ஆளுநரின் தமிழக வருகை திடீர் ரத்து: சசிகலா முதலமைச்சராக பதவியேற்பது தாமதமாகும் என தகவல்!

ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழக வருகையை ரத்து செய்திருப்பதால், முதலமைச்சராக சசிகலா பதவியேற்பது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட, அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா‌ முதலமைச்சராக இன்று பொறுப்பேற்பார் என்று தகவல்கள் வெளியாயின‌. அதற்காக, சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. தமிழக அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி ஆகியோர் பதவியேற்பு விழா ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டனர். சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், ஆளுநரின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டிருப்பதால் சசிகலா இன்று பதவியேற்கப் போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது. அதனால், சென்னை பல்கலைக் கழகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

Close