Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் நடைபெறும் இந்திய பறவை மனிதர் Dr.சலீம் அலியின் பிறந்தநாள் விழா..!

1876 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் நாள் அன்றைய பம்பாய் மாநிலத்தில் கேத்வாடி என்ற ஊரில் சலீம் அலி பிறந்தார்.

உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநர் மற்றும் இயற்கையியல் அறிஞரான இவர் இந்தியாவில் முதன்முதலில் பறவைகளைப் பற்றிய முழுமையான தகவல்களை சேகரித்தவர். பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் புரவலராக விளங்கிய சலீம் அலி எழுதிய பறவைகளின் வாழ்க்கை, பழக்க வழக்கங்கள் குறித்த கட்டுரைகளும், நூல்களும் உலகப் புகழ் வாய்ந்தவை.

சலீம் அலி பறவைகளின் நண்பராகவும், பாதுகாவலராகவும் விளங்கியதோடு மட்டுமன்றி, இயற்கைப் பாதுகாப்பிலும் பெரும் நாட்டம் கொண்டவர். பறவைகளின் நல்வாழ்வும், பாதுகாப்பும், இயற்கைப் பாதுகாப்போடு பின்னிப்பிணைந்தவை என்ற சூழியல்சார்ந்த கருத்தில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார். இந்திய, பாகிஸ்தான் நாட்டுப் பறவைகளின் கையேடு (Handbook of the Birds of India and Pakistan) மற்றும் தன்வரலாற்று நூலான ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி (The Fall of Sparrow) ஆகிய நூல்கள் சலீம் அலியின் முக்கிய நூல்களாகும்.

இவரது பிறந்த நாளான நவம்பர் 12 ஆம் தேதி அதிரை சுற்றுசூழல் மன்றம் சார்பாக சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இமாம் ஷாபி பள்ளி வளாகத்தில் உள்ள சுற்றுசூழல் மன்ற அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற மாவட்ட வன அலுவலர் மு.அன்பழகன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுரையை நிகழ்த்த உள்ளார். இதில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.