பொறியாளரை பிணமாக மாற்றிய வேலையில்லா திண்டாட்டம்!

நெல்லை டவுன் கோடீஸ்வரன் நகர் வயல் பகுதியில் நேற்று அதிகாலையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

இறந்து கிடந்தவரின் உடல் அருகே வயலுக்கு அடிக்கக்கூடிய பூச்சி மருந்து பாட்டில் கிடந்தது. எனவே அவர் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

என்ஜினீயரிங் பட்டதாரி

விசாரணையில், இறந்து கிடந்தவர் நெல்லை டவுன் தடிவீரன் கோவில் மேலத்தெருவை சேர்ந்த தாயுமானவர் மகன் சுவாமிநாதன்(வயது 22) என்பது தெரிய வந்தது. என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் சென்னையில் தங்கி வேலை தேடி வந்தார். ஆனாலும் அவருக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. இதனால் மனம் உடைந்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து தனது பெரியப்பா வீட்டிற்கு வந்தார். ஊருக்கு வந்ததில் இருந்து மிகுந்த சோகத்துடனேயே இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் சினிமாவிற்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து வயல்வெளியில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. வேலை கிடைக்காத விரக்தியில் சுவாமிநாதன் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிய வருகிறது.

-தினத்தந்தி செய்தி

அதிரை பிறை ஆசிரியர் கருத்து:

இது போன்று தான் இன்றைய காலத்து பட்டதாரி இளைஞர்கள் பலர் படித்து வேலை இல்லாததால் வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல், ஊரார்கள், உறவினர்களை சந்திக்க முடியாமல் தற்கொலைக்கு துணிந்து விடுகிறார்கள். சிலர் தங்கள் வயிற்று பசிக்காகவும் தினசரி வாழ்க்கைக்காகவும் திருடர்களாக மாறிவரும் அவலம் இந்தியாவில் அரங்கேறி வருகிறது.

சிறு வயதில் இருந்து நன்றாக படிக்க வைத்து பல லட்சம் ரூபாய் செலவளித்து ஒரு இஞ்சினியாக அந்த இளைஞரை ஆளாக்கிய பெற்றோர்  இன்று பிணமாக தன்மகனை பார்க்கும் அவலத்தை என்னவென்று சொல்வது.

இது போன்று வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் பலர் தங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் நடக்கும் பல சைபர் க்ரைம் குற்றங்கள், ஏடிஎம் கொள்ளைகள், பேங்க் கொள்ளைகள், வெடிகுண்டு தயாரித்தல், போதை மருந்துகள் கடத்தல் போன்ற பல கொடிய குற்றங்களை வேலையில்லா பட்டதாரிகள் தான் பெரும்பாலும் செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனை வைத்து பார்க்கும் போது வேலையில்லா அப்பாவி பட்டதாரிகளுக்கு ஒரு நல்ல வேலை வாய்ப்புகளை ஏற்ப்படுத்தி தருவது அரசாங்கத்தின் கடமை.

மேலும் ஒரு நல்ல கல்வி அந்த மாணவருக்கு வாழ்வதையும் போராட்டத்தையும், மனப்பக்குவத்தையும் போதிக்கவில்லை. தற்கொலையின் கொடூரத்தை உணர்த்தவில்லை. இன்றைய கல்வியை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள், பள்ளி கல்லூரிகள் அனைத்துமே மதிப்பெண்கள் மட்டுமே மையமாக வைத்து பாடம் நடத்துகின்றன. இதனால் மாணவர்கள் அந்த மதிப்பெண்களையே முறைகேடாக பெறுவதற்கு முயற்சிகின்றனர். “ஐந்தில் விளையாதது ஐம்பதில் விளையாது” என்றதொரு பழமொழியை கேள்பட்டிருப்போம். இப்படி படிக்கும் காலத்திலேயே முறைகேடாக மதிப்பெண்கள் பெற நினைக்கும் மாணவன் பிற்காலத்தில் எப்படி நேர்மையாக சம்பாதிக்க நினைப்பான். “ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது” என்பார்கள் அது போல மதிப்பெண்களை மையமாக வைத்துக்கொண்டு படித்து வெளியில் வரும் மாணவர்கள் சாதிப்பது கடினமே. இப்படி  தான் அந்த இளைஞருக்கு தவறு எது நல்லது எது என்று படிக்கும் பருவத்திலேயே அவரது கல்வி உணர்தியிருந்தால் இவர் இப்படி தற்கொலை செய்திருக்க மாட்டார்.

அந்த இளைஞரும் தன் படிப்புக்கு ஏற்ற வேலை தான் வேண்டும் என்றில்லாமல் தினசரி செலவிற்க்காக வேறு ஒரு கிடைத்த வேலை செய்திருக்காலாம். அதை விட்டுவிட்டு தன் குடும்பத்துக்கும் மிகப்பெரிய துயரை கொடுத்துள்ளார். தான் இறந்துவிட்டால் தனது குடும்பம் என்ன ஆகும் என அவரது கல்வி உணர்த்தவில்லை.

மனதில் வலிகளுடன் மீண்டும் சந்திப்போம்….

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி.

Close