வாப்பா ஒரு கட்சி, மகன் வேறு வேறு கட்சி! காக்கா ஒரு கட்சி, தம்பி வேறு கட்சி! – சிதையும் குடும்பங்கள்

img_5881ஒவ்வொரு வருடமும் வந்து போகும் பண்டிகை திருவிழாக்களில் ஆங்காங்கே சிதறி கிடக்கும் குடும்ப உறவுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து குதூகலிக்கும் சூழலை 5 வருடத்திற்கு ஒருமுறை வந்து போகும் தேர்தல் திருவிழா சிதைத்து விடுகிறது.

மாமன் மச்சான் உறவுகளை கூட வேட்பாளர் என்ற பெயர் தாங்கி ஆயுதம் கீறி கிழித்து விடுகிறது.

ஒரே வீட்டில் அண்ணன் தம்பிகள் வெவ்வேறு கட்சிகளின் வேட்பாளர்களாக களம் காணும் பிரிவினை என்னும் அதிசயங்கள் நிகழும் களமே தேர்தல் திருவிழா.

எந்த முறையும் இல்லாமல் இந்த முறை உள்ளாட்சிகளில் 50% விழுக்காடு இட ஒதுக்கீடு பெண்களுக்கு வழங்கப்பட்டு விட்டதால்…வேட்பாளர் பஞ்சம் மேலோங்கும் என்ற கற்பனை கனவை நிர்மூலமாக்கி விட்டது இன்றைய தேர்தல் திருவிழா.

400 ஓட்டுகள் உள்ள வார்டுகளில் கூட 12 பேர் களம் காணும் அரசியல் திருவிழா இது.

விலை மதிக்க முடியாத வாக்குரிமை என்னும் ஜனநாயகத்தை பணம் கொடுத்து விலை நிர்ணயம் செய்து விட்ட ஊழல் அரசியல் வியாதிகளின் பிடியில் சிக்கிவிட்ட சுயநலவாதிகளின் போர் முரசு கொட்டும் இடமாய் காட்சி தருகிறது தேர்தல் திருவிழா.

மக்களால் உள்ளாட்சி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகத்தை மாற்றி கவுன்சிலர்களால் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் பணநாயக முறையே தற்போது குதிரை பேரத்தை நோக்கிய பயணத்தை வாக்காளர்களிடமும் வேட்பாளர்களிடமும் உருவாக்கி விட்டது தேர்தல் திருவிழா.

ஓட்டுக்கு 300 ரூபாய் என்ற விலை கொடுத்து 45 ஆயிரம் செலவில் 150 ஓட்டுக்கள் பெற்றால் கூட வார்டில் வெற்றி பெற்று விடலாம் என்ற கணக்கின் படி களம் காணும் சில வேட்பாளர்கள், சேர்மன் தேர்வில் இரண்டு லட்சம் விலை பேசி, போட்ட காசை திருப்பி எடுத்து விடுவோம் என்ற கனவில் மிதக்கும் தேர்தல் திருவிழா இது.

காலமெல்லாம் மக்கள் பணி செய்து வரும் பொதுநல ஊழியர்கள் தங்களுக்கான அரசியல் அங்கீகாரம் கிடைத்து விடாதா?என்ற எதிர்பார்ப்பில் களம் காணும் இந்த தேர்தல் திருவிழா அவர்களுக்கு வெற்றியை கொடுக்குமாயின் அதுவே அர்த்தமுள்ள திருவிழாவாகும்.

லஞ்சம்,ஊழல் என்னும் அரக்க குணம் கொண்ட சந்தர்ப்பவாதிகள் வெற்றி பெறும் திருவிழா என்றால்….இது ஜனநாயகத்தை கொல்லும் பணநாயக திருவிழாவாகும்.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி.

Close