Adirai pirai
posts

நபி(ஸல்) வரலாறு-11 (மக்கா வாழ்க்கை துவக்கம்)

அதிரை பிறைநபி (ஸல்) அவர்களுக்கு இறைத்தூதர் எனும் கௌரவம் அருளப்பட்டதற்குப் பிறகுள்ள வாழ்க்கையை இரண்டு வகைப்படுத்தலாம். அவை ஒன்றுக்கொன்று தன்மையால் மாறுபடுகிறது.

1. மக்காவில் வாழ்ந்த காலம். இது ஏறத்தாழ 13 ஆண்டுகள்.

2. மதீனாவில் வாழ்ந்த காலம். இது முழுமையாக 10 ஆண்டுகள்.

இவ்விரு வாழ்க்கையும் மாறுபட்ட பல நிலைகளைக் கொண்டிருக்கிறது. அவை ஒவ்வொன்றுக்கும் பல தனித்தன்மைகள் உண்டு. நபி (ஸல்) அழைப்புப் பணியில் கடந்து வந்த பாதைகளை ஆழ்ந்து கவனிக்கும்போது இதனை நாம் அறிகிறோம்.

மக்கா வாழ்க்கையை மூன்று கால கட்டங்களாகப் பிரிக்கலாம்.

1) மறைமுக அழைப்பு: இது மூன்று ஆண்டுகள் வரை நீடித்தது.

2) மக்காவாசிகளுக்கு பகிரங்க அழைப்பு: இது நான்காம் ஆண்டிலிருந்து ஹிஜ்ரத்” வரை தொடர்ந்தது.

3) மக்காவுக்கு வெளியே அழைப்புப் பணி: இது பத்தாம் ஆண்டின் இறுதியிலிருந்து நபி (ஸல்) அவர்களின் இறுதிக்காலம் வரைத் தொடர்ந்தது.

இவற்றைச் சுருக்கமாக பார்த்துவிட்டு மதீனா வாழ்க்கை நிலைகளை பின்னர் காண்போம்.

நபித்துவ நிழலில்
ஹிரா குகையில்

நபி (ஸல்) அவர்களுக்கு நாற்பது வயது நெருங்கியது. அவர்களது ஆழிய சிந்தனை, தனிமையை விரும்பியது. சத்துமாவையும் தண்ணீரையும் எடுத்துக் கொண்டு மக்காவிலிருந்து இரண்டு மைல் தொலைவிலுள்ள நூர் மலையின் ஹிரா குகைக்குச் செல்வார்கள். அக்குகை நான்கு முழ நீளமும் ஒன்றே முக்கால் முழ அகலமும் கொண்டது. ரமழான் மாதத்தில் அங்கு தங்கி வணக்க வழிபாடுகளிலும், இப்புவியையும் அதைத் தாண்டிய பிரபஞ்சத்தையும் இயக்கும் அபார சக்தியைப்பற்றி சிந்திப்பதிலும் ஈடுபடுவார்கள். சமுதாயம் கொண்டிருந்த இணைவைக்கும் இழிவான கொள்கையையும், பலவீனமான அதன் கற்பனைகளையும் அவர்கள் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதே நேரத்தில் மனதிருப்தியுடன் வாழ்க்கையைத் தொடர தெளிவான, நடுநிலையான வாழ்க்கைப் பாதையும் அவர்களுக்கு முன் இருக்கவில்லை.

தனிமையின் மீதான அவர்களது விருப்பம் அல்லாஹ்வின் ஏற்பாடு என்று சொல்லலாம். நபி (ஸல்) அவர்கள் இதற்கு முன் உலக அலுவல்களில் ஈடுபட்டு வந்தார்கள்; வியாபாரம் செய்து வந்தார்கள். இப்போது அவை அனைத்தையும் விட்டு தனிமையை நாடுகிறார்கள். ஏனெனில், மாபெரும் பொறுப்பைச் சுமக்க அவர்கள் தயாராக வேண்டும்; உலக வரலாற்றை மாற்றி மக்களுக்கு நேரிய பாதையைக் காட்ட ஆயத்தமாக வேண்டும். இவ்வாறு நபித்துவம் வழங்குவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தனிமையின் மீதான விருப்பத்தை அல்லாஹ் அவர்களுக்கு ஏற்படுத்தினான். ஆக மாதத்தின் பெரும் பகுதியை நபி (ஸல்) அவர்கள் தனிமையில் கழித்து வந்தார்கள். தனிமையை விசாலமான மனஅமைதியுடன் கழித்தது மட்டுமல்லாமல் இந்த பிரபஞ்சத்தை இயக்கி வரும் மறைபொருள் பற்றி ஆழமாக சிந்தித்தார்கள். ஆம்! அல்லாஹ்வின் நாட்டப்படி அம்மறைபொருளுடன் தொடர்பு கொள்ள இதோ நேரம் நெருங்கிவிட்டது. (இது குறித்து மேல் விவரங்களை ஸஹீஹுல் புகாரி, தாரீக் இப்னு ஹிஷாம் மற்றும் வரலாற்று நூல்களில் காணலாம். முதன்முதலாக அப்துல் முத்தலிப் ஹிரா குகையில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தார். ரமழானில் அங்கு சென்று தங்குவார். ஏழை எளியோருக்கு உணவளிப்பார். (இப்னு கஸீர்)

ஜிப்ரீல் வருகை

பரிபூரணத்தின் தொடக்கமாகிய 40 வயது நிறைவானபோது (பல நபிமார்களுக்கு நாற்பதாவது வயதில்தான் நபித்துவம் (நுபுவ்வத்) அருளப்பட்டது என்று சொல்லப்படுகிறது), நபித்துவ அடையாளங்கள் தெரிய ஆரம்பித்தன.

அவற்றில் சில: மக்காவிலிருந்த கல் ஒன்று அவர்களுக்கு ஸலாம் கூறி வந்தது உண்மையான கனவுகளைக் கண்டார்கள்; அவை அதிகாலையின் விடியலைப் போன்று நிதர்சனமாக நடந்து விடும்; இந்த நிலையில் ஆறு மாதங்கள் கழிந்தன நபித்துவ பணியாற்றியதோ 23 ஆண்டுகள், உண்மைக் கனவுகள் நபித்துவத்தின் 46 பங்குகளில் ஒரு பங்காகும்.

அது ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்த மூன்றாம் ஆண்டு ரமழான் மாதம். அல்லாஹ் அகிலத்தாருக்கு தனது கருணையைப் பொழிய நாடினான். முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நபித்துவத்தை வழங்கி சிறப்பிப்பதற்காக மேன்மைமிகு குர்ஆனின் சில வசனங்களுடன் வானவர் ஜிப்ரீலை அவர்களிடம் அனுப்பி வைக்கிறான்.

தெளிவான சான்றுகளை ஆராயும்போது அது ரமழான் 21வது பிறை திங்கட்கிழமை என்ற முடிவுக்கு வரலாம். (கி.பி. 610 ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி) அந்நாளில் அவர்களது வயது பிறை கணக்குப்படி மிகச் சரியாக 40 ஆண்டுகள், 6 மாதங்கள், 12 நாள்களாகும். சூரிய கணக்குப்படி 39 ஆண்டுகள், 3 மாதங்கள் 20 நாள்களாகும்.

இறை நிராகரிப்பு, வழிகேடு போன்ற அனைத்து இருள்களையும் அழித்து வாழ்க்கைக்கு ஒளிமிக்க பாதையை அமைத்துத் தந்த நபித்துவத்தின் இந்த முக்கிய நிகழ்ச்சியைப் பற்றி அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறக் கேட்போம்:

“நபி (ஸல்) அவர்களுக்கு வந்த வஹி (இறைச்செய்தி) தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளாகவே ஆரம்பத்தில் இருந்தது. அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அதிகாலையின் விடியலைப் போன்று அவை தெளிவாக அப்படியே நடக்கும். பின்னர் தனிமையை விரும்பினார்கள். ஹிரா குகையில் தனித்திருந்து பல இரவுகள் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். பிறகு தனது குடும்பத்தாரிடம் திரும்பி வருவார்கள். இதற்காக உணவையும் தம்மோடு எடுத்துச் செல்வார்கள். உணவு தீர்ந்தவுடன் கதீஜா (ரழி) அவர்களிடம் வந்து மீண்டும் உணவை எடுத்துச் செல்வார்கள். இந்த நிலையில்தான் ஹிரா குகையில் அவர்களுக்கு வஹி வந்தது. வானவர் நபியவர்களிடம் வந்து, “ஓதுவீராக!” என்றார். அதற்கவர்கள் “நான் ஓதத் தெரிந்தவனில்லையே!” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்நிலையைப் பற்றி பின்வருமாறு விவரித்தார்கள்: பிறகு அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவுக்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு “ஓதுவீராக!” என்றார். (அப்போதும்) “நான் ஓதத் தெரிந்தவனில்லையே!” என்றேன். மீண்டும் என்னை இறுகக் கட்டியணைத்துவிட்டு “ஓதுவீராக!” என்றார். (அப்போதும்) “நான் ஓதத் தெரிந்தவனில்லையே!” என்றேன். அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையும் கட்டியணைத்துவிட்டு,

(நபியே! அனைத்தையும்) படைத்த உங்களது இறைவனின் பெயரால் (எனது கட்டளைகள் அடங்கிய குர்ஆனை) நீங்கள் ஓதுவீராக! அவனே மனிதனை கருவிலிருந்து படைக்கின்றான். (நபியே! பின்னும்) நீங்கள் ஓதுங்கள்! உங்களது இறைவன்தான் மகா பெரும் கொடையாளி! (அல்குர்ஆன் 96 : 1-6) என்ற வசனங்களை ஓதிக் காட்டினார்.

பிறகு அந்த வசனங்களுடன் இதயம் நடுங்க (தமது துணைவியார்) கதீஜா (ரழி) அவர்களிடம் வந்து “என்னைப் போர்த்துங்கள், என்னைப் போர்த்துங்கள்” என்றார்கள். கதீஜா (ரழி) நபி (ஸல்) அவர்களைப் போர்த்தினார்கள். (நடுக்கம் தீர்ந்ததும்) கதீஜாவிடம் நடந்த செய்தியைத் தெரிவித்து விட்டுத் தமக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ எனத் தாம் அஞ்சுவதாகக் கூறினார்கள். அதற்கு கதீஜா (ரழி) “அவ்வாறு கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் உங்களை ஒருபோதும் இழிவுபடுத்தமாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) சுமைகளை சுமந்து கொள்கிறீர்கள். வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; உண்மையான சோதனைகளில் (சிக்குண்டோருக்கு) உதவி புரிகின்றீர்கள்” என்றார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களைத் தமது தந்தையின் உடன் பிறந்தவரான ‘நவ்ஃபல்’ என்பவன் மகன் ‘வரகா“விடம் அழைத்துச் சென்றார்கள்.

வரகா கிருஸ்துவராக இருந்தார். அவர் இப்ரானி (ஹிப்ரூ) மொழியை அறிந்தவர்; இன்ஜீல் வேதத்தைக் கற்றவர்; வயது முதிர்ந்தவர்; கண்பார்வையற்றவர்; அவரிடம் கதீஜா (ரழி) “என் சகோதரரே! உம் சகோதரன் மகன் கூறுவதைக் கேளுங்கள்!” என்றார். “என் சகோதரர் மகனே! நீர் எதைக் கண்டீர்!” என வரகா கேட்க, நபி (ஸல்) அவர்கள் தாம் பார்த்த செய்திகளை அவரிடம் சொன்னார்கள். அதற்கு வரகா “இவர்தாம் மூஸாவிடம் இறைவன் அனுப்பிய நாமூஸ் (ஜிப்ரீல்) ஆவார்” என்று கூறிவிட்டு, உங்களது சமூகத்தார் உங்களை உங்கள் ஊரிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருக்க வேண்டுமே என்று அங்கலாய்த்தார். நபி (ஸல்) அவர்கள் “மக்கள் என்னையா வெளியேற்றுவார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கவர் “ஆம்! நீங்கள் கொண்டு வந்திருப்பது போன்ற சத்தியத்தைக் கொண்டு வந்த எந்த மனிதரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. (நீங்கள் வெளியேற்றப்படும்) அந்நாளில் நான் உயிருடன் இருந்தால் உங்களுக்கு பலமான உதவி செய்வேன்” என்று கூறினார். இந்நிகழ்ச்சிக்குப் பின் வரகா குறுகிய காலத்தில் இறந்துவிட்டார். இத்துடன் வஹி சிறிது காலம் நின்றுவிட்டது. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)