பேராவூரணியில் பேமஸ் “ஒரு ரூபாய் டீ”

பேராவூரணியில் வழக்கம்போல இந்த ஆண்டும் திருவள்ளுவர் தினத்தில் ‘ஒரு ரூபாய்க்கு டீ’ வழங் கினார் திருக்குறள் தங்கவேலனார்.

தஞ்சாவூர் மாவட்டம், பேரா வூரணியி்ல கடந்த பல ஆண்டுகளாக இப்பணியைச் செய்து வருகிறார் தங்கவேலனார். திருக்குறளின்பால் கொண்ட பற்றுதல் காரணமாகவும் திருக்குறளின் மேன்மைகளை பரப்பும் விதமாகவும் திருவள்ளுவர் தினத்தில் தனது டீ கடையில் ‘ஒரு ரூபாய்க்கு ஒரு டீ’ வழங்கி வருகிறார்.

“திருக்குறள், நம்மையும் நம் சமூகத்தையும் வாழ்விக்கும் அரு மருந்து. அதை நன்றாக கற்றுணர்ந்து சமூகத்தை வாழ்விக்க வேண்டும்” என்று கூறும் தங்கவேலனார், மாணவர்கள், பெரியவர்கள் என இப்பகுதியில் பலருக்கும் திருக்குறள் வகுப்புகளையும் எடுத்துவருகிறார்.

இவரைப்பற்றி வெளிவந்துள்ள ‘ஒரு டீ ஒரு ரூபாய்’ என்ற குறும்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

பள்ளிக்குச் சென்று முறையாக படிக்காத இவர் திருக்குறளைக் கற்று அதன் அரிய கருத்துக்களைப் பரப்பி வருவதால் இவரை திருக்குறள் தாத்தா என்றும், இவரது டீ கடையை திருக்குறள் தேனீர் நிலையம் என்றும் மக்கள் அழைத்து வருகின்றனர்” என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படிக்காத மேதை இப்பகுதி பட்டிமன்றங்களில் பேச்சாளராகவும், நடுவராகவும் கலக்கி வருகிறார் என்பது கூடுதல் சிறப்பு.

Close