முறிவு

மணமுறிவு ஏற்படுதற் காரணம்
….மனமுறிவு உண்டாதல் ஆகுமே
குணமறிந்து விட்டுக்கொ டுத்தலே
…குடும்பத்தில் இன்பத்தை வளர்க்குமே
பணம்பறிக்கும் எண்ணமெலாம் இல்லறம்
…பாழ்பட்டுப் போவதற்கு அறிகுறி
உணர்வறிந்தப் பாலியலில் இன்பமே
…உதட்டளவில் பழகுவதால் துன்பமே!
இணைகோடு இணையாது போயினும்
….இணைபிரியா உறவுகளில் இரயிலின்
இணைசேரா தண்டவாளம் மீதினில்
…இரயிலும்தான் செல்லுதலைப் போலவே
துணையோடு ஒத்துபோகும் நீயுமே
….துன்பமிலாப் பயணத்தில் வெல்லுக
வீணையோடு இணைகின்ற பாடலும்
….வெற்றியான தாம்பத்யம் போலவே!
முதலாளி தொழிலாளி உறவினில்
……முறிவும்தான் ஏற்படுதற் காரணம்
முதலில்நீ ஒப்பந்த நிபந்தனை
…முறித்துவிட்டு விருப்பம்போல் நடப்பதே
உதவாத காரணங்கள் சொல்லியே
..ஒதுங்குகின்றாய்ப் பணிநேர கடமையில்
அதனாலே உங்கட்குள் முறிவுகள்
….அனுதினமும் வருவதையும் காண்பீரே!
சந்தேகம் கொண்டாலே நட்பினில்
…சந்தோசம் முறிந்துவிடும் விரைவுடன்
உந்தேகம் அவன்தேகம் வேறுதான்
….உயிருக்குள் உயிராகப் பழகினால்
உந்தேசம் அவன்தேசம் மாறியும்
…உள்ளன்பில் வென்றிடுவாய் யாரையும்
வந்தாரை வாழவைக்கும் தமிழகம்
…வண்டமிழ்போல் போற்றுவது நட்பையே!
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர் 
“கவித்தீபம்”, “கவியன்பன்” கலாம்
அதிராம்பட்டினம்  பாடசாலை), 
அபுதபி               (தொழிற்சாலை)
Close