விமானிகள் அறையில் பெண்கள் – மாஸ் அதிர்ச்சி!!

கோலாலம்பூர்

துணை விமானி பாரிக்கும், மற்றொரு விமானியும் விதிமுறைகளை மீறி பெண்களை விமானிகள் அறைக்கு  அழைத்துச் சென்றுள்ளனர் என்று ஆஸ்திரேலிய ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியை அறிந்து மாஸ் நிறுவனம் அதிர்ச்சியடைந்துள்ளது.
இது குறித்து நேற்று இரவு மாஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், துணை விமானி பாரிக் அப்துல் ஹமீதுக்கு எதிராக சுமத்தப்பட்டிருக்கும் இந்த குற்றச்சாட்டு “மிக கடுமையானது” என்று குறிப்பிட்டுள்ளது.
“இந்த குற்றச்சாட்டால் நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம்” என்றும் மாஸ் சார்பில் கூறப்பட்டுள்ளது.
எனினும், மாஸ் நிறுவனம் காணாமல் போன MH370 விமானத்தை தேடும் பணியில் மிகத் தீவிரமாக இருப்பதால், தங்களது போக்கு மாறிவிடக்கூடாது என்பதில் மிக கவனமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
“எங்கள் விமானிகள் மற்றும் பயணிகளின் குடும்பத்தாரின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு அனைத்து ஊடகங்களும், பொதுமக்களும் மதிப்பளிக்க வேண்டும். இது அவர்களுக்கு மிகவும் கடினமான நேரம்” என்றும் மாஸ் வலியுறுத்தியுள்ளது.
“விமானப் பணியாளர்கள் மற்றும் பயணிகளின் குடும்பத்தினரின் நலம் தான் தற்போது எங்களுக்கு முக்கியமான ஒன்றாகத் தெரிகிறது.அதே நேரத்தில், பயணிகளின் பாதுகாப்பு அதை விட எங்களுக்கு முக்கியம்” என்றும் மாஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
‘நைன் நெட்வொர்க்’ என்ற ஆஸ்திரேலிய தொலைக்காட்சி நிலையத்தின் ‘Current Affair’ நிகழ்ச்சிக்கு பேட்டியளித்துள்ள தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஜோண்டி ரூஸ் என்ற பெண், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புக்கெட்டில் இருந்து கோலாலம்பூருக்கு பயணம் மேற்கொண்ட போது, தன்னையும், தனது தோழியையும் விமானிகள் தங்களது அறைக்கு அழைத்துச் சென்றனர் என்று தெரிவித்தார்.
அதே நேரத்தில், அந்த சிறிய அறையில் புகைபிடித்ததோடு மட்டுமல்லாது, தங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, அரட்டை அடித்தனர் என்றும் ரூஸ் தெரிவித்துள்ளார்
Close