Adirai pirai
posts

இரவில் எழுங்கள்..! தொழுங்கள்..!

      நாள் முழுதும் டென்ஷன்… பதற்றம்… சில ஆயிரம் அல்லது சில லட்சங்கள்
ரூபாய் லாபத்துக்காக மனிதர்கள் படும் பாட்டைப் பார்த்தால் வியப்பாக
இருக்கிறது! தமிழகத்தின் புகழ்பெற்ற சொற்பொழிவாளர் ஒருவர் அடிக்கடி ஒரு
நிகழ்வைக் குறிப்பிடுவார். ஒரு மனிதன் சொந்த வீடு கட்டவேண்டும் என்னும்
ஆசையில் இரவு பகலாக உழைத்தான்; படாதபாடு பட்டுப் பணம் சேர்த்தான்; சேர்த்த
பணம் மனை வாங்கவே போதவில்லை; கடன்  வாங்கினான்;  மாதந்தோறும் வட்டி
கட்டிவிடுவதாகச் சொல்லி கடனுக்கு மேல் கடன் வாங்கி அகலக் கால் வைத்தான்.

ஒரு
வழியாக வீடு கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், கடன் தொல்லை அதிகமாகி,
கழுத்தில் துண்டைப்போட்டு முறுக்காத குறையாக கடன் காரர்கள் மிரட்ட,  வேறு
வழியில்லாமல் கட்டிய புது வீட்டை விற்றுக் கடன்களை அடைக்க வேண்டியதாயிற்று.
விற்ற வீட்டைப் பார்த்துப் பெருமூச்சு விட்டபடியே அவன் வாழ்வும்
முடிந்தது. இது தேவையா? சொந்த வீடு கட்ட வேண்டாம் என்று சொல்லவில்லை.
தாராளமாகக் கட்டலாம். அதற்காக நிம்மதி இழந்து, தூக்கம் இழந்து, அமைதி
இழந்து, எதையோ பறிகொடுத்தது போல் விரக்தி அடைந்து… வீடு கட்டும் பிரச்னை
மட்டுமல்ல, மகளுக்கோ மகனுக்கோ திருமணம்  நடத்துதல், அலுவலகச் சிக்கல்கள்,
தொழில் போட்டிகள், வணிகச் சண்டைகள் என்று சதா பதற்றம்.. பதற்றம்..
பதற்றம்…மனம் அமைதி பெற துடிக்கிறது..!  என்ன வழி?

ஓர் அருமையான
வழியைக் காட்டுகிறது இஸ்லாமியத் திருநெறி. அதுதான் பின்னிரவுத்
தொழுகை(தஹஜ்ஜுத்). அதாவது, இரவு இரண்டு மணிக்குப் பிறகு,  வைகறை உதயம்
வரையிலான நேரம்தான் பின்னிரவுத் தொழுகைக்கான உரிய நேரம் என்று மார்க்க
அறிஞர்கள் கூறுகிறார்கள். உலகமே ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருக்கும்போது,
பிறருடைய தூக்கத்திற்கு இடையூறு இல்லாமல் எழுந்து, கைகால் முகம் கழுவி
தூய்மை செய்து கொண்டு, பேரண்டத்தைப் படைத்தவன் முன் கைகளைக் கட்டிப்
பணிவுடன் நின்று, மனம் உருகித் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். கருணை மிக்க
இறைவனுடைய நல்லடியார்களின் பண்புகளில் ஒன்றாக இந்தப் பின்னிரவு நேரத்
தொழுகையைக் குர்ஆன் குறிப்பிடுகிறது.

“அவர்கள் தங்கள் இறைவனின்
திருமுன் சிரம் பணிந்தும் நின்றும் வணங்கியவாறு இரவைக் கழிப்பார்கள்”
(குர்ஆன் 25:64). நம்பிக்கையாளர்களுக்குப் பின்னிரவுத் தொழுகை கட்டாயக்
கடமையன்று; ஆனாலும் பெரிதும் வலியுறுத்தப்பட்ட வழிபாடு ஆகும். நபிகள£ரும்
நபித்தோழர்களும் அவர்களுக்குப் பிறகு வந்த இஸ்லாமியப் பேரரசின் குடியரசுத்
தலைவர்களும் இறைவனுடனான தங்களின் நெருக்கத்தை வலுப்படுத்திக் கொள்வதற்கும்
மன அமைதியைப் பெறுவதற்கும் பின்னிரவுத் தொழுகையில் ஆர்வத்துடன் ஈடுபட்டு
வந்தனர் என்பது வரலாறு.

“இரவில்
எழுந்து தொழுவீராக. பாதி இரவு அல்லது அதைவிடச் சற்று குறைவாகவோ கூடுதலாகவோ
தொழுவீராக. மேலும், குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக.” (குர்ஆன் 73:24)

thanks : dinakaran