நோன்பின் கடமையும், அதனின் சிறப்பும்!!!

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் நோன்பும் ஒன்றாகும். இது பருவமடைந்த முஸ்லிமான ஆண், பெண் அனைவரும் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டிய வணக்கமாகும். 

அது அல்லாஹ்விடத்தில் அளவற்ற கூலியையும், அவனுடைய அன்பையும் அருளையும்
பெற்றுத் தருகிறது. மறுமை நாளில் நோன்பாளிக்காக அவரது நோன்பு அல்லாஹ்விடத்தில் சிபாரிசு செய்யும்.

அன்று அதில் அவர் மிக மகிழ்ச்சியுடன் அல்லாஹ்வைச் சந்திப்பார். சொர்க்கத்தின் எட்டு வாசல்களில் `ரய்யான்” என்னும் வாயிலும் ஒன்று. அதில் நோன்பாளிகள் மட்டுமே நுழைவார்கள். இவை போன்ற எத்தனையோ சிறப்புகள் நோன்பிற்கும் ரமலான் மாதத்திற்கும் உள்ளன.

அதே நேரத்தில் நோன்பையும் ரமலான் மாதத்தையும் முறையாக பயன்படுத்திக் கொள்ளாதவர் அல்லாஹ்வின் அருளிலிருந்து வெகுதூரமாகிறார். 

அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாவதுடன் மகத்தான நன்மையையும் நற்கூலியையும் இழந்தவராகிறார் என்பதையும் எச்சரிக்கை உணர்வுடன் அறிந்து கொள்ள வேண்டும். 

எனவே ஷைத்தானின் சூழ்ச்சியில் சிக்கிவிடாமல் அல்லாஹ்வின் தண்டனைக்குப் பயந்து, அவனுடைய நற்கூலிக்கு ஆசைப்பட்டு, ரமலானை முறையாகப் பயன்படுத்தி ஈருலகிலும் இறையருளைப் பெறுவோமாக!

Close