இந்திய தொழிலாளரை மறக்காத அமீரக பிரதமர்!!!

விபத்தில் மரணம் அடைந்த முன்னாள் ஊழியரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க, ஐக்கிய அரபு அமீரக பிரதமர் தன் சார்பில் அரச குடும்பத்தினரை, கேரளாவுக்கு அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்திய பணிப் பெண்ணின் கால் துண்டிப்பு, கை துண்டிப்பு; பெரிய நிறுவனத்தில் வேலை என சொல்லிவிட்டு, ஒட்டகம் மேய்க்க விட்டு விட்டார்கள்; எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள்; சொந்த ஊருக்குத் திரும்ப வழி செய்யுங்கள் என்பது போன்ற செய்திகள்தான் பொதுவாக வளைகுடா நாடுகளில் இருந்து வரும். முதன்முறையாக சற்று வித்தியாசமான நல்ல செய்தி வந்திருக்கிறது.
இந்தியாவில் இருந்து அதிகமானோர் வளைகுடாவில் வசிக்கின்றனர். குறிப்பாக கேரளா. அதிலும், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் வளைகுடா நாடுகளில் பணிபுகின்றனர். மலப்புரம் மாவட்டம் கல்பான்சேரி பகுதியைச் சேர்ந்தவர் தையில் முகைதீன் குட்டி. இவர் துபாயில் பணி புரிந்து வந்தார்.

பணி என்றால் ஏதோ ஒரு நிறுவனத்தில் அல்ல. ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது ரஷீத் அல் மக்துமிடம் பணி புரிந்து வந்தார். பிரதமரின் ஷா அபீல் அரண்மனையில் போக்குவரத்துப் பிரிவில்தான் முகைதீன் குட்டிக்குப் பணி. முகைதீன் குட்டி பணியில் ரொம்ப சின்சியர். தன் பணிக் காலத்தில் ஒருநாள் கூட விடுப்பு எடுத்தது இல்லை. அதனால், அவர் மீது பிரதமரும் தனி பிரியம் வைத்திருந்தார். நீண்ட காலம் பிரதமரிடம் பணியாற்றிய முகைதீன் குட்டி, ஓய்வு பெற்றபின் கேரளத்துக்கு திரும்பினார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா திரும்பி சொந்த ஊரில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் விபத்தில் சிக்கி திடீரென்று அவர் இறந்து விட்டார். முகைதீன் குட்டி மீது அமீரக பிரதமர் ரஷீத் அல் மக்தும் எவ்வளவு பிரியம் வைத்திருந்தார் என்பது அவரது குடும்பத்தினருக்கு நன்கு தெரியும். அதனால், துபாய் பிரதமர் அலுவலகத்துக்கு முகைதீன் குட்டி இறந்தது குறித்து உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. அரண்மனையில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் இறந்து விட்டார் என்ற தகவலைத் தெரிவிப்பது தவிர்த்து, அதில் வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஆனால், பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த பதில் அவரது குடும்பத்தினரைத் திகைக்க வைத்தது. “இறுதி மரியாதை செய்ய அரச குடும்பத்தினர் வருகிறார்கள். நீங்கள் அதுவரை காத்திருக்கவும்” என்பதுதான் அந்த பதில்.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாகியும் முகைதீன் குட்டியை அமீரக பிரதமர் மறக்காமல் நினைவில் வைத்திருப்பதைப் பார்த்து, அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாது அப்பகுதியினரே நெகிழ்ந்தனர். சொன்னது போல, ஷா அபீல் அரண்மனையின் மனித வளத்துறைத் தலைவர் சைஃப் அகமது அல் வார்வாசி, அரண்மனையின் போக்குவரத்துத்துறை இயக்குநர் மார்வன் ரஷீத் கமீஸ், அரண்மனை நிர்வாகப் பிரிவுத் தலைவர் அகமது காலீஃபா முகமது அல்மாரி ஆகியோர் முகைதீன் குட்டியின் சொந்த ஊருக்கு வந்தனர்.

பிரதமரின் அரண்மணையில் பணிபுரியும் ஹைதர் அலி என்ற மற்றொரு இந்தியர் முகைதீன் குட்டியின் சொந்த ஊருக்கு அவர்களை அழைத்து வந்தார். அவர்கள், முகைதீன் குட்டியின் வீட்டுக்குச் சென்று அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினர். இறுதிச் சடங்கு முடிந்த பின்னரே கேரளாவில் இருந்து கிளம்பினர்.

தாய் நாடு திரும்பி 15 ஆண்டுகள் ஆகியும் தனது முன்னாள் ஊழியரை மறக்காத அமீரக பிரதமரின் செயல் கேரள மக்களை நெகிழச் செய்துள்ளது.

நன்றி: விகடன்

Close