மல்லிபட்டினத்தில் 4 இளைஞர்களை வெட்டிய சம்பவத்தில் 11 பேர் கைது

மல்லிபட்டினத்தில் 4 இளைஞர்களை வெட்டிய சம்பவத்தில் 11 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் மல்லிப்பட்டிணம் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள கடைவீதியில் அப்பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று முன்தினம் இரவு உட்கார்ந்து பேசி கொண்டிருந்தபோது டூவீலரிகளில் வந்த மர்மநபர்கள் அரிவாளால் அங்கு பேசி கொண்டிருந்த இளைஞர்களை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதில் முகமது ஹர்சத் (24), முகமது மைதீன் (23), நூர்அமீன் (23), மற்றொரு சேக் அப்துல்லா மகன் நூர்அமீன் (25) ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. 4 பேரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி காயமடைந்த வாலிபர்களின் உறவினர்கள்  சாலை மறியலில் ஈடுபட்டனர். பட்டுக்கோட்டை டிஎஸ்பி செல்லபாண்டியன் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மல்லிப்பட்டினம் நூர் முகமது என்பவர், 4 பேரை வெட் டிய நபர்களை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேதுபாவாசத்திரம் போலீசில் புகார் கொடுத்திருந்தார்.
புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து காரங்குடா முத்தரசன் (30), முத்துக்குமார் (25), பழனிவேல் (36), அண்ணாதுரை (34) கொள்ளுக்காடு ராஜேந்திரன் (43), முத்துக்குமார் (25), புதுப்பட்டினம் காளிதாஸ்( 28), மல்லிப்பட்டினம் ராஜேந்திரன்,  மணிகண்டன், (26), எ.ஆர்.பட்டினம் முருகானந்தம் (24), சின்னமனை ஆனந்தன் (23), பாலசந்தர் (34) ஆகிய 11 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் 11 பேரையும் விடுவிக்க கோரி பாஜக சார்பில் நேற்று மனுகொடுக்க சேதுபாவாசத்திரம்  காவல்  நிலையத்துக்கு வந்தனர். அப்போது, வந்தவர்களில் குலோத்துங்கன் என்ற அப்புக்குட்டி (29) என்பவரை, கடந்த 11ந்தேதி மல்லிப்பட்டினத்தில் நடந்த கலவரத்தின்போது காரை உடைத்ததாக தேடப்பட்டு வந்தவர். அவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Close