TMMK பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை

உ.பி. மாநிலம் முசாப்பர்நகரில் கடந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற கலவரத்தில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. கடும் குளிரில் திறந்தவெளியில் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கும் சூழல் உருவாகியது.. இச்சூழலில் இக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு ஏற்படுத்தித் தரும் நோக்கத்துடன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் குழு ஒன்று பாதிக்கப்பட்ட முசாப்பர்நகர் மற்றும் ஷாம்லி மாவட்டங்களில் நேரில் கள ஆய்வுகளைச் செய்தது. இக்குழுவில் தமுமுக மூத்த தலைவர்கள் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ எஸ். ஹைதர் அலி பொருளாளர் ஒ.யூ.ரஹ்மதுல்லா தலைமை நிர்வாக குழு உறுப்பினர் சம்சுதீன் நாசர் உமரி ஆகியோர் இடம் பெற்றனர்.
தமுமுக குழு கடந்த பிப்ரவரி 18 தொடங்கி 6 நாட்கள் முசாப்பர்நகர் மற்றும் சாம்லி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களை நேரில் சந்தித்தது. பாதிக்கப்பட்ட ஊர்களையும் பார்வையிட்டது. தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு அகதிகள் போல் வாழும் மக்களுக்கு வீடுகள் மிக அவசியத் தேவை என்பதை தமுமுக குழு உணர்ந்தது. இந்த தேவையை முடிந்த அளவு பூர்த்திச் செய்யும் வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100 வீடுகள் கட்டிக் கொடுக்க தமுமுக முடிவுச் செய்துள்ளது.
முதல்கட்ட ஆய்விற்கு பிறகு குழு இரு பிரிவாக பிரிந்தது. பேராசிரியர் ஜவாஹிருல்லாவும் சகோதரர் எஸ். ஹைதர் அலியும் உபி தலைநகர் லக்னோவிற்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்திக்க சென்றனர். சகோதரர்கள் ஒ.யூ. ரஹ்மதுல்லாஹ்வும் மவ்லவி நாசர் உமரியும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரண்டாம் கட்ட ஆய்வுகளை தொடர்ந்தனர்.
லக்னோ வந்த பேராசிரியர் ஜவாஹிருல்லா மற்றும் சகோதரர் ஹைதர் அலி அடங்கிய தமுமுக குழு உ.பி. மாநில முதலமைச்சர் திரு. அகிலேஷ் யாதவ் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் திரு. ஆஜம் கான் ஆகியோரை சந்தித்து கள ஆய்வின் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டது.
முதலில் உத்தரபிரதேச அரசியலில் செல்வாக்குமிக்கவரும் சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளரும் சிறுபான்மையினர் நலன், நகர்புற வளர்ச்சி மற்றும் வக்ப் வாரியத் துறை அமைச்சருமான முஹம்மது ஆஜம் கானை ராம்பூரில் கடந்த பிப்ரவரி 22 அன்று சந்தித்து. மிக விரிவாக அவரிடம் முசாப்பர்நகர் கள ஆய்வு விவரங்களை தமுமுக குழு எடுத்துரைத்தது. பிப்ரவரி 24 அன்று சட்டமன்ற வளாகத்தில் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அவர்களை சந்தித்தது.
சட்டமன்றக் கூட்டம் நடந்துக் கொண்டிருந்த வேளையில் தமுமுக குழுவை சந்திக்க அவர் நேரம் ஒதுக்கிக் கொடுத்தார். உ.பி. சபாநாயகர் மத்தா பிரசாத் பாண்டேயின் அறையில் முதலமைச்சர் அகிலேஷ் தமுமுக தலைவர்களை வரவேற்று பேசினார். இப்பேச்சு வார்த்தையின் போது அமைச்சர் ஆஜம் கானும் சபாநாயகர் பாண்டேயும் உடன் இருந்தனர் 45 நிமிடங்கள் இப்பேச்சு வார்த்தை நடைபெற்றது. இறந்துப் போனவர்களின் குடும்பத்தினருக்கு உதவி தொகையை அதிகரித்துக் கொடுக்க வேண்டுமென்றும் காணமல் போனவர்களுக்கும் உதவித் தொகை அளிக்க வேண்டுமென்று தமுமுக முதலமைச்சரிடம் அளித்த்த கோரிக்கை முனுவில் குறிப்பிடப்பட்டிருந்து. இறந்து போனவர்களுக்கு ஏற்கெனவே அளித்த ரூ12 லட்சத்துடன் கூடுதலாக ரூ3 இலட்சம் அளிக்கப்படுமென்று முதல்வர் அகிலேஷ் குழுவினரிடம் தெரிவித்தார். இது தவிர காணமல் போனவர்களுக்கு ரூ 15 லட்சம் அளிக்கப்படும் என்றும் முதலமைச்சர் குழுவினரிடம் தெரிவித்தார். இது மட்டுமின்றி உச்சநீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது போல் முகாமில் இறந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ரூ2 லட்சம் அளிக்கப்படுமென்றும் அவர் தமுமுக குழுவினரிடம் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100 வீடுகள் கட்டிக்கொடுக்கும் தமுமுகவின் திட்டத்திற்கு தேவையான உதவிகளை தனது அரசு செய்யும் என்று முதலமைச்சர் அகிலேஷ் உறுதி அளித்தார்.
உத்தரபிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிப்பதின் அவசியத்தை தமுமுக குழுவினர் முதலமைச்சரிடம் வலியுறுத்தியதுடன் தமிழ்நாடு கேரளா மற்றும் கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ள முறைமைகள் குறித்த அரசாணைகளையும் வழங்கினர். இது குறித்து உடனே ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு தமுமுக வழங்கிய மனுவில் குறிப்பு எழுதி அமைச்சர் ஆஜம் கானிடம் தொடர் நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் அகிலேஷ் கூறினார்.
பின் வரும் கோரிக்கைகள் அடங்கிய மனு முதலமைச்சரிடம் அளிக்கப்பட்டது..
1. கலவரத்திற்கு பிறகு ஏராளமானவர்களை இன்னும் காணவில்லை என்று நாங்கள் நேரில் சந்தித்த பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். இவர்களை குடும்பத்தினருக்கும் நிவராணத் தொகை வழங்கப்பட வேண்டும்.
2. கலவரத்தில் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட மக்களுக்கு அரசு ரூ5 லட்சம் இழப்பீடு அளித்துள்ளது. இத்தொகை வீடு கட்டுவதற்கு நிலம் வாங்குவதற்கு மட்டுமே போதுமானதாக இருந்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் எங்களிடம் தெரிவித்தனர். எனவே இந்த இழப்பீடு தொகையையும் இறந்து போனவர்களுக்கான இழப்பீட்டையும் அதிகரிக்க வேண்டு. மேலும் கலவரத்தால் பாதிக்கப்பட்டு அரசிடம் இழப்பீடு பெற்றவர்கள் மீண்டும் தங்கள் இருப்பிடம் சென்றால் அரசு அளித்த இழப்பீட்டு தொகை திருப்பித் தரப்பட வேண்டுமென்ற உ.பி. அரசின் இரு அரசாணைகள் திரும்பப் பெறப்பட வேண்டும்.
3. முசாப்பர்நகர், சாம்லி மற்றும் பாக்பத்தில் வரலாறு காணத வகையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தை தூண்டியவர்கள் நடத்தியவர்கள் மீதும் கடமை ஆற்றத் தவறிய அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. கலவரத்தால் பாதிக்கப்பட்ட இந்த 3 மாவட்;டங்களில் வாழும் முஸ்லிம்கள் சமூக பொருளாதார நிலையில் மிகவும் பின் தங்கியுள்ளார்கள். இவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு பொருளாதார திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். இது போல் உ.பி. மாநிலத்தில் பிற்படுத்த்பட்ட முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5. 50 குடும்பங்களுக்கு குறைவான எண்ணிக்கையில் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ள கிராமங்களைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு அரசு இழப்பீடு அளிக்கப்படவில்லை என்பதை எங்கள் ஆய்வுகளின் போது அறிந்தோம். அத்தகையவர்களுக்கும் இழப்பீடு அளிக்க வேண்டும்.
6. கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் மூன்று மாவட்டங்களுக்கு சேர்த்து ஒரு சிறப்பு பணிக்காக காவல் துணைத் தலைவர் நியமிக்கப்பட வேண்டும். இருப்பிடத்தை விட்டு வெளியேறிய மக்கள் தங்கள் இடங்களுக்கு மீண்டும் செல்ல ஊக்குவிக்கப்பட வேண்டும். சகஜ நிலை திரும்பும் வரையில் மத்திய சிறப்பு பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

தகவல்: த மு மு க இணையம்

Close