மலிவுபுரமா? மவுலிபுரமா?

”அண்மையில் சென்னையில் இடிந்து விழுந்தது பலமாடிக் கட்டிடம்” செய்தி
பொலிவு தருவதாம் பலமாடி
பொழுதில் விழுவது கலையாகி
மலிவு புரமென உருவாகி
மனித உயிரெலாம் மலிவாகி!

மணலும் தரமிலை விலைபேசும்
மனமும் சரியிலை பணமாகி
பிணமும் குவிதலே நிலையாகி
பிழைகள் செய்வது  பெரிதாகி!


விலையும் கிடுகிடு உயர்வாகி
விற்று வருவது தொழிலாகி
கொலையும் செய்திடும் நிலைபோல
குழியில் புதையுதே உயிர்யாவும்!


கடமை தவறிய அதிகாரம்
கலவை சிதறிய சதியாகும்
மடமை இதுவென புரியாமல்
மனித உயிர்களை மதியாமை!

”இடியும் விழுவது இயல்பாகும்:
இதுவும் தருவது இடிபாடு”
மடியில் பணமதை நிறைவாக
வளரும் நிலையிலும் குறைபாடு!

மனிதம் உழலுது நிஜமாக
மனமும் உதவுது பெரிதாக
புனிதம் பெறுவது இவராலே
பொழுதில் விரைவது அரிதாகும்!

:”கவியன்பன் “ கலாம்

 Close