அதிரையை நெருங்கும் மர்ம காய்ச்சல்! எச்சரிக்கை!

முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் பேரூராட்சி நிர்வாகத்தால் சமீபக்காலமாக குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்கள் சரிவர அகற்றப்படுவதில்லை. இதனால் நகரம் முழுவதும் ஆங்காங்கே சாலைகளில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. கழிவுப் பொருட்கள் பல இடங்களில் கிடந்து அசுத்தமான காட்சி அளிக்கிறது. மேலும் சாக்கடை கால்வாய்களையும் சுத்தம் செய்யாததால் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்க்கேட்டை ஏற்படுத்தி உள்ளது. இதனால் முத்துப்பேட்டை முழுவதும் விதவிதமான கொசுக்கள் உற்பத்தியாகி இரவு பகல் பாராமல் பொதுமக்களை கடித்து துன்புறுத்தி வருகிறது.

இதன் மூலம் பலருக்கு மர்ம காய்ச்சல் போன்ற பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகின்றன. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் பொது மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக முத்துப்பேட்டை அக்காஸ் தெருவை சேர்ந்த சுபியா பானு(7) மற்றும் அல்சாப்(5) என்ற சிறுமிகளுக்கும், அதேபோல் பக்கிரிவாடி தெருவை சேர்ந்த சாஜித்(3), மற்றும் ஜாகித்(6) ஆகிய சிறுவர்களுக்கும் மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்படத்தக்கது.

இது போன்ற நோய்கள் தமிழகம் முழுவதும், பரவி வருகிறது. எனவே முத்துப்பேட்டைக்கு சில கிலோ  மீட்டர்கள் தொலைவில் உள்ள அதிரையிலும் இந்த நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதையடுத்து, அதிரையர்கள் தங்கள் சுற்றுசூழலை சுத்தமாக வைத்துகொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

Close