Adirai pirai
posts

அதிரையில் கடலோர பாதுகாப்பு மற்றும் மீனவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்

அதிராம்பட்டினம் மெயின் ரோட்டில் உள்ள‌ சமுதாய கூடத்தில் கடலோர
பாதுகாப்பு குழுமம் சார்பில் ஒருங்கிணைப்பு கலந்தாய்வு கூட்டம் நேற்று முன்தினம்
நடைபெற்றது. 

கடலோர பாதுகாப்பு குழும ஐ.ஜி
சொக்கலிங்கம் தலைமை வகித்தார். கூட்டத்தில்  கடற்படை, சுங்கத்துறை, வனத்துறை, வருவாய்துறை என
பல்வேறு துறை அதிகாரிகளும், தஞ்சை மாவட்டத்தில் உள்ள 37 மீனவ கிராம பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மீனவர்களின் முக்கிய
பிரச்னைகள் பற்றி பேசப்பட்டது. 
ஒவ்வொரு மீனவர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன்
வைத்தனர். முக்கியமாக அனைத்து மீனவர்களுக்கும் வாக்கி டாக்கி, ஜி.பி.எஸ். கருவி, லைப்ஜாக்கெட், சூரிய ஒளி மின்சாரம்
போன்றவை முன் வைக்கப்பட்டது. பின்னர் ஐ.ஜி.சொக்கலிங்கம் பேசுகையில், கடலில் தடை
செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்களை பிடிக்கக் கூடாது. இரட்டைமடி, சுருக்கு மடி ஆகிய
வலைகளை பயன்படுத்தக்கூடாது. 
கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இந்திய, சர்வதேச எல்லைக்குள்
மீன் பிடிக்க வேண்டும், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் போது படகிற்கு உரிய ஆவணங்களை
எடுத்துச் செல்ல வேண்டும். 
கடலில் சந்தேகப்படும் வகையில் மர்ம படகுகள் மற்றும்
அன்னிய நபர்கள் நடமாட்டம் இருந்தால் 1093 என்ற எண்ணை தொடர்பு கொண்டு
விபரங்களை கூறவும். கடலில் ஏற்படும் இயற்கை சீற்றங்களில் மீனவர்கள் அகப்பட்டுக்
கொண்டால் 1093 எண்ணை தொடர்பு கொண்டால், உடன் வந்து காப்பாற்றுவார்கள் என்றார்.