நாளை முதல் பெட்ரோல் பங்குகளின் விற்பனை நேரம் குறைப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 4750 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. ஒரு பங்க்கில் மாதம் தோறும் சராசரியாக 1.70 லட்சம் லிட்டர் பெட்ரோல்-டீசல் விற்பனையாகிறது. டீலர் கமி‌ஷனை உயர்த்தி தருமாறு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் எண்ணெய் நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்தனர்.

அதை மத்திய அரசு அமைத்த கமிட்டி பரிந்துரை அளித்தும் எண்ணெய் நிறுவனங்கள் அமல்படுத்த வில்லை. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்தனர். கடந்த மாதம் இரவு 7 மணி முதல் காலை 7.15 மணி வரை பங்க்குகள் மூடப்பட்டன. நேற்று பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தினர்.

இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்ஸ் கூட்டமைப்பு தலைவர் முரளி கூறியதாவது:-

டீலர் கமி‌ஷன் தொடர்பாக மும்பையில் எண்ணெய் நிறுவனங்களிடம் இன்று பேச்சுவார்த்தை நடக்கிறது. அதில் கமி‌ஷனை தர ஒப்பு கொள்ளாவிட்டால் நாளை (5-ந்தேதி) முதல் பெட்ரோல் பங்க் விற்பனை நேரம் குறைப்பு போராட்டம் நடத்தப்படும். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் பங்க் செயல்படும். பின்னர் வங்கிகள் போல பெட்ரோல் பங்க்களுக்கு வார விடுமுறை விடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்

Close