ராம்குமார் மரணம்!

மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சென்னை புழல் சிறையில் இன்று தற்கொலை செய்து கொண்டதாக சிறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ராம்குமாரின் உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு ராம்குமாரின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இதனையடுத்து, ராம்குமாரின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த மென்பொறியாளர் சுவாதி கடந்த ஜூன் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை இன்னும் சில தினங்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ராம்குமார் இன்று புழல் சிறையில் உள்ள மின் வயரை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை என அவரது வழக்கறிஞர் ராமராஜன் தெரிவித்துள்ளார். தற்கொலை செய்துகொண்டதாக சித்தரிக்க போலீசார் முயற்சிப்பதாகவும் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

Close