Adirai pirai
islam இந்தியா

காஷ்மிரில் கண்பார்வைக்காக போராடும் 500 இளைஞர்கள்! ரத்தான 5000 திருமணங்கள்!

imageகாஷ்மீரில் தொடர்ச்சியாக 48 வது நாளாக இன்று ஊரடங்கு உத்திரவு அமலில் இருந்து கொண்டிருக்கிறது. பள்ளிகள், அரசு அலுவலகங்கள் முற்றிலுமாக முடங்கிப் போய் விட்டன. ஜூலை 8 ம் தேதி புர்ஹான் வாணி என்கின்ற 22 வயது இளைஞர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப் பட்ட பின்னர் மூண்ட கலவரம் இன்று வரையில் ஓயவில்லை. இதுவரையில் வரலாற்றில் இல்லாத விதமாக காஷ்மீரில் இருக்கும் ராணுவ படைப்பிரிவின் தளபதி லெஃப்டினெண்ட் ஜெனரல் டி.எஸ். ஹூடா அனைத்து தரப்பினரும், பிரிவனைவாதிகளும், மாணவர்களும் உட்பட உட்கார்ந்து பேசி பிரச்சனைக்குத் தீர்வு காண முன் வர வேண்டும் என்று கூறியது நிலைமை எந்தளவுக்கு மோசமானதாக இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிறது.
காஷ்மீரின் தற்போதய நிலவரம் இதுவரையில் இல்லாத அளவுக்கு அபாயகரமானதாகவும், தனி மனித சோகம் ததும்பி வழிவதாகவும் கூறுகிறார் காஷ்மீரின் மூத்த பத்திரிகையாளரும், ஸ்ரீநகரில் இருந்து வெளிவரும் ”ரைசிங் காஷ்மீர் என்ற ஆங்கில நாளேட்டின் ஆசிரியரும், ”:தி ஹிந்து” ஆங்கில நாளேட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஜம்மு, காஷ்மீர் மாநில செய்தியாளராக பணியாற்றிவருமான ஷூஜாத் புஹாரி. ஒன் இந்தியா சார்பாக ஷூஜாத் புஹாரியிடம் ஆர்.மணி எடுத்த மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி பேட்டி இது;

கேள்வி; தற்போது காஷ்மீரில் நிலைமை எப்படியிருக்கிறது?
ஷூஜத் புஹாரி; கடந்த 70 ஆண்டுகளாக தீர்க்கப் படாமல் இருக்கும் காஷ்மீர் விவகாரத்தின் வரலாற்றில்தான் இன்றைய அமைதியின்மையின், கலவரத்தின் வேர்கள் புதைந்து கிடக்கின்றன. ஆனால் 2008 மற்றும் 2010 கலவரங்களுக்கும் தற்போதய நிலவரத்துக்குமான ஒரு முக்கியமான வேறுபாடு மக்கள் மிகப் பெரியளவில் தற்போது தெருக்களில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள். தற்போதய கலவரம் ஜூலையில் 22 வயது இளைஞர் புர்ஹான் வாணி பாதுகாப்பு படையினரால் கொல்லப் பட்ட பின்னர் உருவானது. இதுவரையில் சுமார் 70 பேர் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகி இருக்கிறார்கள்.

கேள்வி; ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தை ஆளுவது மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) – பாஜக கூட்டணியிலான அரசு. அடிப்படையில் மாநில அரசிடம் என்ன கோளாறு?
பதில்; இன்றைய காஷ்மீர் நிலவரத்துக்கு இந்த கூட்டணியும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப் படுகிறது. டிசம்பர் 2014 சட்டமன்ற தேர்தலில் பாஜக வை ஆட்சிக் கட்டிலின் அருகில் வராமல் தடுப்பதற்கு தங்களுக்கு வாக்களிக்குமாறு பிடிபி வாக்கு கேட்டது. ஆனால் பிடிபி தலைவர் முஃப்தி முஹம்மது சையத், மாநில மக்களின் விருப்பத்துக்கு மாறாக பாஜக வுடன் கூட்டணி வைத்தார். இரண்டு கட்சிகளும் கூட்டணி சேர்ந்த போது செய்து கொண்ட ஒப்பந்தம் (agenda of agreement) என்னவென்றால் காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் பிரிவினைவாத இயக்கமான ஹூரியத் மாநாட்டு கட்சி ஆகியவற்றுடனும் பேசுவது. ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இதில் எந்த முன்னேற்றமும் இல்லை. முஃப்தி முஹ்மது சையத் மனம் வெதும்பி மாண்டு போனார்.

கேள்வி; அரசியல்ரீதியிலான தீர்வுதான் நிரந்தர தீர்வு என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். அரசு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
பதில்; அரசியில்ரீதியிலான தீர்வு என்பது படிப்படியாக, தொடர் பேச்சு வார்த்தையின் மூலம் வர வேண்டும். ஷிம்லா உடன்படிக்கையின் படி காஷ்மீர் விவகாரம் என்பது பாகிஸ்தானுடனான இரு தரப்பு விவகாரம் என்று இந்தியா ஒப்புக் கொண்டிருக்கிறது. காஷ்மீர் இந்தியா வின் ஒருங்கிணைந்த பகுதி என்று இந்தியா கருதினாலும், இந்த விவகாரம் சம்மந்தமாக பாகிஸ்தானுடன் இணைந்துதான் இந்தியா பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும். பாகிஸ்தானுடான தொடர் பேச்சுவார்த்தை மற்றும் காஷ்மீரில் இந்தியாவின் ஆட்சியை கேள்வி கேட்பவர்களுடனும் இந்தியா தொடர் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். பிரச்சனைக்கு தீர்வு காண இந்தியா உண்மையிலேயே விரும்பினால் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும். 2003 ல் இந்தப் பாதையை அடல் பிஹாரி வாஜ்பாய் நமக்கு காட்டினார். ஜெனரல் முஷ்ரஃபுடன் இணைந்து வாஜ்பாய் தொடங்கிய முயற்சிக்கு களத்தில் நல்ல பயன் இருந்தது.
கேள்வி; சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரில் ராணுவத்துக்கு தலைமை தாங்கும் லெஃப்டினெண்ட் ஜெனரல் டி.எஸ். ஹீடா அனைத்து தரப்பினரும், பிரிவினைவாதிகள், மாணவர்கள் உட்பட உட்கார்ந்து பேசி பிரச்சனைக்கு தீர்வு காண முன்வர வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்; இது வரவேற்கத் தக்கது. மத்திய, மாநில அரசியல் தலைமை பேச வேண்டியதை அவர் பேசியிருக்கிறார். காஷ்மீரில் நிலைமை எந்தளவுக்கு தற்போது அபாயகரமாக இருக்கிறது, துப்பாக்கிகளால் நீங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என்பதை தளபதியின் பேச்சு எடுத்துக் காட்டுகிறது. இதனைத் தான் நாங்களும் வலியுறுத்துகிறோம், அனைத்து தரப்பினருடனுப் பேசுங்கள் என்றுதான் கூறுகிறோம்.
கேள்வி; பிரதமர் மோடி சமீபத்தில் காஷ்மீர் விவகாரம் சம்மந்தமாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். பின்னர் உமர் அப்துல்லா தலைமையிலான காஷ்மீரின் அனைத்து கட்சிக் குழு மோடியை சந்தித்து பேசியது. ஹூரியத் மாநாட்டுக் கட்சி தவிர அனைத்து தரப்பினருடனும் பேச தயார் என்று கூறியதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்; மோடி அந்தக் கூட்டத்தில் காஷ்மீர் பற்றி அதிகம் கவனம் செலுத்தவில்லை. மாறாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் மற்றும் பலுச்சிஸ்தான் பற்றித்தான் அதிகம் பேசியிருக்கிறார். காஷ்மீர் இந்தியா வின் ஒரு பகுதி என்பதை ஏற்க மறுக்கும் அமைப்புகளுடனும் இந்தியா பேச வேண்டும். வேறு மாற்று வழியில்லை. 2003 – 2004 ம் ஆண்டுகளில் அப்போதய வாஜ்பாய் அரசு ஹூரியத் மாநாட்டுக் கட்சியுடன் பேசியதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

கேள்வி; காஷ்மீர் விவகாரத்தில் வாஜ்பாயின் அணுகுமுறைக்கும், மோடியின் அணுகுமுறைக்கும் என்ன வேறுபாடு காண்கிறீர்கள்?
பதில்; நீங்கள் வாஜ்பாய் அவர்களையும் மோடியையும் இதில் ஒப்பிட முடியாது. தோற்றுப் போன ஒரு பாதையிலிருந்து விலகி வாஜ்பாய் முன்னேறிச் சென்றார். நான் ஏற்கனவே சொல்லியது போல பாகிஸ்தான் மற்றும் காஷ்மீருடனான வாஜ்பாயின் அணுகுமுறை களத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்தது. மோடி வாஜ்பாயின் அணுகுமுறையை தான் பின்பற்றுவதாகக் வார்த்தைகளால் கூறுகிறார் ஆனால் நடைமுறையில் எதுவும் நடக்கவில்லை.
கேள்வி; மோடி சுதந்திர தின உரையில் பலுச்சிஸ்தான் விவகாரத்தை எழுப்பினார். பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தைக்கு இடமில்லை என்றார். ஆனால் அதே நாள் காஷ்மீர் முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி பாகிஸ்தானுடன் இந்தியா பேச வேண்டும் என்கிறார். இந்த முரண்பாட்டை எப்படி புரிந்து கொள்ளுவது?
பதில்; இதனைத் தான் நாங்கள் தொடர்ந்து சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறோம். இரண்டு கட்சிகளும் கூட்டணி கண்டு அரசு அமைத்த போது போட்ட ஒப்பந்தம் பிரச்சனையை தீர்க்க தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் பிரிவினை வாத இயக்கங்களுடனும் பேசுவது என்பது. ஆனால் நடைமுறையில் இருவரும் வெவ்வேறு குரலில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
கேள்வி; பாஜக வுடன் கூட்டணி வைத்த போது முஃப்தியும், மெஹ்பூபா வும் சொன்னது மத்திய நிதி காஷ்மீருக்கு அதிகமாக கிடைக்கும் என்பது. அந்த நிதி கிடைத்ததா?
பதில்; நடைமுறையில் மிஞ்சியது ஏமாற்றம்தான். வெள்ளத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கான, ஒப்புக் கொண்ட நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. ஜம்மு, காஷ்மீர் மாநிலத்துக்கென்று சிறப்பு நிதி எதுவும் வழங்கப்படவில்லை. எல்லாம் காகிதத்தில் தான் இருக்கிறது.
கேள்வி; தற்போதய பிடிபி – பாஜக அரசு எத்தனை நாள் தாக்குப் பிடிக்கும்? நாளும் அதிகரித்து வரும் வன்முறையால் மெஹ்பூபா அரசு கவிழ வாய்ப்பு உண்டா?
பதில்; இதற்கு பதில் சொல்லுவது கடினம். எவ்வளவு நாட்கள், நிலைமை இப்படியே நீடித்தால் மெஹ்பூபா தாக்குப் பிடிப்பார் என்றே எனக்குத் தெரியவில்லை. ஆனால் அரசு நீடித்தாலும், பிடிபி தன்னுடைய அரசியல் செல்வாக்கை படு வேகமாக இழந்து கொண்டிருப்பதை மெஹ்பூபா வால் தடுக்க முடியாது. காரணம் உயிரிழப்புகளை தடுக்க தவறியது பிடிபி யின் அரசியல் செல்வாக்கை கபளீகரம் செய்து கொண்டுள்ளது என்பதே யதார்த்தம்.
கேள்வி; உடனடியாக காஷ்மீருக்கு அனைத்து கட்சி குழு ஒன்று போக வேண்டும் என்கிறார் ப.சிதம்பரம்?
பதில்; அனைத்துக் கட்சி குழு வருவதால் பலன் ஒன்றுமில்லை. கடந்த காலங்களிலும் அனைத்து கட்சி குழுக்கள் காஷ்மீரில் பதற்றத்தை தணிக்க வந்தது உண்டு. ஆனால் ஒரு பிரயோசனமும் இல்லை. விவகாரம் என்னவென்றால் 1947 முதல் காஷ்மீர் மக்களுக்கு சுயாட்சி (autonomy) வழங்குவது தொடர்பாக இந்தியா கொடுத்த ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை.
கேள்வி; பெல்லட் குண்டுகளால் அதிகப்படியான மக்கள் பாதிக்கப் பட்டிருப்பதாக சொல்லப் படுகிறது. உண்மையான நிலவரம் என்ன?
பதில்; 2010 ல் பெல்லட் துப்பாக்கிகள் அறிமுகப் படுத்தப் பட்டன. பெல்லட் குண்டுகளால் தற்போதய கலவரத்தில் 200 க்கும் மேற்பட்ட இளைஞர்களும், இளம் பெண்களும் கடுமையாக கண் பார்வை பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். 10 பேர் முற்றிலுமாக குருடாகி விட்டார்கள். 40 சதவிகிதத்தினருக்கு 20 சதவிகித பார்வை நிரந்தரமாக போய் விடும் என்று மருத்துவர்கள் அஞ்சுகின்றனர். மற்றவர்களுக்கு ஓரளவுக்காவது பார்வை கிடைக்க சில அறுவை சிகிச்சைகள் தேவைப் படும் என்று மருத்துவர்கள் சொல்லுகின்றனர். ஜம்மு காஷ்மீர் உயர்நீதி மன்றம் பெல்லட் துப்பாக்கிகளை உடனடியாக தடை செய்யுமாறு மாநில அரசை கேட்டுக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதிலுமே, ஆர்பாட்டத்தில் ஈடுபடும் பொது மக்களை கட்டுப்படுத்த பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்தவது தடை செய்யப் பட்டிருக்கிறது.
கேள்வி; மீடியாக்கள் என்ன மாதிரியான சூழ்நிலையில் காஷ்மீரில் இருந்து கொண்டிருக்கிறது?
பதில்; ஜூலை 16 ம் தேதி இரவு பல பத்திரிகை அலுவலகங்களிலும் ரெய்டு நடத்தப் பட்டது. ஐந்து நாட்கள் எந்த பத்திரிகையும் வரவில்லை. குறைந்த அளவே இண்டர்நெட் இணைப்புகள் இயங்கின. செல்ஃபோன்கள் பல நாட்கள் இயங்கவில்லை. இது எங்களுக்கு வழக்கமான ஒன்றுதான். தொடர்ச்சியாக நாங்கள் அச்சுறுத்தலுக்கும், மிரட்டலுக்கும், வழக்குகளுக்கும், கைது நடவடிக்கைகளுக்கும் ஆட்பட்டுக் கொண்டிருக்கிறோம். தகவல் தொடர்பு முற்றிலமாக தடை செய்யப் பட்டது. 1990 முதல் இதுவரையில் 13 பத்திரிகையாளர்கள் ஆர்பாட்டக் கார ர்களாலோ அல்லது போலீசாராலோ சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். அரசின் அத்துமீறலை எதிர்த்து எழுதினால் எங்கள் மீது ”தேச துரோகிகள்” என்ற பட்டம் விழும். அரசு சாராத, பிரிவினைவாத சக்திகளின் வன்முறையை வெளிச்சம் போட்டுக் காட்டினால், ”இயக்கத்துக்கு எதிரானவர்கள்”, ”கூட்டாளிகள்” (collaborators) என்ற பட்டப் பெயர் வரும். ஆகவே போராடிக் கொண்டிருக்கும் இரண்டு தரப்புக்கும் இடையில் நாங்கள் மாட்டிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் யதார்த்தம்.
கேள்வி; 47 நாள் ஊரடங்கு, குழந்தைகளின் மன நிலை மற்றும் கல்வியை எப்படி பாதித்துள்ளது?
பதில்; குழந்தைகளின் கல்வி, மன நிலை கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கிறது. 47 நாட்கள் வீட்டிலேயே முடங்கி கிடப்பது என்பது எத்தகையை உளவியல் பாதிப்பை, குறிப்பாக குழந்தைகளிடம் ஏற்படுத்தும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். இது ஒரு நீண்ட நாள் பிரச்சனைதான். சில சமயங்களில் பிரிவினைவாதிகள் அழைப்பு விடுக்கும் முழு அடைப்பு போராட்டமும், கல்வி நிலையங்கள் பல நாட்கள் மூடப்படுவதில் போய் முடிகின்றன.
கேள்வி; ஏராளமான திருமணங்கள் நின்று போனதாகவும் செய்திகள் வந்துள்ளன?
பதில்; உண்மைதான். இது காஷ்மீரில் திருமணக் காலம். சுமார் 5,000 க்கும் மேற்பட்ட திருமணங்கள் ரத்தாகியிருக்கின்றன அல்லது தள்ளிப் போடப் பட்டிருக்கின்றன அல்லது மிகவும் எளிமையாக நடத்தப் பட்டிருக்கின்றன. காஷ்மீர் பத்திரிகைகளில் திருமணங்களுக்கு கொடுத்த அழைப்பிதழை திரும்ப பெற்றுக் கொள்ளுவதாகவும், திருமணங்களுக்கு வர வேண்டாம் என்றும் நிரம்ப விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. குடும்ப உறவுகளில் இது ஏற்படுத்தும் நெருக்கடி யானது சோகமானது.
கேள்வி; ஒரு பத்திரிகையாளராக காஷ்மீருக்கு வெளியிலிருக்கும் இந்திய ஊடகங்களிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
பதில்; இன்று காஷ்மீரில் ”பத்திரிகை அவசரநிலை” (press emergency) அறிவிக்கப் பட்டிருக்கிறது. சில தொலைக்காட்சிகளில் நடக்கும் விவாதங்கள் அளவுக்கதிகமான துவேஷத்தை சிறுபான்மையின மக்கள் மீது குறிப்பாக காஷ்மீரிகள் மீது ஏவிக் கொண்டிருக்கின்றன. அதீ தீவிர தேசீயவாதம் உசுப்பி விடப்பட்டுக் கொண்டிருக்கிறது. சில தொலைக் காட்சிகளின் நடத்தை பத்திரிகை தர்மத்தின் அடிப்படையையே மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறது. எல்லா ஜனநாயக பாதையும் அடைக்கப் பட்டதால்தான், மக்கள் ஆயுதந் தாங்கிய ஒரு கமாண்டரின் பின்னால் அணி திரள வேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டது. காஷ்மீர் மக்களின் குரலை கேட்குமாறு மத்திய அரசை தங்கள் செய்திகள் மூலம் இந்திய ஊடகங்கள் நிர்ப்பந்திக்க வேண்டும். போரைச் சூழலை உருவாக்குவது போல செய்தி வெளியிடும் ஊடகங்களின் குரலுக்கு பலியாகி விட வேண்டாம் என்று இந்திய ஊடகங்களை நான் கேட்டுக் கொள்ளுகிறேன். காஷ்மீர் பிரச்சனை அடிப்படையில் ஒரு அரசியல் பிரச்சனை. ஆகவே இதற்கு ஒரு அரசியல் தீர்வை எட்ட மத்திய அரசை உந்தித் தள்ளும் விதத்தில் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டும் என்பதே எங்களுடைய ஆழ் மனதின் கோரிக்கை.

-one india tamil