முத்துப்பேட்டையில் பதற்றம்! சிறையிலிருந்து ஜாமினில் வந்த பா.ஜ.க தொண்டர் தற்கொலை!

img_5872திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த பேட்டை சன்னதி தெருவை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்த மத போதகர்கள் செங்குட்டுவன், கோபி, சேகர், மணி ஆகிய 4 பேரும் கடந்த 19ம் தேதி இரவு கணேசனின் வீட்டிற்கு வந்து ஜெபம் செய்தனர். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து காரில் புறப்பட்டனர். கோவிலூர் என்ற இடத்தில் மர்ம நபர்கள் காரை வழிமறித்து அடித்து உதைத்தனர். மத போதகர்களையும் கல் வீசி தாக்கினர். இதில் அவர்கள் 4 பேரும் படுகாயமடைந்தனர்.

இது குறித்து அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் டிஎஸ்பி அருண் தலைமையில் போலீசார் பேட்டை கிராமத்திற்கு சென்று சேகர் மகன் சிவசங்கர்(18), முருகானந்தம்(32), வெற்றிச்செல்வம்(24), விக்னேஷ்(20) ஆகிய 4 பேரையும் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு டிஎஸ்பி மற்றும் போலீசார் 4 பேரையும் கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. இதனால் சிவசங்கரின் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். நேற்று முன்தினம் இரவு 4 பேரும் நிபந்தனை ஜாமீனில் வெளி வந்தனர். வீட்டிற்கு வந்ததில் இருந்து சிவசங்கரை பார்த்து அவரது குடும்பத்தினர் கண்ணீர் வடித்தபடி இருந்தனர்.

நேற்று நிபந்தனை ஜாமீனுக்காக முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட்டு உள்ளார். இன்று காலை வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், டிஎஸ்பி(பொ) தினகரன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட சிவசங்கர் பாரதியஜனதா தொண்டர் ஆவார். அவர் தற்கொலை செய்து கொண்ட தகவலறிந்த பாஜ மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர்் பேட்டை சிவா ஆகியோர் சென்று சிவசங்கரின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர். இதனிடையே முத்துப்பேட்டையில் என்னேரமும் கலவரம், வன்முறை வெடிக்கலாம் என்பதால் அங்கு வெளியூரில் இருந்து யாரும் ஊருக்குள் வரவேண்டாம் என்று முத்துப்பேட்டையை சேர்ந்தவர்கள் வாட்ஸ் அப் சமுக வலைதளங்களில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நன்றி: தினகரன்

Close