மதுரை மீனாட்சியம்மன் கோவில் நிலத்தை மீட்ட மருதநாயம் என்னும் முஹம்மது யூசுப் கானின் வீர வரலாறு!

maruthunayagamதமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் பனையூரில்  இந்து – வேளாளர் இனத்தில் பிறந்தவர், மருதநாயகம் . பின் தன்னுடைய இளமைப்பருவத்தில் இஸ்லாமிய மார்க்கத்தை விரும்பி ஏற்று ,’முகமது யூசுப்கான்’ என அழைக்கப்பட்டார். தன் இளமைக்காலத்தில் பிரெஞ்சுக்காரர்களின் படையில் வேலைபார்க்கும் போது தமிழ், பிரெஞ்சு ,போர்த்துக்கீசியம், ஆங்கிலம் , உருது ஆகிய மொழிகளைக் கற்று தேர்ந்தார். 1750 -களில் ஆங்கிலேயருக்கும் ,பிரெஞ்சுக்காரர்களுக்கும் நாடுபிடிக்கும் போர் நடந்தபோது, யுத்தத்தில் முகமது யூசுப்கானின் திறமையைக்கண்டு வியந்த ராபர்ட் கிளைவ், அவரை தன் படையில் இணைத்து,  ஐரோப்பிய முறையில் ராணுவ பயிற்சி கொடுக்க உதவினார்.

1752 -ஆம் ஆண்டு நடைபெற்ற ஆற்காடு முற்றுகையின் போது, முகமது யூசுப்கான் எனும் ‘மருதநாயகம்’ சிறந்து விளங்கவே ,சிப்பாய் படைகளுக்கு தளபதியாகி ,’கான்சாகிப்’ எனும் பட்டம் பெற்றார். மேலும் தன் துணிவான செய்கையால், 1755-ஆம் பாளையக்காரர்களை அடக்கி, கப்பம் வசூல் செய்ய அனுப்பி வைக்கப்பட்டார். கப்பம் சரியாக வசூல் செய்து கொடுத்ததால், 1759-ஆம் ஆண்டு மதுரை -நெல்லையின் கவர்னராக, ஆங்கில அரசில் அங்கம் வகித்தார்.

1758-ல் ஆங்கிலேயருக்கெதிராக சென்னையை முற்றுகையிட்ட பிரெஞ்சுபடைகளை யூசுப்கான் கொரில்லா தாக்குதல் நடத்தி தோற்கடித்தார்.

இதனால் ‘கமாண்டோகான்’ எனும் பதவி உயர்வு பெற்றார். இதற்காக கவர்னர் பதவியில் நீடிக்க வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் ஆங்கிலேயே அரசுக்கு கட்டவேண்டியிருந்தது.  அலுவல் காரணமாக மருதநாயகம் சென்னை சென்றபோது, சில கயவர்கள் மீனாட்சியம்மன் கோவில் நிலங்களை சூறையாடியனர். இதனையறிந்து திரும்பிய மருதநாயகம்,  கயவர்களிடமிருந்து கோவில் நிலங்களை  மீட்டு, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார் .மேலும் பல குளங்கள், கோட்டைகள் ஆகியவற்றை பழுது நீக்கினார் .இதனால் யூசுப்கானுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியது. அதைத்தடுக்க எண்ணிய ஆங்கிலேயே அரசு, ஆற்காட்டு நவாப்பின் பணியாளர்தான் ‘மருதநாயகம்’  என ஆணை பிறப்பித்தது. இதனால் நவாப் மற்றும் ஆங்கிலேயர்கள் மேல் மிகுந்த மனக்கசப்படைந்தார் மருதநாயகம்.

இந்நிலையில் மருதநாயகம் மக்களிடம் பிரிட்டிஷாருக்கு எதிரான உணர்வைத்தூண்டுவதாக குற்றம் சாட்டி ,அவரை கைது செய்ய உத்தரவிட்டது ஆங்கிலேய அரசு .  இதனால் ஆங்கிலேயர்கள் மேல் நம்பிக்கையிழந்த மருதநாயகம்,  தன்னை ‘சுதந்திர ஆட்சியாளன் ‘எனப்பிரகடனப்படுத்திக்கொண்டு,  27,000 வீரர்களை வைத்து படையை  பலப்படுத்தினார். இது அக்காலத்தில் திரட்டப்பட்ட  மிகப்பிரமாண்டமான படைகளில் குறிப்பிடத்தக்கது ஆகும். அதன் பின்னர்  1763 -ஆம் ஆண்டு , மதுரையில் ஆங்கிலேயர் படையை வென்று ஆங்கிலேயர் கொடியை இறக்கி, தனது மஞ்சள் நிறக்கொடியை அக்கோட்டையில் ஏற்றினார் மருதநாயகம்.

இதனால் மருதநாயகத்தை வீழ்த்த  சரியான சமயம்பார்த்த ஆங்கிலேய அரசும், நவாப் அரசும் 1764-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மருதநாயகத்தின் கோட்டையை முற்றுகையிட்டன. இருந்தாலும்  பின் வாங்காமல் அசராமல் போர் புரிந்தன மருதநாயகத்தின் படைகள். பின்னர் தோல்வியிலிருந்து மீள தந்திரமாக யோசித்த ஆங்கிலேய அரசு, மருதநாயகத்தின் கோட்டைக்குச்செல்லும் உணவு, குடிநீரை தடுத்து நிறுத்தினர். இதனால் படைவீரர்கள் சோர்வடைந்தனர்.

இறுதியாக மருதநாயகம் 13-10-1764 -ஆம் நாள் தொழுகையின் போது பிடிபட்டு, அக்டோபர் 16 ஆம் தேதி, அதிகாலை மதுரை -சம்மட்டிபுரத்தில் உள்ள மரத்தில் தூக்கிலிடப்பட்டார். தூக்கிலிடப்பட்டபின்னரும், பல மாயாஜாலங்கள் செய்து உயிர்த்தெழுந்து வந்துவிடுவான் என நம்பிய ஆங்கிலேய அரசு, அவரது உடலை பல பாகங்களாக வெட்டி, பல்வேறு இடங்களில் புதைத்தது.

அவ்வாறு வெட்டப்பட்ட தலையை திருச்சியிலும், கைகளை நெல்லை பாளையங்கோட்டையிலும்,  கால்களை தேனி மாவட்டம் பெரியகுளத்திலும், உடலினை மதுரை -சம்மட்டிபுரத்திலும் அடக்கம் செய்தது.

இதில் அவரின் கால்பகுதி, தேனிமாவட்டம்  பெரியகுளம் வடகரை தர்ஹாவில் புதையுண்டு  இருப்பது, பலரும் இன்னமும் அறியாத  செய்தி. இன்றும் உண்மையின் மிளிர்கல்லாக எஞ்சி இருக்கும், இது போன்ற பல இடங்களை நாமும் பேணி காத்து, பல தலைமுறைகளுக்கு, பல வீரர்களின் உண்மை வரலாற்றைக் கடத்துவோம் .

நன்றி: விகடன்

Close