தமிழகத்தில் 4வது நாளாக தொடர்கிறது போராட்டம்

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 4வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல்வேறு தரப்புகளில் இருந்து ஆதரவு அலைகள் பெருகி வருவதால் இன்று தமிழகம் முழவதும் ஸ்தம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு சுப்ரீம் கோர்ட் தடையால் இந்தாண்டு நடக்க முடியாமல் போனது. ஜல்லிக்கட்டிற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் எந்த வித பலனும் ஏற்படவில்லை. இதையடுத்து அலங்காநல்லூரில் கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கடந்த 15ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் சென்னை மெரினா, கோவை, சேலம், நெல்லை என பரவி தற்போது தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டிற்காக போராடி வருகின்றனர்.

விடிய விடிய போராட்டம்

போராட்டம் நடத்தும் இளைஞர்கள் சற்றும் தளர்ச்சியடையாமல் தொடர்ந்து 4வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இரவு பகல் பாராமல் விடிய விடிய நடந்து வரும் இப்போராட்டத்தின் போது ஜல்லிக்கட்டு தமிழர்களின் உரிமை எனவும், ஜல்லிக்கட்டிற்கான தடை என்பது நாட்டு மாட்டு இனங்களை அழிக்கும் செயல் எனவும், ஜல்லிக்கட்டு தடைக்கு முக்கிய காரணமான பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும் முழக்கமிட்டு வருகின்றனர்.

 

களத்தில் பெண்கள்

போராட்டத்தில் பெரும் அளவில் பெண்களும், குழந்தைகளும் கலந்து கொண்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை மெரினா மற்றும் மதுரை தமுக்கம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் என பலர் குடும்பத்துடன் வந்து பேராட்டத்தில் பங்கெடுத்து வருகின்றனர். குறிப்பாக தாய்மார்கள் கைகுழந்தையுடனும், கர்ப்பிணி பெண்களும் போராட்டக்களத்திற்கு வந்திருப்பது நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

 

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் நேற்று சில கல்லூரி நிர்வாகங்கள் தங்கள் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்தன. இந்நிலையில் இன்று தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. இதுவரை கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என்று இருந்த போராட்டத்தில் இன்று பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகர்கள் ஆதரவு

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்தி வரும் இந்த போராட்டத்திற்கு இன்று பல தரப்பு வணிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதே போல் ஆட்டோ, கால் டாக்ஸி போன்ற வாகனங்கள் எதுவும் இன்று ஓடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது, லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் லாரிகள், மணல் லாரிகள் ஓடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சிகள் போராட்ட அறிவிப்பு

இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும வகையில் அரசியல்கட்சிகளும் தங்கள் பங்கிற்கு போராட்டத்தை அறிவித்துள்ளனர். தி.மு.க., சார்பில் ரயில் மறியல் போராட்டம், த.மா.க., சார்பில் மனித சங்கிலி போராட்டம், இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பந்த் மற்றும் இளைஞர்கள் போராட்டத்திற்கு ம.ந.,கூட்டணி ஆதரவு என அரசியல் கட்சிகளும் நேரடியாக போராட்டக் களத்தில் இறங்கியுள்ளது.

கண்ணியம் காக்கும் இளைஞர்கள்

லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒரே இடங்களில் கூடி உணர்வு ரீதியான போராட்டத்தில் ஈடுபட்டாலும் அவர்கள் தங்கள் போராட்டத்தில் கண்ணியத்தை காத்து வருகின்றனர். தங்கள் போராட்டத்தால் பொதுமக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விட கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றனர். எந்த வித அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை. மாறாக தங்கள் போராட்டம் நடத்தி வரும் இடங்களில் இருக்கும் குப்பைகளை தாங்களே அகற்றுவது, அப்பகுதியில் போக்குவரத்தை சீரமைக்க போலீசாருக்கு உதவுவது என கூட்டம் சேர்க்கும் பலருக்கும் முன்னுதாரணமாக இருந்து வருகின்றனர்.

நன்றி:தினமலர்

 

Close