பஞ்சாப் , கோவா சட்டமன்றத் தேர்தல் -இன்று வாக்குப்பதிவு!


பஞ்சாப் மற்றும் கோவாவில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

117 இடங்களைக் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு, ஆயிரத்து 145 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சுமார் 2 கோடி வாக்காளர்கள் இன்றைய தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இம்மாநிலத்தில் ஆளும் கட்சியான ஷிரோமணி அகாலிதளம்- பாஜக கூட்டணி கடந்த பத்தாண்டுகளாக ஆட்சியில் நீடிக்கிறது. முதலமைச்சர் பிரகாஷ்சிங் பாதல் 6வது முறையாக முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவருக்கு போட்டியாக காங்கிரஸ் சார்பில் அம்ரீந்தர் சிங் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இருவருக்கும் இடையே லாம்பி தொகுதியில் நேருக்கு நேர் போட்டி நிலவுகிறது.
ஆம் ஆத்மி கட்சியும் பலத்த போட்டியை ஏற்படுத்தியுள்ளது. சங்கரூர் தொகுதியில் ஆம்ஆத்மிக் கட்சி சார்பில் போட்டியிடும் நடிகர் பகவத் மன், அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து ஆகியோர் இந்தத் தேர்தலில் போட்டியிடும் பிரபலங்கள் ஆவர். சுமார் ஒருலட்சம் போலீசாரும் துணை ராணுவப் படையினரும் தேர்தலுக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
40 இடங்களைக் கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதில் 5 முன்னாள் முதலமைச்சர்கள் உட்பட 250 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சுமார் 11 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலில் மனோகர் பாரிக்கரை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தி பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. கோவாவில் பா.ஜ.க., காங்கிரஸ், ஆம்ஆத்மி ஆகிய 3 கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது.

Close