கால் ஊனமுற்ற நிலையில் பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வெற்ற தமிழக வீரர் மாரியப்பன்

imageபாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இதே பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் இந்தியா தட்டிச் சென்றது. இந்திய வீர் வருண் சிங் பாடி வெண்கலம் வென்றார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்து வருகிறது. இதில் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.89மீ., உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இது ரியோ பாராலிம்பிக்கில் இந்தியா பெறும் முதல் பதக்கம். இவர் தமிழகத்திலுள்ள சேலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்துக்கு பெருமை மாரியப்பன்

சேலத்தில் இருந்து 50 கி.மீ., தூரத்தில் உள்ள பெரியவடுகம்பட்டி மாரியப்பனின் சொந்த ஊர். ஒரு நாள் காலை பள்ளிக்கு செல்வதற்காக சாலையோரம் சென்று கொண்டிருந்தான் மாரியப்பன். அப்போது அவன் வயது ஐந்து. அந்த வழியாக வந்த லாரி, மாரியப்பன் மீது மோத, மாரியப்பனின் வலது கால் நசுங்கியது. ‘டிரைவர் குடிபோதையில் இருந்ததாக சொன்னார்கள். என்ன சொல்லி என்ன பயன். மகனின் கால் போய் விட்டதே’ என்று சொல்லும் மாரியப்பனின் தாய் காய்கறி விற்றுப் பிழைப்பவர். மகனின் மருத்துவ செலவுக்காக வாங்கிய ரூ.3 லட்சம் கடனை இன்னுமும் கட்டி வருகிறார்.

கால் இல்லை என்பதற்காக மாரியப்பன் முடங்கிவிட வில்லை. உயரம் தாண்டுதலில் முழு மூச்சில் ஈடுபட்டார். ‘ஆரம்பத்தில் என் நண்பர்கள் என்னால் தாண்ட முடியும் என நம்பவில்லை. முதல் முறையாக தாண்டியதும் அப்படியே அதிர்ச்சியடைந்தனர். அதன்பின், நான் பங்கேற்ற மாவட்ட அளவிலான போட்டிகளில் எல்லோரும் ஆதரவு அளிக்கத் துவங்கினர்’ என்று சொல்லும் அந்த இளைஞனின் வயது 20.

2013ல் நடந்த தேசிய பாரா அத்லெடிக் சாம்பியன்ஷிப்பில் மாரியப்பன் தாண்டிய விதம், கோச் சத்யநாராயணனுக்குப் பிடித்துப் போக அன்று முதல், மாரியப்பனை சார்ஜ் எடுத்துக் கொண்டார். பெங்களூருவில் வைத்து முழு மூச்சாக பயிற்சி கொடுத்தார். இதன் விளைவாக, துனிஸியாவில் நடந்த ஐபிசி கிராண்ட் பிரிக்ஸ் தொடரில் 1.78 மீ., உயரம் தாண்டி, ரியோ பாரா ஒலிம்பிக் போட்டிக்கான டிக்கெட்டை புக் செய்தார்.

Close