சென்னைக்கு மிக அருகில்… ஐந்தே வருடங்களில் அழிந்த ‘தன்னூத்து’ கிராமம்..!


“இயற்கை வளங்களான காடுகளையும், நீர்நிலைகளையும் அழித்து விட்டு கல்லையும், மண்ணையும் திங்க போறீங்க” –  பிரபல தமிழ் சினிமாவில் பேசப்பட்ட வசனம். ஆம், தமிழ்நாட்டின் தற்போதைய நிலையை பார்த்தால் வரும் காலங்களில் அது உண்மையாகிவிடுமோ என்ற எண்ணம் மனதில் தோன்றுகிறது. விடுதலைக்குப் பின்னர் உருவான பசுமைப் புரட்சியின் விளைவால் ரசாயனங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டன. அதனால் இன்று நோய்வாய்ப்பட்ட தலைமுறைகள் அதிகம் உருவானது. அதேபோல், இப்போது தமிழ்நாட்டில் நிலவும் வறட்சி, காடுகள் அழிக்கப்படுதல், விவசாய நிலங்கள் குறைந்து வருதல், தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்தல், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு மற்றும் பருவமழை பொய்த்துபோதல் என பல்வேறு காரணங்களால் மறைமுகமாக பாதிக்கப்படுவது விவசாயம்தான். விவசாயம் பாதிக்கப்பட்டால் நேரடியாக பாதிக்கப்படுவது மக்களாகிய நாம்தான். சென்ற வருடம் நிலவிய சுற்றுச்சூழல் மாறுபாட்டால் பருவமழை பொய்த்து, அண்டை மாநிலம் உரிய தண்ணீர் தராதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நெல் முளைத்த பூமியில் புற்கள் முளைத்துக் கிடக்கின்றன. இதன் எதிரொலிதான் தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் அரிசி விலை உயர்வு.

ஓரகடம் கிராமம் – 2011-ம் ஆண்டு கூகுள் எர்த் மேப்

முன்பெல்லாம் தமிழ்நாட்டின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய போதுமான உணவு உற்பத்தி நம்மிடமே இருந்தது. இப்போது நாம் முழுவதுமாக அண்டை மாநிலங்களை நம்பியே இருக்கிறோம். மத்திய பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களைத்தான் உணவுத் தேவைக்காக நாம் சார்ந்திருக்கிறோம். முன்னாள் முதல்வர் காமராஜருக்கு பின்னர் தமிழகத்தில் எந்த இடத்திலும் அணைக்கட்டு கட்டப்படவில்லை. எந்த அரசும் பெரிதாக நீர்நிலைகளை காக்கவோ அல்லது உருவாக்கவோ முயற்சி செய்ததாகத் தெரியவில்லை. நம்மிடம் உள்ள நீர் வளத்தை விவசாயத்திற்கு பயன்படுத்துவதை தவிர்த்து மற்ற அனைத்திற்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.  ஆம், சென்னைக்கு மிக அருகில் ஒரகடத்தில் அழகிய ப்ளாட் என்றெல்லாம் விளம்பரம் வருகிறதே அந்த ஒரகடம் பகுதியில் நிகழ்ந்த மாற்றங்கள் பற்றி உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். இதுவும் ஒரு வகையில் தொழிற்சாலைகளால் அபகரிக்கப்பட்ட ‘தன்னூத்து’ கிராமம் என சொல்லலாம். சென்னைக்கு தேவையான காய்கறிகள் மற்றும் உணவினை உற்பத்தி செய்வதில் முன்னனி வகித்த கிராமம்தான் ஒரகடம்.

#vikatan

Close