ரூபெல்லா தடுப்பூசி கட்டாயமாக  ​பெற்றோர்அனுமதியின்றியும் போடப்படும்: தமிழக அரசு

 

ரூபெல்லா- மீசில்ஸ் தடுப்பூசியானது பள்ளிகளில் மாணவர்களுக்கு கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு பெற்றோர்களின் அனுமதி தேவையில்லை என்றும் தமிழக அரசு பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.

ரூபெல்லா- மீசில்ஸ் வைரஸ் நோய்களைக் கட்டுப்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு அந்தந்தப் பள்ளிகளில் இலவசமாக தடுப்பூசிகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதனால் சில பக்க விளைவுகள் ஏற்படும் என்றும் அதற்கு வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்துகள் குழந்தைகளின் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்பதால் அந்த தடுப்பூசியை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்று சமூகவலைதளங்களில் கருத்துகள வைரலாக பரவின.
இதையும் மீறி ரூபெல்லா- மீசில்ஸ் திட்டத்தை மாநில அரசு அண்மையில் தொடங்கியது. சில இடங்களில் ஊசி போட்டுக் கொண்ட மாணவர்களுக்கு சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் பெற்றோர் பீதி அடைந்தனர். எனினும் இது மருந்து வேலை செய்கிறது என்பதற்கான அறிகுறிதான், இதை கண்டு பெற்றோர் அஞ்சத் தேவையில்லை என்றும் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த திட்டமானது இன்றுடன் முடிவடைந்த நிலையில் மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு ஏற்கெனவே தெரிவித்தது. ஒருசில தனியார் பள்ளிகள் அவர்களது குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி போட வேண்டுமா என்று அனுமதி கேட்டதில் பெற்றோர் வேண்டாம் என்று தெரிவித்து விட்டனர்.
இதைத் தொடர்ந்து பள்ளிகளில் ரூபெல்லா தடுப்பூசி கட்டாயம் போப்பட வேண்டும் என்றும் அதற்கு பெற்றோர்களின் அனுமதி தேவையில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்தது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவிக்கையில், ரூ.1000 மதிப்பிலான தடுப்பூசியானது மாணவர்களின் நலம் கருதி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் உலவும் கருத்துகளை யாரும் நம்ப வேண்டாம். தட்டம்மை, ரூபெல்லா உள்ளிட்ட வைரஸ் தாக்கத்தை தடுக்கவே இந்த ஊசி போப்படுகிறது. 9 மாத குழந்தை முதல் 15 வயது சிறுவர்கள் வரை இந்த ஊசியை போட்டுக் கொள்ளலாம். 85 லட்சம் மாணவர்களுக்கு இந்த ஊசி போட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

Close