மலேசிய விமானம் வெடித்து 298 பேர் பலியானது எப்படி???

    

  
     உக்ரைன் வான் பகுதியில் 298 பேருடன் சென்ற மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
நெதர்லாந்தில்
உள்ள ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து நேற்று கோலாலம்பூர் நோக்கி
மலேசியாவுக்கு சொந்தமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சென்று கொண்டிருந்தது.
உக்ரைனுக்கு கிழக்கே ரஷ்ய ஆதரவு கிளர்ச்சி படையினர் சண்டையிட்டு வரும்
பகுதிக்கு மேலே பறந்த போது திடீரென வெடித்து சிதறியது. ரஷ்ய எல்லையில்
அமைந்துள்ள ஹிராபோவ் என்ற கிராமத்தில் உடல்கள் சிதறி கிடப்பது
தெரியவந்துள்ளது. இது ரஷ்ய ஆதரவு கிளர்ச்சி படையினர் வசம் உள்ள
பகுதியாகும். தற்போது இந்த பகுதியில் விமான மீட்பு பணிகளை நடத்துவதற்கு
உதவியாக 3 நாட்கள் போர் நிறுத்தத்தை கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

போயிங்
777,200இஆர் ரகத்தை சேர்ந்த இந்த விமானத்தின் பாகங்கள் பல கிலோ மீட்டர்
தொலை வுக்கு சிதறி கிடக்கின்றன. உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு
சிதறி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு கடும் சண்டை நடந்து
வருவதால், மீட்பு படையினர் வெள்ளை கொடிகளை ஏந்தி சென்று உடல்களை மீட்டு வர
வேண்டிய நிலை உள்ளது. மலேசிய விமான போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில்,
ஆம்ஸ்டர்டாமில் இருந்து 12.15 மணிக்கு புறப்பட்ட விமானம் சரியாக
வந்திருந்தால் வெள்ளிக்கிழமை காலை கோலாலம்பூர் வந்திருக்க வேண்டும். ஆனால்
298 பேருடன் கிளம்பிய அந்த விமானம் உக்ரைன்,ரஷ்ய எல்லை யில் தமக்
வான்வெளியில் வந்து கொண்டிருந்த போது தொடர்பை இழந்தது என்று தெரிவித்தனர்.
உக்ரைன் உள்துறை அமைச்சரின் செயலாளர் ஆன்டன் கெராஷென்கோ கூறுகையில்,
‘விமானம் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, பக் லாஞ்சர்
மூலமாக செலுத்தப்பட்ட ஏவுகணை மூலம் விமானம் சிதறடிக்கப்பட்டுள்ளது.

எனவே
விமானத்தின் பாகங்களும், உடலின் பாகங்களும் 33 ஆயிரம் அடி உயரத்தில்
வெடித்து சிதறி தூள் தூளாக விழுந்துள்ளன. இதுகுறித்து நிபுணர்களின்
புலனாய்வு அறிக்கை தயார் செய்யப்பட்ட பிறகே உண்மையான நிலை தெரிய வரும்‘
என்றார். உயிரிழந்த விமான பயணிகளின் உறவினர்கள் கோலாலம்பூர் மற்றும்
ஆம்ஸ்டெர்டாம் விமான நிலையங்களில் குவிந்துள்ளனர். பயணிகளின் தகவல்களை
தரும்படி உறவினர்கள் கண்ணீருடன் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில்
ஈடுபட்டுள்ளதால் விமான நிலையங்கள் சோகத்துடன் காட்சியளிக்கின்றன. கடந்த
மார்ச் 8ம் தேதி 239 பேருடன் கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நோக்கி சென்ற
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமானது. நான்கு மாதங்களுக்குள் மீண்டும்
மலேசி யன் ஏர்லைன்ஸ் விமான தாக்குதலில் 298 பேர் கொல்லப்பட்ட சம்பவம்
மலேசிய அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உக்ரைன் வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை

மலேசிய
விமான தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து உக்ரைன் வான்வெளியில் சர்வதேச
விமானங்கள் பறக்க வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பெரும்பாலான
ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு இது எளிதான வழி என்பதால் சர்வதேச
விமானங்கள் இந்த வழியை பயன்படுத்தி வந்தன. தற்போது உக்ரைன் விவகாரம்
தீவிரமாகி உள்ளதால் அப்பகுதியின் வழியாக செல்ல வேண்டாம் என அமெரிக்க
விமானங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதே போல் உக்ரைன் வான்வெளியில்
பறக்க வேண்டாம் என இந்திய விமானங்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஐரோப்பா அல்லது வடஅமெரிக்கா செல்லும் இந்திய விமானங்கள் மாற்று பாதையில்
செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 விபத்துக்குள்ளான மலேசிய விமானத்திற்கு பின்னால் வந்த மோடியின் விமானம் :
 

  உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய
விமானத்தின் பின்னால் அதே வான்வழியில்தான் பிரதமர் நரேந்திர மோடி பயணித்த
விமானமும் வந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சென்ற ஏர் இந்தியா-001
விமானம் பிராங்ஃப்ர்ட் நகரில் இருந்து 11.22 மணிக்கு புறப்பட்டது. மலேசிய
விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட 1 மணி நேரத்தில் மோடியின் விமானமும் உக்ரைன்
பிளைட் இன்பர்மேஷன் ரீஜனில் பறந்திருக்கும். ஆனால், பைலட் சாதுர்யமாக
யோசித்து பயணத் தடத்தை மாற்றியதால் மோடி சென்ற விமானத்திற்கு எவ்வித
ஆபத்தும் இல்லை என்று விமான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Close