Adirai pirai
INFORMATION இந்தியா தமிழகம்

சென்னையை நெருங்கிய வர்தா புயல்…. மாலைக்குள் கரையை கடக்கும் என எதிர்பார்ப்பு

தென் மேற்கு வங்க கடலில் உருவாகிய வர்தா புயல் மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று மாலைக்குள் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகாலை 2.30 மணி நிலவரப்படி, வர்தா புயல் சென்னைக்கு கிழக்கு மற்றும் வடகிழக்கே 180 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது.
இந்த புயல் மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் ‌மேற்கு திசையை நோக்கி சென்னைக்கு நகர்ந்து வருகிறது. அதிதீவிரமாக இருக்கும் வர்தா புயலானது, தீவிர புயலாக மாற வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
இது படிப்படியாக குறைந்து, வடக்கு தமிழகம் – தெற்கு ஆந்திரா இடையே, சென்னை அருகே இன்று மாலைக்குள் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, 80 கிலோ மீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும். மேலும் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 20 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும், தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் கடல்நீர் நுழைய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்த பின்னரும் 12 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, சென்னை மற்றும் புறநகரில், பெரும்பாலான இடங்களிலும், திருவள்ளூரிலும் மிதமான மழை பெய்து வருகிறது.