சென்னை விமான நிலையத்தில் விபத்து! விமானி படுகாயம்!

சென்னை விமான நிலையத்தில் 68வது முறையாக விபத்து ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தில் உள்ள மேற்கத்திய கழிவறை இடிந்து விழுந்துள்ளது. இதில் மும்பை பயணிக்கு இடுப்பில் படுகாயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.

இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இங்கு இதுவரை 15 முறை மேற்கூரைகளும், 24 முறை தானியங்கி கண்ணாடி கதவுகளும், 20 முறை தடுப்பு கண்ணாடிகளும், 5 முறை சுவற்றில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்களும், ஒருமுறை விளக்கு கண்ணாடியும், ஒரு முறை அறிவிப்பு பலகை டி.வி.யும் உடைந்து விழுந்து உள்ளன. இவ்வாறு நடந்த 66 விபத்துகளில் 13 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

கடந்த வாரம் 67வது முறையாக பெரிய விபத்து ஏற்பட்டது. மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் புறப்பாடு மற்றும் வருகை பகுதிகளுக்கு பயணிகள் செல்ல லிப்ட் வசதி உள்ளது. இங்குள்ள முதல் தளம் பகுதியில் லிப்ட் அறையின் சுவற்றில் சலவை கற்கள் பதிக்கப்பட்டு உள்ளன.

2 அடி அகலமும் 7 அடி நீளமும் கொண்ட இந்த கற்களில் 5 கற்கள் திடீரென உடைந்து விழுந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

இன்று காலையில் 68வது விபத்து நிகழ்ந்துள்ளது. உள்நாட்டு முனையத்தில் மேற்கத்திய கழிவறை உடைந்து விழுந்துள்ளது. மும்பையில் இருந்து சென்னை வந்த பயணி, கழிவறைக்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் கழிவறை விழுந்து உடைந்தது. இதில் கீழே விழுந்த பயணிக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பயணிக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். கழிவறை இடிந்து விழுந்த சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல ஆயிரம் கோடி செலவு செய்து கட்டப்பட்ட விமான நிலையத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுவது ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகி வருகிறது. விரைவில் 100 விபத்து ஏற்பட்டு பலரும் போஸ்டர் ஒட்டி கொண்டாடினாலும் ஆச்சரியமில்லை.

Close