தி.மு.க. தலைவர் கலைஞருக்கு உடல்நலக் குறைவு!

திமுக தலைவர் கருணாநிதி முதுமை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து வருகிறார். திமுக தலைவர் கருணாநிதிக்கு 92 வயதாகிறது… ஆனால் இன்னமும் சளைக்காமல் உழைத்துக் கொண்டே இருக்கிறார்…. அதிகாலையில் எழுந்து நாளிதழ்கள் படிப்பது தொடங்கி அறிக்கைகளை தயாரிப்பது வரை முதுமையைப் பற்றி கவலைப்படாமல் இயங்கி வருகிறார். அத்துடன் திருமண நிகழ்வுகள், அரசியல் நிகழ்ச்சிகளையும் கூடுமானவரை தவிர்க்காமல் இருந்து வருகிறார்.

இப்படி தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதும் அவருக்கு அவ்வப்போது உடல்நலக் குறைவை ஏற்படுத்தி விடுகிறது. 2009-ம் ஆண்டு முதுகு தண்டுவட ஆபரேஷனுக்காக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் 45 நாட்கள் அனுமதிக்கப்பட்டிருந்தார். 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் திடீரென அதிகாலை வயிற்றுவலியால் அவதிப்பட உடனே சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் கருணாநிதி. அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பினார். அதன் பின்னர் திடீரென சிறுநீர் கழிக்கும் பாதையில் ஏற்பட்ட தொற்றுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் கருணாநிதி. காய்ச்சல் அதிகமாக இருந்ததாலும் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடல்நலம் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டதால் தொடர்ச்சியாக மருந்துகளை உட்கொண்டு வந்தார் கருணாநிதி. இந்த மருந்துகளில் ஒன்று கருணாநிதியின் உடலுக்கு ஒத்துக் கொள்ளாததால் உடலில் ஆங்காங்கே கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து மருத்துவர்கள் உடனே வீட்டுக்கே வரவழைக்கப்பட்டு கருணாநிதிக்கு சிகிச்சை அளித்தனர். அப்போது கருணாநிதி முழு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து திமுக தலைமை கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் ஓய்வெடுத்து வருவதாகவும் அறிவித்திருக்கிறது.

Close