புத்தாண்டுக்கு முன் தொலைக்காட்சியில் விளக்குகிறார் பிரதமர் மோடி?

பண மதிப்பிழப்பு குறித்து. பிரதமர் மோடி புத்தாண்டு தினத்திற்கு முன்னதாக நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் விளக்கமளிப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கருப்புப் பண ஒழிப்பு மற்றும் கள்ளநோட்டு புழக்கத்தைத் தடுப்பதற்காக புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி, கடந்த நவம்பர் 8ம் தேதி அறிவித்தார். மக்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் நவம்பர் 10 முதல் டிசம்பர் 30 வரை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்தார். இதனால் புழக்கத்தில் இருந்த 86 சதவீத நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பச் செல்லும் சூழல் ஏற்பட்டது. பழைய ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக புதிதாக 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கையே முடங்கி விட்டதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள் 50 நாட்களில் தீரும் என பிரதமர் முன்பே பலமுறை தெரிவித்திருந்த நிலையில் அது குறித்து அவர் விளக்கமளிக்க கூடும் எனத் தெரிகிறது. நாளை அல்லது நாளை மறுநாள் இந்த உரை இருக்கும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல, பண மதிப்பிழப்பு விவகாரம் தொடர்பான முக்கியமான அறிவிப்பினை பிரதமர் மோடி ஜனவரி 2ம் தேதி வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

Close