பழைய ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்தால் அபராதம்! வருகிறது புதிய சட்டம்!

உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை மத்திய அரசு கடந்த மாதம் (நவம்பர்) 8ஆம் தேதி வெளியிட்டது. முதலில் அவற்றை வங்கிகளிலும் அஞ்சல் நிலையங்களிலும் மாற்றிக் கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது. அதேவேளையில் வங்கிகளில் அந்த நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கான கடைசி நாள் டிசம்பர் 30 என்று அறிவிக்கப்பட்டது. இன்னும் சில தினங்களில் அந்த அவகாசம் முடிவடைய உள்ளது.
இந்நிலையில், 30-ஆம் தேதிக்குப் பிறகும், பத்துக்கு மேற்பட்ட உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்க வகைசெய்யும் அவசரச்சட்டத்தைப் பிறப்பிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம், அவ்வாறு பழைய நோட்டுகளை வைத்திருப்போருக்கு ரூ.50,000 அல்லது அவர்கள் வைத்திருக்கும் நோட்டுகளைப் போல் 10 மடங்கு – இவற்றில் எது அதிகமோ அது அபராதமாக விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இது குறித்த தகவலை உறுதிப்படுத்த முடியாதபோதிலும், தில்லியில் புதன்கிழமை (டிச. 28) நடைபெற உள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

மேலும், மேற்கண்ட ரூபாய் நோட்டுகளுக்கு சட்டரீதியாக இனி அரசு பொறுப்பாகாது என்ற அம்சமும் அந்த அவசரச்சட்டத்தால் உறுதிப்படுத்தப்படும்.

Close