எளிய பண பரிமாற்றத்திற்கு புதிய செயலிகள்: இந்தியன் வங்கி அறிமுகம்

செல்போன் வழியாக எளியமுறையில் பண பரிமாற்றம் செய்ய இந்தியன் வங்கி புதிய செயலிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய செயலிகளை வங்கியின் மேலாண்மை இயக்குனர் மகேஷ்குமார் ஜெயின், செயல் இயக்குனர் ஏ.எஸ்.ராஜீவ் அறிமுகப்படுத்தினார்கள். இந்தியன் வங்கியின் யு.பி.ஐ. செயலியை ஸ்மார்ட் போன்களில் பதிவிறக்கம் செய்து பணத்தை பெறவோ அல்லது செலுத்தவோ முடியும்.

இதை பயன்படுத்த வங்கி கணக்கு எண், ஐ.எப்.எஸ்.சி. எண் தேவையில்லை. ஆதார் எண், மொபைல் எண்ணை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களுக்கான கணக்கை தொடங்கி வங்கி சேவைகளை பெற முடியும். இதன் மூலம் ஒரு ரூபாயில் இருந்து ஒரு லட்சம் வரை பண பரிமாற்றம் செய்ய முடியும்.

ஸ்மார்ட் போன் இல்லாத அடிப்படை ரக மொபைல் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், *99*58# என்ற எண்ணை தொடர்பு கொண்டு தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பிறகு வழக்கமான வங்கி சேவைகளை பெறலாம். இந்தியன் வங்கியில் வீட்டு கடனுக்காக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் விண்ணப்பத்தின் நிலை குறுந்தகவல் மூலமாக தெரிவிக்கப்படும். இதன் மூலம் வங்கிக்கு வந்து தகவல்களை பெறுவதற்கான வாடிக்கையாளர்களின் நேரம் மிச்சம் ஆகும்.

மேற்கண்ட தகவல் இந்தியன் வங்கி உதவி பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Close