Adirai pirai
இந்தியா

5 பைசாவுக்காக 5 லட்சம் செலவு! 41 ஆண்டுகளாக முடிவுறாத வழக்கு! இந்திய நிதித்துறையின் நிலை!

டெல்லியில் வெறும் 5 பைசாவுக்காக கடந்த 41 ஆண்டுகளாக வழக்கு ஒன்று நடந்து வருகிறது. இந்த வழக்கிற்காக சம்பந்தப்பட்ட கண்டக்டரும், டெல்லி போக்குவரத்துக் கழகமும், இதுவரை சுமார் 5 லட்சம் செலவு செய்துள்ளனர்.

டெல்லியில் கடந்த 1973-ம் ஆண்டில் நடத்துநராக பணியாற்றியவர் ரன்வீர் சிங் யாதவ். இவர் சம்பவ தினத்தன்று ஒரு பெண் பயணியிடம் 10 காசுகள் டிக்கெட்டுக்கு, 15 காசுகள் வாங்கியுள்ளார். மீதமுள்ள 5 பைசாவை கணக்கில் காட்டாமல் அவர் வைத்துக் கொண்டார்.

ஆனால், அடுத்த பேருந்து நிறுத்தத்திலேயே பயணச்சீட்டு பரிசோதகர்களிடம் மாட்டிக் கொண்டார் ரண்வீர். இதனால் ரன்வீருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதில், போக்குவரத்துக் கழகத்துக்கு, ரண்வீர் 5 பைசா நஷ்டம் ஏற்படுத்திவிட்டதாகக் கூறி, 1976-ம் ஆண்டு பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால், இதை எதிர்த்து, தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் ரன்வீர்.

இந்த வழக்கில் ரன்வீருக்கு 1990-ம் ஆண்டில் சாதகமான தீர்ப்பு கிடைத்தது. ஆனால், இந்தத் தீர்ப்பை எதிர்த்து, டெல்லி போக்குவரத்துக் கழகம் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

கடந்த ஜனவரி மாதத்தில் இவ்வழக்கில் ரண்பீருக்கு ஆதரவாக தீர்ப்பளித்த டெல்லி உயர் நீதிமன்றம், அவருக்கு நஷ்ட ஈடாக ரூ. 6 லட்சம் வரை வழங்க உத்தரவிட்டது. எனினும், இதை எதிர்த்து, டெல்லி போக்குவரத்துக் கழகம் சார்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இப்படியாக கடந்த 41 ஆண்டுகளாக இந்த வழக்கு முடிந்தபாடில்லை. இந்த வழக்கிற்காக டெல்லி போக்குவரத்துக் கழகமும், ரன்வீரும் இதுவரை சுமார் 5 லட்சம் செலவு செய்துள்ளனர்.

தற்போது 5 பைசா நாணயமே புழக்கத்தில் இல்லாத சூழலில், 41 ஆண்டுகளுக்கு முந்தைய சில்லறை பிரச்சினையால் இன்னமும் நீதிமன்றப் படியேறி வருகிறார் தற்போது 73 வயதாகும் ரன்வீர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy