Adirai pirai
posts

நபி(ஸல்) வரலாறு-09 (அருள் நபியின் அறிய குணங்கள்)

அதிரை பிறைமாநபிக்காக மழைபொழிதல்

ஜல்ஹுமா இப்னு உர்ஃபுதா கூறுகிறார்: கடும் பஞ்ச காலத்தில் நான் மக்கா சென்றேன். “கணவாய்கள் வரண்டுவிட்டன. பிள்ளைக்குட்டிகள் வாடுகின்றனர். வாருங்கள்! மழை வேண்டி பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று குறைஷியர்கள் அபூதாலிபிடம் கூறினர். அவர் வெளியேறி வந்தார். அவருடன் மேகம் மறைக்காத சூரியனின் பிரகாசமுடைய ஒரு சிறுவரும் இருந்தார். மேலும், சிறுவர்கள் பலர் அபூதாலிபைச்
சுற்றிலும் இருந்தனர். அபூதாலிப் அச்சிறுவரை தூக்கி அவரின் முதுகை சேர்த்துவைத்து பிரார்த்தித்தார். அபூதாலிபின் தோள் புஜத்தை அச்சிறுவர் பற்றிக் கொண்டார். மேகமற்றுக் கிடந்த வானத்தில் அங்கும் இங்குமிருந்து மேகங்கள் ஒன்று திரண்டன. பெரும் மழையால் கணவாய்களில் வெள்ளம் கரை புரண்டோடியது. மக்கா நகரும் அதன் சுற்றுப்புறங்களும் பசுமையாக மாறின. இதை சுட்டிக்காட்டும் விதமாக அபூதாலிப் கூறினார்.

அவர் அழகரல்லவேர்
அவரை முன்னிறுத்தி நாங்கள் மழை வேண்டுவோம்;
அவர் அநாதைகளின் அரணல்லவேர்
கைம்பெண்களின் காவலரல்லவோ. (மஜ்மவுஜ்ஜவாயித்)

துறவி பஹீரா

நபி (ஸல்) அவர்களுக்கு 12 வயதாகும் போது அபூதாலிப் வியாபாரத்திற்காக ’ஷாம்’ தேசம் சென்றார். அப்போது நபியவர்களையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். அவர்கள் ஷாம் நாட்டின் புஸ்ரா நகரை வந்தடைந்தனர். அங்கு ‘பஹீரா’ என்ற பிரபலமான துறவி ஒருவர் இருந்தார். அவரது பெயர் ‘ஜர்ஜீஸ்’ என்று சொல்லப்படுகிறது. அவர் எங்கும் வெளியில் செல்ல மாட்டார். எனினும், இந்த வியாபாரக் கூட்டம் புஸ்ரா சென்றதும் அவர்களை சந்திக்க வந்தார். வணிகக் கூட்டத்தைப் பிளந்துகொண்டு வந்து சிறுவரான நபி (ஸல்) அவர்களின் கரத்தைப் பற்றிக்கொண்டு “இதோ உலகத்தாரின் தலைவர்! இதோ உலகத்தாரின் இறைவனுடைய தூதர்! இவரை அல்லாஹ் அகிலத்தாருக்கு அருட்கொடையாக அனுப்புவான்” என்று கூறினார். அவரிடம் அபூதாலிபும் குறைஷிப் பெரியவர்களும் “இது எப்படி உமக்குத் தெரியும்?” என வினவினர். அவர் “நீங்கள் கணவாய் வழியாக வந்தபோது கற்களும் மரங்களும் சிரம் பணிந்தன. அவை இறைத்தூதர்களுக்கே தவிர வேறு எவருக்கும் சிரம் பணியமாட்டா. மேலும், அவரது புஜத்துக்குக் கீழிருக்கும் ஆப்பிளைப் போன்ற இறுதித் தூதரின் முத்திரையைக் கொண்டும் நான் அவரை அறிவேன். எங்களது வேதங்களில் அது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது” என்று கூறினார். பிறகு அவர்களுக்கு விருந்தளித்து உபசரித்தார். இச்சிறுவரை ஷாமுக்கு அழைத்துச் சென்றால் அங்குள்ள ரோமர்கள் மற்றும் யூதர்களால் இவருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே, இவரை இங்கிருந்தே மக்கா திருப்பி அனுப்பி விடுங்கள் என்று பஹீரா அபூதாலிபிடம் கூறினார். அதற்கினங்க அபூதாலிப் நபி (ஸல்) அவர்களை சில வாலிபர்களுடன் மக்காவுக்கு அனுப்பி வைத்தார். (ஸுனனுத் திர்மிதி, தபரீ, முஸன்னஃப் அபீஷைபா, இப்னு ஹிஷாம், பைஹகீ)

ஃபிஜார் போர்

நபி (ஸல்) அவர்களின் இருபதாவது வயதில் உக்காள் சந்தையில் குறைஷியரும் கினானாவும் கைஸ் அய்லான் குலத்தவருடன் சண்டையிட்டனர். அதற்கு ‘ஹர்புல் ஃபிஜார்’என்று சொல்லப்படும். அதன் காரணமாவது: கினானாவைச் சேர்ந்த ‘பர்ராழ்’என்பவன் கைஸ் அய்லானைச் சேர்ந்த மூன்று நபர்களைக் கடத்திச் சென்று கொலை செய்துவிட்டான். இந்தச் செய்தி உக்காள் சந்தையில் பரவியது. அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இரு தரப்பினரும் சண்டையிட்டனர். குறைஷ் மற்றும் பனூ கினானாவுக்கு ‘ஹர்ப் இப்னு உமய்யா’ தலைமை தாங்கினார். போரின் ஆரம்பத்தில் கைஸ் தரப்பினருக்கு வெற்றி கிட்டியது. ஆனால், நடுப் பகலுக்குப்பின் நிலைமை கைஸுக்கு எதிராகத் திரும்பியது. இந்நிலையில் சில குறைஷியர்கள் சமாதான உடன்படிக்கை செய்துகொள்ள விரும்பினர். எந்தத் தரப்பில் அதிக உயிர்ச் சேதம் ஏற்பட்டதோ அந்த அதிக எண்ணிக்கைக்கு மட்டும் நஷ்டஈடு தரவேண்டுமென்று ஒப்பந்தம் செய்து சமாதானமாயினர். இந்தப் போர் புனித மாதத்தில் ஏற்பட்டு அதன் கண்ணியத்தைக் குலைத்து விட்டதால் அதற்கு ‘பாவப்போர்’ எனப் பெயரிட்டனர். நபி (ஸல்) அவர்கள் இதில் கலந்துகொண்டு தந்தையின் சகோதரர்களுக்கு அம்பெடுத்துக் கொடுக்கும் பணியைச் செய்தார்கள். (இப்னு ஹிஷாம்) 

சிறப்புமிகு ஒப்பந்தம்

மேற்கூறப்பட்ட போருக்குப்பின் சங்கைமிக்க மாதமான துல் கஃதாவில் ‘ஹில்ஃபுல் ஃபுழூல்’ எனும் சிறப்புமிகு ஒப்பந்தம் ஏற்பட்டது. குறைஷி கோத்திரத்தைச் சேர்ந்த ஹாஷிம், முத்தலிப், அஸத் இப்னு அப்துல் உஜ்ஜா, ஜுஹ்ரா இப்னு கிலாப், தைம் இப்னு முர்ரா ஆகிய குடும்பத்தார் இதற்கான ஏற்பாட்டைச் செய்தனர். இவர்களில் அப்துல்லாஹ் இப்னு ஜத்ஆன் அத்தைமீ வயது முதிர்ந்தவராகவும் மதிப்புமிக்கவராகவும் இருந்ததால் அவர் வீட்டில் அனைவரும் ஒன்று கூடினர். மக்காவாசிகளாயினும் வெளியூர்வாசிகளாயினும் அவர்களில் எவருக்கேனும் அநீதி இழைக்கப் பட்டால் அவருக்கு முழுமையாக உதவி செய்து நீதி கிடைக்கச் செய்வதில் அனைவரும் இணைந்து முயற்சிக்க வேண்டும் என உடன்படிக்கை செய்து கொண்டனர். இவ்வுடன்படிக்கையில் நபி (ஸல்) அவர்களும் கலந்து கொண்டார்கள். இவ்வுடன்படிக்கையில் கலந்து கொண்டது பற்றி நபித்துவம் கிடைத்ததற்குப் பின் நபி (ஸல்) இவ்வாறு கூறினார்கள்: அப்துல்லாஹ் இப்னு ஜத்ஆன் வீட்டில் நடந்த ஒப்பந்தத்தில் நான் கலந்து கொண்டேன். எனக்கு செந்நிற ஒட்டகைகள் கிடைப்பதைவிட அந்த ஒப்பந்தத்தில் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இஸ்லாமின் வருகைக்குப் பின்பும் எனக்கு (அதுபோன்ற) ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டால் அதை நான் ஒப்புக் கொள்வேன். (இப்னு ஹிஷாம்)

இந்த உடன்படிக்கையின் அடிப்படைத் தத்துவம் அறியாமைக் காலத்தில் இனவெறியினால் ஏற்பட்ட அநீதங்களை முடிவுக்குக் கொண்டு வருவதாகும். இவ்வுடன்படிக்கை ஏற்படக் காரணம்: ஜுபைத் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தனது வணிகப் பொருட்களுடன் மக்கா வந்தார். ஸஹ்மாவைச் சேர்ந்த ஆஸ் இப்னு வாயில் அவரிடமிருந்து சரக்குகளை வாங்கிக் கொண்டு அதற்கான விலையைக் கொடுக்க மறுத்துவிட்டார். பறிகொடுத்தவர் தனது நேச கோத்திரங்களாகிய அப்துத் தார், மக்ஜூம், ஸஹ்ம் ஆகியோரிடம் சென்று உதவி கேட்டபோது எவரும் அவரது கோரிக்கையை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. உடனே அவர் அபூ குபைஸ் மலையில் ஏறிக்கொண்டு தனக்கிழைக்கப்பட்ட அநீதத்தை உரத்த குரலில் கவிதையாகக் கூறினார். அதைக் கேட்ட ஜுபைர் “இப்னு அப்துல் முத்தலிப் ஏன் இவ்வாறு இவர் கைவிடப்பட்டார்” என வினவினார்கள். அப்போதுதான் மேற்கூறப்பட்ட கோத்திரத்தார் இணைந்து இச்சிறப்புமிகு ஒப்பந்தத்தை நிறைவேற்றினர். அதன் பின் அனைவரும் ஆஸ் இப்னு வாயிலிடமிருந்து அந்த பாதிக்கப்பட்டவருக்கு அவரது உரிமையை பெற்றுத் தந்தனர். (தபகாத் இப்னு ஸஅது)

உழைக்கும் காலம்

நபி (ஸல்) அவர்கள் வாலிபத்தின் ஆரம்ப காலத்தில் குறிப்பிட்ட தொழில் எதையும் செய்து வரவில்லை. எனினும், ஸஅது கிளையாரின் ஆட்டு மந்தையை மேய்த்ததாக பல அறிவிப்பு களிலிருந்து தெரிய வருகிறது. அவ்வாறே மக்காவாசிகளின் ஆடுகளையும் மேய்த்து கூலியாக தானியங்களைப் பெற்று வந்தார்கள். (ஸஹீஹுல் புகாரி) வாலிபமடைந்தவுடன் ஆடு மேய்ப்பதை விட்டுவிட்டு ஸாம்ப் இப்னு அபூஸாம்ப் அல் மக்ஜூமி என்பவருடன் இணைந்து வணிகம் செய்யத் தொடங்கினார்கள். அவருக்கு நம்பிக்கைக்குரிய மிகச் சிறந்த தொழில் நண்பராக நபி (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள். மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளன்று அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். ‘என் சகோதரரே!, என் தொழில் நண்பரே!” எனக் கூறி அவரை நபி (ஸல்) அவர்கள் வரவேற்றார்கள். (ஸுனன் அபூதாவூது, இப்னு மாஜா, முஸ்னது அஹ்மது)

நபி (ஸல்) அவர்கள் 25 வது வயதில் கதீஜா அவர்களின் வணிகப் பொருட்களுடன் ஷாம் சென்றார்கள்.

இதுபற்றி இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்: கதீஜா பின்த் குவைலித் சிறப்பும் வளமும் மிக்க வியாபாரப் பெண்மணியாகத் திகழ்ந்தார். தனது வியாபாரத்திற்காக ஆட்களை வேலைக்கு அமர்த்தி அதில் கிடைக்கும் இலாபத்தின் ஒரு பகுதியை அவர்களுக்குத் தருவார். நபி (ஸல்) அவர்களின் வாய்மை, நம்பகத்தன்மை போன்ற நற்பண்புகளைப் பற்றி அன்னார் கேள்விப்பட்ட போது அவர்களை வரவழைத்து “எனது அடிமை மய்ஸராவுடன் வணிகப் பொருட்களை எடுத்துக் கொண்டு ஷாமில் வணிகம் செய்து வரவேண்டும். மற்ற வணிகர்களுக்குக் கொடுத்து வந்ததைவிட சிறப்பான பங்கை உங்களுக்குத் தருகிறேன்” என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதை நபி (ஸல்) அவர்கள் ஒப்புக் கொண்டார்கள்.