பட்டுக்கோட்டையில் பயங்கரம்! ஒருவர் படுகொலை!

பட்டுக்கோட்டை கோட்டை சிவன்கோவில் தெருவைச் சேர்ந்த பாண்டியன் மகன் சந்தோஷ்குமார் (20). பட்டுக்கோட்டை அண்ணா சிலை அருகிலுள்ள டீக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இவர் சனிக்கிழமை மாலை தனது நண்பர்களுடன் பெருமாள் கோயில் தெருவிலுள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்தச் சென்றுள்ளார். அதே நேரம் வெட்டிக்காடு தங்கையன் மகன் மன்னாரு (எ) அருண்செல்வன் அவரது நண்பர்களுடன் மது அருந்த அங்கு வந்துள்ளார்.

அப்போது சந்தோஷ்குமார் நண்பர்கள் முகேஷ், மகேந்திரன் ஆகியோரிடம் மன்னாரு தகராறு செய்து அவர்களைத் தாக்கினாராம். இதைத் தட்டிக் கேட்ட சந்தோஷ்குமாரை மன்னாரு கோஷ்டியினர் அரிவாளுடன் விரட்டிச் சென்றனராம்.

அவர்களுக்குப் பயந்து லெட்சத்தோப்பு பகுதியிலுள்ள கருவேலமரக் காட்டுக்குள் ஓடிய சந்தோஷ்குமாரை மன்னாரு கோஷ்டியினர் தடுத்து நிறுத்தி அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டுத் தப்பினராம்.

இதில் பலத்த காயமடைந்த சந்தோஷ்குமார் உடனடியாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

இதுகுறித்து சந்தோஷ்குமார் தாயார் விஜயகுமாரி அளித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை நகர போலீஸார் கொலை வழக்குப் பதிந்து பட்டுக்கோட்டை மேலத்தெருவைச் சேர்ந்த அஜீத் (18) என்பவரை கைது செய்தனர்.

தலைமறைவான அருண்செல்வன் (எ) மன்னாரு, பிரகாஷ், செம்புமணி, பாண்டுமணி, ஆர். அருண் உள்ளிட்ட மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

Close