காஷ்மிரில் பெல்லட் குண்டுகளுக்கு பதிலாக மிளகாய் பொடி குண்டுகள் பயன்படுத்த முடிவு

காஷ்மீரில் கலவரத்தை கட்டுப்படுத்த சிஆர்பிஎப், பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்துவதற்கு பதில் மிளகாய் பொடி மற்றும் வனிலைல் அமைட் ஆசிட் கலந்த கையெறி குண்டுகளை பயன்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையை சிஆர்பிஎப் விரும்பவில்லையாம். காஷ்மீரில் நடந்து வரும் கலவரங்களின் போது சிஆர்பிஎப் படையினர் பெல்லட் துப்பாக்கிகளை அதிகம் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. பெல்லட் துப்பாக்கியால் பலருக்கு கண் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

இவர்களில் 14 சதவீதம் பேர் 15 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அண்மையில் காஷ்மீர் எதிர்க்கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கையும் வைத்தார். இந்நிலையில் கலவரத்தை கட்டுப்படுத்தி அமைதியை ஏற்படுத்த காஷ்மீர் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பெல்லட் துப்பாக்கிகளுக்கு பதிலாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்று உறுதியளித்திருந்தார். இதனையடுத்து, பெல்லட் துப்பாக்கிகளுக்கு பதிலாக மாற்று என்ன செய்வது என்பது குறித்து ஆராய கமிட்டி ஒன்றை உள்துறை அமைச்சம் ஏற்படுத்தியது.

அது எடுத்த முடிவின்படி, மிளகாய் பொடி கலந்த கையெறி குண்டை, பெல்லட் துப்பாக்கிகளுக்கு பதிலாக சிஆர்பிஎப் படையினர் பயன்படுத்த வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சிஆர்பிஎப் படையினர் பெல்லட் துப்பாக்கிகளை கைவிட விரும்பவில்லை எனக் கூறியுள்ளனர். பெல்லட் துப்பாக்கிகள்தான் இருப்பதிலேயே மிகக் குறைந்த பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய ஆயுதம் என்றும், இதனை மாற்றும் முடிவு என்பது சிஆர்பிஎப்க்கு சாதகமானது அல்ல என்றும் சிஆர்பிஎப் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், காஷ்மீர் கலவரத்தை கட்டுப்படுத்த முதலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். பின்னர் தான் பெல்லட் துப்பாக்கிகளை மாற்றுவது குறித்து பேச வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மிளகாய் பொடி கலந்த கையெறி குண்டை பயன்படுத்த சிஆர்பிஎப் படையினர் புதிதாக பயிற்சி எடுக்க வேண்டும்.

அதற்கான காலம் எடுக்கும். கலவரம் வெடித்துள்ள காஷ்மீரில் புதிய கையெறி குண்டை பயன்படுத்த தொடங்குவதிலேயே சிக்கல்கள் இருக்கின்றன என்றும் சிஆர்பிஎப் படையினர் தெரிவித்துள்ளனர். புதியதாக சொல்லப்படும் மிளகாய் பொடி கலந்த கையெறி குண்டை எறியும் போது, குண்டு மேலே படும் நபருக்கு பொறி கலங்கி உடம்பெல்லாம் எரியத் தொடங்கும். இது தற்காலிகமானதுதான் என்றாலும் கலவரத்தை கட்டுப்படுத்த இது சரியானது என்று சொல்லப்படுகிறது. மேலும் இது கண்ணீர் புகையை விட பாதுகாப்பானது. என்றும் உள்துறை அமைச்சம் அமைத்த கமிட்டி கூறுகிறது

Close