Adirai pirai
articles

தீ விபத்தில்லா தீபாவளியை தித்திக்கும் திண்பண்டங்களுடன் கொண்டாடுவோம்!

தீபாவளி என்றாலேயே வண்ண வண்ண ஆடைகளும், வானில் ஓளிரும் வெடிகளும், வாய் ஊர வைக்கும் இனிப்புகளுமே நம்மில் பலருக்கு நினைவில் வரும். தீபாவளியை கொண்டாடும் இந்துக்கள், இன்முகத்தோடு இனிப்புகளை இஸ்லாமிய, கிருஸ்தவ நண்பர்களுக்கு வழங்கி மதநல்லிணக்கத்துடன் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றனர்.

நாடே மகிழ்ச்சியில் திளைக்கும் இந்த தீபாவளி பண்டிகையில் எதிர்பாராமல் நிகழும் பட்டாசு விபத்துக்கள், சிலருக்கு நீங்கா துன்பங்களை விளைவித்து விடுகின்றன. பட்டாசுகளை வெடிக்கும் போது அதற்குறிய பாதுகாப்பு நெறிமுறைகளை பலர் கவனிக்க தவறிவிடுவதால் பதற வைக்கும் பட்டாசு விபத்து செய்திகள் தீபாவளி அன்று தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டன.

விபத்துக்கள் பெரும்பாலும் பட்டாசுகளை வைத்து சாகசம் செய்ய முயலும் போது தான் ஏற்படுகின்றன. கைகளில் பட்டாசுகளை கொளுத்திப் போடுவது, சினிமா பானியில் வாயில் பட்டாசுகளை வைத்து பறக்க விடுவது என இளைஞர்கள் மகிழ்ச்சியில் பல ஜாலங்களை நிகழ்த்துகின்றனர். அவர்களின் மகிழ்ச்சி கடைசியாக சோகத்தில் முடிவடைந்து விடுகிறது. அரக்கனை வீழ்த்திய மகிழ்ச்சியில் கொண்டாடப்படும் இந்த தீபாவளி பண்டிகையின் போது நம்மில் பலர் அரக்கர்களாகி விடுகின்றனர். பட்டாசுகளை வாயில்லா பிராணிகளின் வால்களில் கட்டி விட்டு வெடிக்க செய்வது போன்ற மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை தவிர்த்துக் கொள்வது நல்லது.

ராக்கெட், சரவெடி போன்றவற்றை குடிசை பகுதிகளில் வெடிக்காமல் தவிர்ப்பதன் மூலம் பெரிய தீவிபத்துக்கள் ஏற்படுவதில் இருந்து தடுக்கலாம். பெரிய வெடிகளை கூட நம்பிவிடலாம். ஆனால், புஸ்வாணம், சங்கு சக்கரம் போன்ற சிறிய வெடிகள் எப்போது வெடிக்கும் என்று யாருக்கும் தெரியாது? அவற்றை பாதுகாப்பாக கையாளவேண்டியதும் அவசியம்… மத்தாப்புக்களை பயன்படுத்தும் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் கண்ணாடிகள் அணிந்துகொள்வதன் மூலம் கண்களை தீப்பொறிகள் தாக்குவதில் இருந்து பாதுகாக்கலாம்.

பட்டாசுகளை வெடிக்கும் பெண்கள் உடைகளை கவனத்தில் கொள்வது அவசியம். பெரும்பாலும் பாலிஸ்டர் ஆடைகளை தவிர்த்து காட்டன் ஆடைகளை அணிவதன் மூலம் தீ விபத்துக்களில் இருந்து தங்களை காத்துக்கொள்ள முடியும். பட்டாசுகளை வெடிப்பதற்கு தீக்குச்சிகளை பயன்படுத்துவதை தவிர்த்து நீளமான ஊதுபத்திகளை பயன்படுத்துவது பாதுகாப்பாக அமையும். பட்டாசுகளை வெடிக்கும் பகுதிகளில் தண்ணீரை முன்கூட்டியே வைத்துக்கொள்வதன் மூலம் உடனடியாக தீயை அணைக்க முடியும். மேலும் சாலைகளில் கிடக்கும் வெடிக்காத பட்டாசுகளால் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளிலும் அடிக்கடி விபத்துக்களில் சிக்கிக்கொள்கின்றனர்.

இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு பட்டாசுகளை பாதுகாப்பாக கையாண்டு தீ விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவோம்…

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி