காஷ்மிரில் ஏழை குடும்பத்தில் பிறந்து ஐ.ஏ.எஸ் ஆன சௌகத் அஹமது (வீடியோ இணைப்பு)

காஷ்மீர் இளைஞர் ஒருவர் இளம் வயதில் ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று தனது சேவையால் மக்களை கவர்ந்து வருகிறார்.

ஜம்மு காஷ்மிர் மாநிலம் பராமுல்லா மாவட்டத்தை சேர்ந்தவர் சௌகத் அஹமது பர்ரே. மிகவும் பிற்படுத்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவரான இவர், தனது பள்ளிப்படிப்பை அரசு பள்ளியில் முடித்தார். பின்னர் கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரிவில் மருத்துவ படிப்பை நிறைவு செய்த இவர் மக்கள் சேவையின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக அரசு பணிகளில் சேர்வதற்க்கான முயற்சியில் இறங்கினார். இதனை தொடர்ந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தேர்ந்தெடுக்கும் யூ.பி.எஸ்.சி. தேர்வுக்கு ஆயத்தமாக துவங்கினார். ஏழை குடும்பத்தை சேர்ந்த இவருக்கு ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்க வசதியில்லாத காரணத்தால், தனியாக இந்த தேர்வுக்கான பயிற்சியில் ஈடுபட்டார்.

இரவு பகல் பாராமல் கடினமாக விடா முயற்சியோடு படித்த இவர் இந்திய அளவில் 256 வது இடத்தை பிடித்து ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சங்ரூர் மாவட்டத்தில் சப் டிவிஷனல் மஜிஸ்ட்ரேடாக நியமிக்கப்பட்டுள்ள இவர் நேர்மையான முறையில் மக்களுக்கு தனது துறையின் மூலமாக பல்வேறு உதவிகளை செய்து, மக்கள் மனதை கவர்ந்துள்ளார். இது குறித்து சௌகத் அஹமது கூறுகையில் காஷ்மிரில் உள்ள இளைஞர்கள் அனைவரும் ஒரே நோக்கத்தை கொண்டவர்கள் இல்லை, பல இளைஞர்கள் கல்வியிலும், சமுகத்திலும் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்காக கடினமான முறையில் உழைத்து வருகின்றனர் என்றார்.

Close