பதஞ்சலிக்கு விரைவில் கண்ணீர் அஞ்சலி!

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவன விளம்பரங்களில் தவறாக ப்ராண்டிங் செய்த குற்றத்திற்காக, உத்தர்கண்ட் மாநிலத்தின் ஹரித்வார் நீதிமன்றம் அந்நிறுவனத்திற்கு 11 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

பதஞ்சலி நிறுவனம் 2006 ஆம் ஆண்டு யோகா குரு ராம்தேவால் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் மருத்துவம் சார்ந்த பொருட்களை மட்டுமே தயாரித்து வந்த இந்நிறுவனம்,  2014 ஆம் ஆண்டில் இருந்து நூடுல்ஸ், சோப் போன்ற பொருட்களை தயாரிக்க தொடங்கியது. பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ், 2011 ஆம் ஆண்டு ஜன்லோக்பால் போராட்டத்திற்கு பிறகு இந்தியா முழுவதும் அறியப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடியை ஆதரித்து மேலும் பிரபலமடைந்துவிட்டார்.  இவருடன் சேர்ந்து பதஞ்சலியும் பிரபலமடைந்துவிட்டது. அதுமட்டுமின்றி ஆன்லைன் வர்த்தகம், டிவி விளம்பரம் என பில்லியன் டாலர் நிறுவனமாக உருவெடுத்துவிட்டது.  இந்நிறுவனத்தின் 2015-2016 ஆண்டு வருவாய் 5,000 கோடி.

இந்த விஸ்வரூப வளர்ச்சிக்கு இடையில், 2012ம் ஆண்டு ஹரித்வாரில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, பதஞ்சலி நிறுவன தயாரிப்புகள் சிலவற்றை ருத்ராபூர் ஆய்வகத்தில்  சோதனைக்குட்படுத்தியது. அந்த சோதனையில், பதஞ்சலியின் கடுகு எண்ணெய், உப்பு, அன்னாசி ஜாம், கடலை மாவு மற்றும் தேன் உள்ளிட்ட பொருட்கள்  தர சோதனையின் போது தோல்வியடைந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை பதஞ்சலி நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தது.

நிலுவையில் இருந்த வழக்கு, இன்று ஹரித்வார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையில், வேறு நிறுவனத்தின் தயாரிப்புகளை, பதஞ்சலி நிறுவன தயாரிப்புகள் போன்று  சித்தரித்து விளம்பரப்படுத்தியது  தெரிய வந்துள்ளது. உணவு பாதுகாப்பு விதிமுறைளின் 52-53 பிரிவை மீறிய குற்றத்திற்காகவும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை (பேக்கேஜிங் மற்றும் பெயரிடல்) கட்டுப்பாட்டின் 23.1 (5) பிரிவை மீறிய குற்றத்திற்காகவும் பதஞ்சலிக்கு  11 லட்சம் அபராதம் விதித்து ஹரித்வார்  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சம்பவம், சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் பதஞ்சலி பொருட்களின் தரம் பற்றி மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி ’யோகா குரு’ என்று அழைக்கப்படும் பாபா ராம்தேவ், மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை, வியாபார நோக்கில் செயல்பட்டு வரும் நிறுவன லாபத்திற்காக பயன்படுத்தி கொள்கிறாரா என்னும் கேள்வியும் எழுந்துள்ளது.

Close