ரொனால்டோ, யூ ஆர் கிரேட்!

நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கால்பந்தாட்ட நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரூ.50 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடு வாசல்களை இழந்து லட்சக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர்.ஏராளமான குழந்தைகள் பெற்றோர்களை இழந்து தவித்து வருகின்றனர். நிலநடுக்கத்தில் நிலைகுலைந்து போன நேபாளத்தை புனரமைக்கும் பணிக்கு உலக நாடுகள் நிதியுதவி அளித்து வருகின்றன.
அந்த வகையில் புகழ்பெற்ற கால்பந்து வீரரான ரொனால்டோ நேபாள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 மில்லியன் பவுண்டு அதாவது இந்திய மதிப்பில் 50 கோடி ரூபாய் நிதியுதவியாக அளித்துள்ளார். குழந்தைகள் நலனுக்காக செயல்பட்டு வரும் ‘சேவ் தி சில்ட்ரன்’ என்ற அமைப்பின் மூலம் இந்த தொகை நேபாள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்று சேரும். குறிப்பாக நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்கு இந்த தொகை பயன்படுத்தப்படவுள்ளது.
நேபாள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி செய்யுமாறு ரொனால்டோ  தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கேட்டுக் கொண்டதன் மூலமாகவும் அவரது ரசிகர்கள் நேபாள நாட்டுக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.
உலகிலேயே விளையாட்டு மூலம் அதிகம் சம்பாதிக்கும் வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார். இவரது ஆண்டு வருமானம் 80 மில்லியன் யூரோ என்பது குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Close