பெற்றோர்களுக்கு எச்சரிக்கை! பெப்சி என நினைத்து மண்ணெண்ணை அருந்திய குழந்தை!

-file image

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ளது செங்கமேடு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தனம் – கோவிந்தராஜ் தம்பதியினர். இவர்களது 2 வயது மகன் ஹரிராமன்.

இவர்களது வீட்டில் அடிக்கடி கூல்ரிங்க்ஸ் வாங்கி வருவது வழக்கம். அந்த பாட்டில்கள் சிலவற்றை மண்ணெண்ணெய் ஊற்றி வைக்கவும், எறும்பு மருந்து கொட்டி வைக்கவும், வெளியில் செல்லும்போது தண்ணீர் எடுத்துச் செல்லவும் பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் குழந்தை ஹரிராமன், ஏற்கனவே பெப்சி பாட்டிலை குடித்ததை நினைத்துக்கொண்டு மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து குடித்துள்ளது. சிறிது நேரத்தில் குழந்தை திடீரென மயங்கி விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அருகில் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலையும் பார்த்துள்ளனர்.

உடனடியாக திட்டக்குடி அரசு மருத்தவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்க முடியாது என்பதால் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு குழந்தை உயிர் பிழைத்தது.

Close