Adirai pirai
articles islam இந்தியா

அதன் பெயர் “லவ் ஜிஹாத்” என்றால், இதன் பெயர் என்ன?

கடந்த 6 மாதங்களாக கேரளாவை சேர்ந்த அகிலா என்ற ஹோமியோபதி மருத்துவம் படித்த இளம் பெண், இஸ்லாத்திற்கு மாறி தனது பெயரை ஹாதியா என மாற்றிக்கொண்டு ஜகான் என்ற இஸ்லாமியரை திருமணம் செய்துகொண்டார். இதற்கு தெரிப்பு தெரிவித்த ஹாதியாவின் பெற்றோர்கள், RSS தூண்டுதலின் பேரில் “ஜகான் ஒரு ஐஎஸ் தீவிரவாதி எனவும், தனது மகனை லவ் ஜிஹாதுக்கான மதம் மாற்றி சிரியாவுக்கு அழைத்து செல்வதாகவும்” உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். எந்த ஒரு முகாந்திரமும் இல்லாத இந்த வழக்கில் நீதிமன்றமும் சட்டத்திற்கு புறம்பாக அவர்களின் திருமணத்தை ரத்து செய்ய உத்தரவு பிறப்பித்ததோடு, ஜகானை கைது செய்யவும், ஹாதியாவை வீட்டுக்காவலில் அடைக்கவும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு மனித உரிமை ஆர்வலர்களையும், சிறுபாண்மையின மக்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் கடந்த 18 ஆம் தேதி ஹாதியாவின் தந்தையின் ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்த கேரள நீதிமன்ற அமர்வு, “மதக்கலப்புத் திருமணங்களை ஒன்று லவ் ஜிஹாத் என்று அழைத்து பரபரப்பாக்கும் போக்கு இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதயங்கள் இணைந்து திருமணம் செய்து கொண்டாலும் இப்படி அழைக்கும் போக்கு நிலவுகிறது. என்றும் எந்த முடிவுகளையும் எடுக்க ஹாதியாவுக்கு உரிமை உள்ளது” என கூறியது.

இது ஒருபுறம் இருக்க கடந்த சில நாட்களுக்கு முன்பாக கோவையை சேர்ந்த ருக்‌ஷானா என்ற பெண்ணை பிரசாந்த் என்ற பொறியாளர் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குற்றவாளி கைது செய்யப்பட்டாலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரணை முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த கார்த்திக் என்ற நபர் ஷாகிரா என்ற பெண்ணை ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த மாதம் பதிவுத் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் ஷாகிரா திருமணமான சில நாட்களில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். திருமணம் ஆன பிறகு கார்த்திக்கின் நடவடிக்கை மாறியதாகவும், வீட்டில் தன்னை கொடுமை படுத்தியதாகவும் கூறிய ஷாகிராவின் உறவினர்கள், இது கொலை என்றும் அதற்கு கார்த்திக் தான் காரணம் எனவும் குற்றம்சாட்டுகின்றனர்.

இதே போல் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக திருச்சியை சேர்ந்த தவ்பீக் சுல்தானா என்ற 13 சிறுமி ஒரு கும்பலால் ரயில் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் முடிவுகளும் இன்னும் வெளியிடப்படவில்லை. இப்படி காவிகளால் தொடர்ந்து இஸ்லாமிய பெண்கள் காதல் என்ற பெயரில் ஏமாற்றி பலாத்காரம் செய்யப்பட்டும் படுகொலை செய்யப்பட்டும் வருகின்றனர்.

ஆனால் இந்த வழக்குகளை கிடப்பில் போட்டுவிட்டு உண்மையாக இஸ்லாம் மதத்தை விரும்பி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்யும் பெண்களை லவ் ஜிஹாத் என்ற பெயரில் மத்திய அரசின் கூலிப்படையான NIA வும் நீதிமன்றங்களும் துன்புறுத்தி வருகின்றன.

பல மாற்றுமத பெண்கள் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் ஒருவராவது லவ் ஜிஹாத் என்ற பேரில் ஐஎஸ் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டதை ஆதாரத்துடன் நிரூபிக்கமுடியுமா? இவர்களில் ஒருவராவது கணவனால் படுகொலை செய்யப்பட்டது உண்டா? இவர்களில் ஒருவராவது கணவனின் கொடுமையால் தற்கொலை செய்ததாக வழக்குகள் உள்ளதா…? இந்த கேள்விகள் அனைத்துக்கும் இல்லை என்றே பதில் வரும்.

அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும், மத மாற்று திருமணங்களை செய்துகொள்கின்றனர். ஆனால், அரசும், நீதிமன்றமும், காவல்துறையும், உளவுத்துறையும் இஸ்லாமியர்களை மட்டுமே தாக்குவதில் குறியாக உள்ளனர். தேசத்தில் மத கிரியைகளை தவிர்த்து அனைவருக்கும் ஒரே சட்டம் வகுக்கப்பட்டுள்ள நிலையில் நீதி தேவதையின் தராசு ஒருபக்கம் மேலும் மற்றொரு பக்கம் கீழும் இருப்பது வேதனைக்குறியது…

துரு பிடித்த தராசை வைத்துக்கொண்டு நீதி வழங்குவதால் அந்த தராசின் துரு சட்டத்தையும் சமூக நீதியையும் கிழித்துக் கொண்டிருக்கிறது. அந்த தராசை சீர்படுத்தி நீதிகாக்கும் கோமான்களாக நீதிபதிகளும், அரசும் செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் பார்முலா செயல் இழந்து விடும்…

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி