‘அதிரை அறிஞர்’, தமிழ்மாமணி, புலவர், அல்ஹாஜ் அஹமது பஷீர் அவர்கள் வெளியிட்டு, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்கள்.

-அதிரை அஹமது

https://adirainirubar.blogspot.ae/2011/03/blog-post_17.html

Close