உலக மக்கள் தொகை தினம் இன்று !!!

      

        
        உலக மக்கள்தொகை 1950-ல் 250 கோடியாக இருந்தது. அதுவே, 2011-ல் 700 கோடியை
எட்டிப்பிடித்தது. ஜனவரி 1, 2014-ல் எடுத்த தோராயமான ஒரு கணக்குப்படி
உலகின் மக்கள்தொகை 713 கோடியே 766 லட்சத்து 1,030 ஆக உயர்ந்திருந்தது. 

      
1989
-ல் ஐ.நா., மக்கள்தொகை அதிகரிப்புபற்றி விவாதிப்பதற்காகக் கூடியது.
மக்கள்தொகை பற்றிய விவாதத்தை நடத்துவதற்கென சர்வ தேச தினம் தேவை என
முடிவுசெய்யப்பட்டது. இதன் விளைவாக, ஜூலை 11 உலக மக்கள்தொகை தினமாக
அறிவிக்கப்பட்டு, 1989 முதல் கடைப்பிடிக்கப்படுகிறது. மக்கள்தொகையால் வரக்
கூடிய பிரச்சினைகளில் ஒன்றை ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டின் குறிக்கோள் என
ஐ.நா. அறிவித்துவருகிறது. அந்த ஆண்டில் அந்தக் குறிக்கோள்குறித்த
விழிப்புணர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்தும் விதமாகப் பல இயக்கங்கள்
நடத்தப்படுகின்றன.
      
2014-ம் ஆண்டுக்கான குறிக்கோள், ‘இளைஞர்கள் பிரச்சினைகளில் கவனம்
செலுத்துவது’
. தற்போது, சுமார் 180 கோடி இளைஞர்கள் தான் உலகத்தின்
எதிர்காலத்தைக் கட்டியமைக்கும் பல்வேறு பணிகளில் செயல்பட்டுவருகின்றனர். பல
கோடி இளைஞர்கள் வறுமை, வேலையின்மையில் சிக்கிக்கொண்டு தங்களின் உள்ளார்ந்த
ஆற்றலை மனித இனத்துக்குப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். அவர்களின்
ஆற்றல்களை வளர்த்தெடுப்பதுதான் இந்த உலக மக்கள்தொகை தினத்தின் குறிக்கோள். 
          உலகிலேயே அதிக இளைஞர்கள் இருக்கிற நாடாக 2020-ல் இந்தியா ஆகிவிடும். அத்தனை
இளைஞர்களுக்கும் அவர்களுடைய ஆற்றல்களை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவதற்கான
அனைத்து வாய்ப்புகளும் கிடைக்க வேண்டும். கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்கு
இந்தியா தயாராக வேண்டும்.

Advertisement

Close