Adirai pirai
posts

தந்திக்கு குட்பை!!!!

தந்தி சேவை
இந்தியாவில் தந்தி சேவை முந்தைய காலத்தில் மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டது. வெளியூரில் நடக்கும் திருமணத்திற்கு செல்ல முடியவில்லையா?, வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புகிறாயா? நெருங்கிய

ஒருவர் இறந்து விட்டாரா? இவை எல்லாவற்றுக்கும் தகவல் கொடுக்க பயன்பட்டது தந்தி சேவை. காரணம் கடிதத்தை விட வேகமாக சென்று சேர்ந்துவிடும் என்பதால் தான்.

ஆனால் செல்போன்களும், இன்டர்நெட்டும் வந்த பின்னர் தந்தியின் வேகத்தைவிட இவை உடனடி தகவல் பரிமாற்றத்துக்கு பயன்பட்டன. இதனால் தந்தி சேவைக்கு மக்களிடம் இருந்த வரவேற்பு படிப்படியாக குறைந்து போனது.
தந்தியின் வரலாறு
இந்தியாவில் 1850–ம் ஆண்டு மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்த டைமண்ட் துறைமுகத்துக்கும் கிழக்கிந்திய கம்பெனிகளுக்கும் இடையே முதல் தந்தி சேவை அளிக்கப்பட்டது. 1853–ம் ஆண்டு நாடு முழுவதும் 6,400 கிலோ மீட்டர் தூரத்துக்கு தந்தி கம்பிகள் பதிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டது.
தொடர்ந்து உள்நாடுகள் மட்டுமல்லாது, வெளிநாடுகளுக்கும் தந்தி சேவை அளிக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது. பலரது வாழ்க்கையில் பல திருப்பங்களையும், இன்பங்களையும், துன்பங்களையும் சுமந்து வந்த தந்தி சேவை இன்றுடன் முடிந்து போகிறது. அண்ணாசாலை தந்தி அலுவலகம், பாரிமுனை ஜி.பி.ஓ. கட்டிடம் மற்றும் எத்திராஜ் சாலையில் உள்ள தந்தி அலுவலகம் போன்ற இடங்களில் தந்தி கொடுப்பதற்காக நேற்று வழக்கத்தை விட சற்று அதிகமானோர் வந்தனர்.
நேற்றே நிறுத்தம்
இதுகுறித்து தொலைதொடர்பு துறையின் தந்தி பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:–
நம்நாட்டில் 160 ஆண்டுகள் சேவை புரிந்து வந்த தந்தி சேவை 15–ந் தேதியோடு (திங்கட்கிழமை) நிறுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. வாரத்தின் கடைசி வேலை நாளான நேற்று அண்ணாசாலை தந்தி அலுவலகத்தில் தந்தி சேவை நிறுத்தப்பட்டது.
பாரிமுனையில் உள்ள ஜி.பி.ஓ. கட்டிடம் மற்றும் எத்திராஜ் சாலையில் உள்ள தந்தி அலுவலகங்கள் ஞாயிற்றுக்கிழமையும் செயல்படும் என்பதால் நாளையோடு (இன்று) அங்கும் தந்தி சேவை முற்றிலுமாக நிறுத்தப்படும். 15–ந் தேதி கடைசி நாளாக இருந்தாலும், பெறப்பட்ட தந்திகள் அனைத்தும் முழுமையாக உரியவர்களிடம் வழங்கப்படும்.
அடுத்த தலைமுறைக்காக
கடைசி நாள் என்பதால் பலர் அடுத்த தலைமுறையினரும் தந்தி சேவையை நினைவுகூருவதற்காக தனக்கு தானேயும், உறவினர்களுக்கும் ஆர்வமாக வந்து தந்தி அனுப்பினர். அண்ணா சாலை அலுவலகத்தில் வழக்கமாக ஒரு நாளைக்கு 50 தந்திகள் மட்டும் பெற்று வந்த நிலையில், கடந்த 12–ந் தேதி 90 தந்திகளும், நேற்று பொது மக்களிடம் இருந்து 76 தந்திகளும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து 292 தந்திகளும் என மொத்தம் 368 தந்திகள் பெறப்பட்டன.
குறிப்பாக கோட்டையில் உள்ள ராணுவ அலுவலகம், கோர்ட்டு, அரசு தேர்வாணையம், தனியார் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் அதிகாரபூர்வமான தகவல் பரிமாற்றத்திற்காக அதிகளவு தந்தி சேவையை பயன்படுத்தி வந்தன. இவர்களுக்கு தற்போது இ.போஸ்ட் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வீடியோ படம்
கடைசி நாளான இன்று ஜி.பி.ஓ. கட்டிடத்தில் உள்ள தந்தி அலுவலகத்திற்கு தந்தி கொடுக்க வருபவர்களை வீடியோ எடுக்க உள்ளோம். இந்த வீடியோ படங்கள் தொலைதொடர்பு துறை சார்பில் வரும் காலங்களில் நடத்தப்படும் கண்காட்சி போன்றவைகளுக்கு பயன்படுத்தப்பட இருப்பதால் பாதுகாப்பாக வைக்கப்படும்.
தந்தி சேவை நிறுத்தப்பட்டதால் இங்கு பணியாற்றும் ஊழியர்கள் பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தில் பல்வேறு பிரிவுகளில் மறுநியமனம் செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.