விவசாயத்துக்கு மண் வேண்டாம்… மீன் போதும்… கலக்கும் மாடர்ன் விவசாயிகளான சமீர், நுஹுமான்

இராமநாதபுரம் மாவட்டம், தண்ணீர் பஞ்சத்துக்கு பெயர் போன ஊர். தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்திடுவேன் என்ற உடனே ஞாபகத்துக்கு வரும் ஊர் தான் இந்த இராமநாதபுரம். இந்த மாவட்டத்துக்கு உட்பட்ட தேவிபட்டினத்தை சேர்ந்த சமீர் அஹமதுக்கு (வயது 32) விவசாயத்தின் மீது ஒரு ஈர்ப்பு. நிலத்தடி நீர் இல்லை மழை இல்லை, எப்படி வேளாண்மை செய்வது என அவருக்கு ஒரு சந்தேகம்.

MCA படித்தவரான இவர் துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது ஆர்வத்தை தன் நண்பர் நஜீபிடம் பகிர்ந்து கொண்டார். அவர் இவருக்கு “அக்வா போனிக்ஸ்” என்னும் மண் இன்றி வேளாண்மையை செய்யும் முறையை அறிமுகம் செய்தார். இதையடுத்து இந்த முறையை தனது மற்றொரு நண்பர் நுஹுமான் பரீத்துடன் சேர்ந்து வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.

ஆக்வா போனிக்ஸ் என்றால் என்ன?

ஆக்வா போனிக்ஸ் என்பது நீரில் வாழும் உயிரினங்களை கொண்டு இயங்கும் ஒரு வேளாண்மை முறை. இதற்கு நம் குளங்களில் கிடைக்கும் கெண்டை மீனையே பயன்படுத்தலாம். அக்வா போனிக்ஸ் முறைக்கு இவர் வைத்த பெயர் “நீர் வாழ் வேளாண்மை”. குறைந்த நீர் செலவு, குறைந்த இடம் வசதி, குறைந்த நேரத்தில், அதிக மகசூல் ஆகியவற்றை இதன் மூலம் பெற முடியும் என்கிறார் சமீர்.

இதுஎப்படிஇயங்குகிறது?

இது ஒரு சுழற்சியில் இயங்குகிறது. இந்த சுழற்சியாவது நீரில் வாழும் மீன் தன் கழிவை நீரில் கலக்கும் அந்த கழிவு கலந்த நீரில் செடிகளுக்கு தேவையான நல்ல உரம் உள்ளது அதே நேரம் இந்த கழிவு கலந்த நீர் மீனுக்கு நச்சு. அதனால் மோட்டார் பம்பை பயன் படுத்தி அந்த கழிவு நீரை மீன் வளரும் தொட்டியில் இருந்து செடிகள் வளரும் தொட்டிக்கு அனுப்ப வேண்டும். செடிகள் தங்களுக்கு தேவையான சத்துக்களை எடுத்த பின்பு மீண்டும் அந்த நீரானது மீண்டும் மீன் வளரும் தொட்டிக்குள் செலுத்த படும். இந்த சுழற்சியில் மீனுக்கு ஆகாத நச்சு நீங்கி மீன் ஆரோகியமாக வளரவும் உதவிடும். செடிக்கு தேவையான உரமும் நேரடியாக கிடைத்துவிடும். இந்த முறை முற்றிலும் மண்ணை பயன்படுத்தாமலே இயங்குகிறது.

இது குறித்து கருத்து தெரிவிக்கும் சமீர்,

“எனக்கு இந்த முறையை அறிமுகம் செய்த முஹம்மது நஜீப், என்னுடைய இந்த முயற்சியை அங்கீகரித்து தொழில் கூட்டாளியாய் சேர்ந்து முதலீட்டை பகிர்ந்து கொண்ட நுகுமான் பரீத், என்னுடைய இந்த முயற்சியை மெய்மை படுத்த உடல் உழைப்பை பகிர்ந்து கொண்ட நஜிபுல்லாஹ், யாசிர் மற்றும் திவாகர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இளைஞர் சமீரின் இந்த புதிய அருமையான முயற்சிக்கு அதிரை பிறையின் பாராட்டுக்களை தெரிவித்துகொள்கிறோம்.

Close