அதிரையில் சுற்றுச்சூழல் சீரமைப்பு குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை வைத்த சுற்றுச் சூழல் மன்ற நிர்வாகிகள்

“அதிராம்பட்டினம் சுற்றுச் சூழல் மன்றம் 90.4” ன் சார்பாக அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி, தூய்மையான அதிராம்பட்டினத்தை உருவாக்க, சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் கெளரவ தலைவர், ஹாஜி எம்.எஸ். தாஜுதீன், தலைவர் விவேகானந்தம், மற்றும் பேராசிரியர்.செய்யது அஹமது கபீர், இர்பான் ஷேக், எஸ். முஹம்மது இப்ராஹீம், SISYA துணை தலைவர் மரைக்கா இத்ரீஸ் அஹமத், SISYA செயலாளர் எம்.எஃப்.முஹம்மது சலீம், ஆகியோர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அவர்களை 20.02.2017 அன்று நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

கோரிக்கை மனுவில்,

  • அதிராம்பட்டினம் பேரூராட்சி தெருக்களிலிருந்து அப்புறப்படுத்தப்படும் குப்பைகளை கொட்டி, தரம் பிரித்து, உரம் தயாரிக்க தற்போதுள்ள இடம் போதுமானதாக இல்லை, எனவே புதிய இடத்தை தேர்வு செய்து தர வேண்டும்.
  • பேரூராட்சியில் உள்ள குப்பை அகற்றும் இரண்டு டிராக்டர்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன. இவற்றை பழுது நீக்க வேண்டும். புதிதாக இரண்டு டிராக்டர்களை குப்பை அள்ள வழங்க வேண்டும்.
  • பேரூராட்சியில் 8 வருடங்களாக காலியாக உள்ள துப்புரவு ஆய்வாளர் பணியிடத்தை உடன் நிரப்ப வேண்டும். மாற்றுப் பணியில் இல்லாமல் நிரந்தரமாக ஒரு செயல் அலுவலரை நியமிக்க வேண்டும்.
  • பேரூராட்சியில் பொது சுகாதாரத் துறை, கல்வித் துறை, தன்னார்வ தொண்டு அமைப்புகள், மற்றும் அனைத்து சமூக அமைப்புகளை இணைத்து, திடக்கழிவு மேலாண்மை விளக்க கருத்தரங்கம் நடத்த வேண்டும்.
  • போதுமான அளவு துப்புரவுப் பணியாளர்களை நியமித்து, வீடுகளில் சேரும் குப்பைகளை தினந்தோறும் வாங்கி அப்புறப் படுத்த வேண்டும். தெருக்களில் உள்ள குப்பைகளை உடனுக்குடன் அள்ள வேண்டும். சாக்கடை கால்வாய்களை தூர் வார வேண்டும். கொசு ஒழிப்பு பணிகளை செய்ய வேண்டும்.
  • பேரூராட்சி பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பிடங்களில் உள்ள குறைகளை சரி செய்ய வேண்டும். செயல்படாமல் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பிடத்தை உபயோகத்திற்கு கொண்டு வர வேண்டும் ஆகிய கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியரிடம் வைக்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து மனு கொடுத்தபோது, சுற்றுச் சூழல் மன்றத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆவன செய்வதாக உறுதியும், அறிவுறுத்தலாக பொதுமக்கள் குப்பைகளை வாய்க்கால், மற்றும் சாக்கடைகளில் கொட்டுவதை தவிர்க்க சுற்றுச் சூழல் மன்றத்தின் சார்பில்  விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கேட்டுக்கொண்டார். மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் படி, சுற்றுச் சூழல் மன்றம் 90.4ன் சார்பில் பொதுமக்கள், மாணவ-மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.

Close