தெருவில் கிடந்த 13 ஆயிரம் திர்ஹம் பணத்தை சேர்ப்பித்த சிறுமியை கவுரவித்த சார்ஜா போலீசார்!

சார்ஜாவில் தெருவில் கண்டெடுத்த 13 ஆயிரம்  திர்ஹம் பணத்தை சேர்ப்பித்த 4 வயது சிறுமியை சார்ஜா போலீசார் பாராட்டி கவுரவித்துள்ளனர்.

இங்குள்ள அல் புஹைரா பகுதியில் கடந்த மார்ச் மாதம் 7-ம்தேதி தனது தாயாருடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஃபராட் அலைன் அடிக்-உர் ரஹ்மான் என்ற 4 வயது பாகிஸ்தான் நாட்டு சிறுமி கீழே கிடந்த ஒரு காகித உறையை கண்டெடுத்தார்.

அதனுள்ளே ஏராளமான பணம் இருந்ததை கண்ட அந்த சிறுமி, உடனடியாக அந்த உறையை தவறவிட்ட நபரிடம் ஒப்படைக்குமாறு தாயாரிடம் கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து,   தந்தை  அடிக்-உர் ரஹ்மான் மற்றும் மகளுடன் காவல் நிலையத்துக்கு சென்ற ஃபராட் அலைனின் தாயார் நடந்த சம்பவத்தை தெரிவித்து, 13 ஆயிரம் திர்ஹம்  (இந்திய மதிப்புக்கு சுமார் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்)  பணம்  இருந்த  அந்த  உறையை  போலீசாரிடம்  ஒப்படைத்தார்.

கீழே கிடக்கும் காகிதத்தில் ஏதாவது அரபி எழுத்து தெரிந்தால் அதை குர்ஆனின் வசனமாக இருக்கும் என்று எடுத்துப் படிக்கும் பழக்கம் தங்கள் மகளுக்கு உண்டு. அவ்வகையில், பணத்துடன் கூடிய இந்த உறையையும் அவள் எடுக்க நேர்ந்தது என போலீசாரிடம் பெற்றோர் தெரிவித்தனர்.

அந்தப் பணம் இன்னொரு மாணவர் பள்ளிக் கட்டணம் செலுத்துவதற்காக கொண்டு சென்றபோது தவறுதலாக தொலைத்தப் பணம் என்பதை அறிந்த போலீசார் அந்த தொகையை உரியவரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில்,  இந்த  சம்பவம் நடைபெற்று சுமார் 2 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் சிறுமி ஃபராட் அலைன் அடிக்-உர் ரஹ்மான் மற்றும் அவரது பெற்றோரை சார்ஜா போலீஸ் துறை இயக்குனரான கர்ணல் ஆரிப் ஹஸன் பின் ஹுடைப் தனது அலுவலகத்துக்கு வரவழைத்தார்.

ஃபராட் அலைனின் நேர்மையை வெகுவாக பாராட்டிய அவர், அந்த நேர்மையை கவுரவிக்கும்  விதமாக  சான்றிதழ்  அளித்து  வாழ்த்தினார்.

Advertisement

Close