நபி(ஸல்) வரலாறு-07 (நபியவர்களின் வமிசம்)

அதிரை பிறைநபியவர்களின் வமிசம்
நபி (ஸல்) அவர்களின் வமிசத் தொடர் மூன்று வகையாகப் பிரிகின்றது.

முதலாவது: அனைத்து வரலாற்று ஆசிரியர்களும், வமிச இயல் வல்லுனர்களும் ஒருமித்த கருத்து கொண்டிருப்பது. இது நபி (ஸல்) அவர்களில் தொடங்கி அத்னானில் முடிகிறது.

இரண்டாவது: இதில் மிகுந்த கருத்து முரண்பாடுகள் உள்ளன. அவற்றை ஒன்றிணைப்பது இயலாததாகும். அது அத்னானிலிருந்து நபி இப்றாஹீம்

(அலை) அவர்கள் வரையிலான வமிசத் தொடராகும். இதில் சிலர் மௌனம் காக்கிறார்கள். சிலர் அத்னானுக்கு மேல் வமிசத் தொடரை கூறக்கூடாது என்கிறார்கள். சிலர் வமிசத் தொடரை அதற்கு மேலும் கூறுவது கூடும் என்கிறார்கள். இவ்வாறு கூறுபவர்கள் வமிசத் தொடர் மற்றும் எண்ணிக்கையில் முரண்படுகிறார்கள். அவர்களது முரண்பாடான கருத்துகள் முப்பதையும் தாண்டியுள்ளது. எனினும் அத்னான், நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் வமிசத்தைச் சேர்ந்தவர் என்பதில் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளனர்.

மூன்றாவது: இது நபி இப்றாஹீம் (அலை) அவர்களிலிருந்து ஆதம் (அலை) அவர்கள் வரையிலானது. இதில் வேதக்காரர்களின் கருத்தையே ஏற்க வேண்டி வருகிறது. அதில் பல கருத்துகள் பொய்யானவை என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இன்னும் சில கருத்துகள் குறித்து மௌனம் காப்பதே சிறந்ததாகும்.

நபி (ஸல்) அவர்களுடைய தூய வமிச வழியைப் பற்றி மேற்கூறப்பட்ட மூன்று பிரிவுகளையும் வரிசையாகக் காண்போம்.

முதல் பிரிவு: முஹம்மது (ஸல்) இப்னு அப்துல்லாஹ் இப்னு அப்துல் முத்தலிப் (பெயர் ஷைபா) இப்னு ஹாஷிம் (பெயர் அம்ரு) இப்னு அப்து மனாஃப் (பெயர் முகீரா) இப்னு குஸய்ம் (பெயர் ஜைது) இப்னு கிலாப் இப்னு முர்ரா இப்னு கஅப் இப்னு லுவய்ம் இப்னு காலிப் இப்னு ஃபிஹ்ர் (இவரே குறைஷி என அழைக்கப்பட்டவர். இவர் பெயராலேயே அக்கோத்திரம் அழைக்கப்படுகிறது) இப்னு மாலிக் இப்னு நழ்ர் (பெயர் கைஸ்) இப்னு கினானா இப்னு குஜைமா இப்னு முத்கா (பெயர் ஆமிர்) இப்னு இல்யாஸ் இப்னு முழர் இப்னு நிஜார் இப்னு மஅத்து இப்னு அத்னான். (இப்னு ஹிஷாம், தபரி)

இரண்டாவது பிரிவு: இது அத்னானுக்கு மேலே உள்ளவர்கள் பற்றியது. அத்னான் இப்னு உதத் இப்னு ஹமய்ஸா இப்னு ஸலாமான் இப்னு அவ்ஸ் இப்னு பவுஜ் இப்னு கிம்வால் இப்னு உபை இப்னு அவ்வாம் இப்னு நாஷித் இப்னு ஹஜா இப்னு பல்தாஸ் இப்னு யதுலாஃப் இப்னு தாபிக் இப்னு ஜாம் இப்னு நாஷ் இப்னு மாகீ இப்னு ஐழ் இப்னு அப்கர் இப்னு உபைத் இப்னு துஆ இப்னு ஹம்தான் இப்னு ஸன்பர் இப்னு யஸ்பீ இப்னு யஹ்ஜன் இப்னு யல்ஹன் இப்னு அர்அவா இப்னு ஐழ் இப்னு தைஷான் இப்னு ஐஸிர் இப்னு அஃப்னாத் இப்னு ஐஹாம் இப்னு முக்ஸிர் இப்னு நாஸ் இப்னு ஜாஹ் இப்னு ஸமீ இப்னு மஜீ இப்னு அவ்ழா இப்னு அராம் இப்னு கைதார் இப்னு இஸ்மாயீல் இப்னு இப்றாஹீம். (தபகாத் இப்னு ஸஅது)

மூன்றாம் பிரிவு: இது இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு மேல் அவர்களின் தந்தை தாரஹ். அவரது பெயர் ஆஜர் இப்னு நாஹூர் இப்னு ஸாரூஃ இப்னு ராவூ இப்னு ஃபாலக் இப்னு ஆபிர் இப்னு ஷாலக் இப்னு அர்ஃபக்ஷத் இப்னுஹிஸாம் இப்னு நூஹ் (அலை) இப்னு லாமக் இப்னு மதவ்ஷலக் இப்னு அக்நூக். (இவர்கள்தாம் இத்ரீஸ் (அலை) என்றும் சொல்லப்படுகிறது.) இப்னு யர்து இப்னு மஹ்லாயீல் இப்னு கைனான் இப்னு அனூஷ் இப்னு ஷீஸ் இப்னு ஆதம். (இப்னு ஹிஷாம்) 

நபியவர்களின் குடும்பம்

பாட்டனாரான ஹாஷிம் இப்னு அப்து மனாஃபின் பெயருடன் இணைத்து நபி (ஸல்) அவர்களின் குடும்பம் ஹாஷிமி குடும்பம் என அழைக்கப்பட்டது. ஆகவே, இங்கு ஹாஷிம் மற்றும் அவருக்குப் பின்னுள்ளோரைப் பற்றி சுருக்கமாகத் தெரிந்து கொள்வது நல்லது.

1. ஹாஷிம

அப்துத் தார் மற்றும் அப்து மனாஃப் குடும்பங்கள் சிறந்த பொறுப்புகளை தங்களுக்கிடையே பகிர்ந்து கொண்டபோது ஹாஜிகளுக்கு உணவளிப்பதும், தண்ணீர் கொடுப்பதும் அப்து மனாஃபின் மகனான ஹாஷிமுக்கு கிடைத்ததை முன்பு கூறினோம். இவர் மக்களிடையே பெரும் மதிப்பு மிக்க செல்வந்தராக இருந்தார். இவர்தான் முதன் முதலாக மக்காவில் ஹாஜிகளுக்கு ஸரீத் (திக்கடி) எனும் உயர்தரமான உணவை வழங்கியவர். இவரது பெயர் அம்ரு. எனினும், ஸரீதை தயாரிப்பதற்காக ரொட்டிகளை சிறுசிறு துண்டுகளாக ஆக்கியதால் இவருக்கு ‘ஹாஷிம்’ என்ற பெயர் வழங்கப்பட்டது. அவ்வாறே கோடை காலத்திற்கும் குளிர் காலத்திற்கும் என இரண்டு வியாபாரப் பயணங்களைக் குறைஷியடையே அறிமுகப்படுத்தியதும் இவரே.

அதுபற்றி ஒரு கவிஞர் குறிப்பிடுகிறார்:

அம்ரு! இவர்தான் பஞ்சத்தில் அடிபட்டு மெலிந்துபோன தனது சமூகத்தினருக்கு ரொட்டிகளை ஆனத்தில் (குழம்பு) பிய்த்துப் போட்டு உண்ண வழங்கியவர். இவரே குளிர், கோடை காலங்களின் வியாபாரப் பயணங்களைத் தோற்றுவித்தவர். (இப்னு ஹிஷாம்)

ஹாஷிம் வியாபாரத்திற்காக ஷாம் சென்று கொண்டிருந்தபோது மதீனாவை வந்தடைந்தார். அங்கு நஜ்ஜார் கிளையின் ‘அம்ர்’ என்பவன் மகள் ஸல்மாவை மணந்து சில காலம் அங்கேயே தங்கிவிட்டு ஷாம் புறப்பட்டார். ஸல்மா தனது குடும்பத்தாரிடம் தங்கியிருந்தார். அவர் அப்துல் முத்தலிபை கர்ப்பத்தில் சுமந்து கொண்டிருந்த நிலையில் ஹாஷிம் ஃபலஸ்தீனில் ‘கஸ்ஸா’ (காஸா) எனுமிடத்தில் மரணமடைந்தார். ஸல்மா கி.பி. 497 ஆம் ஆண்டு அப்துல் முத்தலிபை பெற்றெடுத்தார். குழந்தையின் தலையில் நரை இருந்ததால் ‘ஷைபா’ (நரைத்தவர்) என அதற்கு பெயரிட்டனர். (இப்னு ஹிஷாம்)

அக்குழந்தையை ஸல்மா மதீனாவிலிருந்த தனது தந்தையின் வீட்டிலேயே வளர்த்து வந்ததால் மக்காவிலிருந்த ஹாஷிமின் குடும்பத்தினர் எவரும் அவரது மகன் (ஷைபா) அப்துல் முத்தலிபைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை. ஹாஷிமுக்கு அப்துல் முத்தலிபைத் தவிர அஸத், அபூஸைஃபீ, நழ்லா என்ற மூன்று ஆண் மக்களும் ஷிஃபா, காலிதா, ழயீஃபா, ருகைய்யா, ஜன்னா என்ற ஐந்து பெண் மக்களும் இருந்தனர். (இப்னு ஹிஷாம்)

2. அப்துல் முத்தலிப்

ஹாஷிமிடமிருந்த பொறுப்புகளான ஹாஜிகளுக்கு உணவளிப்பதும் தண்ணீர் கொடுப்பதும் அவரது மரணத்திற்குப்பின் அவரது சகோதரர் முத்தலிப் இப்னு அப்து மனாஃப் வசம் வந்தது. இவர் தனது சமூகத்தில் கண்ணியமானவராகவும் பெரும் மதிப்புமிக்கவராகவும் விளங்கினார். அவரது வள்ளல் தன்மையை மெச்சி ‘ஃபைய்யாழ்’ (வாரி வழங்கும் வள்ளல்) என்று குறைஷியர்கள் அவரை அழைத்தனர். ஹாஷிமின் மகன் ஷைபா 7 அல்லது 8 வயதானபோது அவரைப் பற்றி கேள்விப்பட்ட முத்தலிப், அவரைத் தேடி மதீனா வந்தார். ஷைபாவைக் கண்டதும் வாரியணைத்து கண்ணீர் சொரிந்தார். ஷைபாவை தனது வாகனத்தில் அமர்த்திக் கொண்டு தன்னுடன் வருமாறு அழைத்தார். அவர் தனது தாயாரின் அனுமதியின்றி வர மறுத்துவிட்டார். முத்தலிப் ஷைபாவின் தாயார் ஸல்மாவிடம் அனுமதி கேட்க அவர் மகனை அனுப்பி வைக்க மறுத்துவிட்டார். இறுதியாக முத்தலிப் ஸல்மாவிடம் “இவரை எதற்காக அழைத்துச் செல்கிறேன்? அவரது தந்தையின் சொத்துகளுக்காகவும் அல்லாஹ்வின் இல்லம் அமைந்துள்ள புனித பூமிக்காகவும் தானே அழைத்துச் செல்கிறேன்” என்று கூறிய பின்னரே அழைத்துச் செல்ல அனுமதியளித்தார்.

முத்தலிப் தனது ஒட்டகையில் ஷைபாவை அமர்த்தி மக்காவுக்கு அழைத்து வந்தார். இக்காட்சியைக் கண்ட மக்காவாசிகள் ஷைபாவை பார்த்து இவர் (அப்துல் முத்தலிப்) “முத்தலிபின் அடிமை” என்றனர். அதற்கு முத்தலிப் கோபத்துடன் “உங்களுக்கு நாசம் உண்டாகட்டும்! இவர் எனது சகோதரர் ஹாஷிமின் மகனார்” என்றார். மக்காவில் முதன் முதலாக மக்கள் அழைத்த அப்துல் முத்தலிப் என்ற அப்பெயலேயே ஷைபா பிரபலமானார். வாலிபமடையும் வரை முத்தலிபிடம் ஷைபா வளர்ந்தார். முத்தலிப் யமன் நாட்டில் ‘ரதுமான்’ என்ற ஊரில் மரணமடைந்த பின் அவரது பொறுப்பை அப்துல் முத்தலிப் ஏற்றார். மக்காவிலேயே தங்கி தங்களது முன்னோர் செய்து வந்த பணியைத் தொடர்ந்தார். தனது முன்னோரில் எவரும் பெற்றிராத மதிப்பையும் மரியாதையையும் பெற்றார். அவரை மக்கள் பெரிதும் நேசித்தனர். (இப்னு ஹிஷாம்)

முத்தலிபின் மரணத்திற்குப் பின் அப்துல் முத்தலிபிடமிருந்த கஅபாவின் உடமைகளை நவ்ஃபல் பறித்துக் கொண்டார். அப்துல் முத்தலிப், குறைஷியர்கள் சிலரிடம் சென்று இதில் தனக்கு உதவுமாறு வேண்டிக் கொண்டதற்கு அவர்கள் “உமக்கும் உமது தந்தையின் சகோதரருக்குமிடையே உள்ள பிரச்சனையில் நாங்கள் தலையிட மாட்டோம்” எனக் கூறி உதவ மறுத்துவிட்டனர். இதனால் அப்துல் முத்தலிப் நஜ்ஜார் கிளையினரான தனது தாய்மாமன்களுக்கு கடிதம் எழுதி உதவி தேடினார். அக்கடிதத்தில் தனது நிலைமைகளை உள்ளங்களை உருக்கும் கவிதைகளாக வடித்திருந்தார். உடனே அவரது மாமாவான அபூ ஸஅது இப்னு அதீ, எண்பது வீரர்களுடன் புறப்பட்டு மக்காவிலுள்ள ‘அப்தஹ்’ எனுமிடத்தில் தங்கினார். அப்துல் முத்தலிப் அவரிடம் சென்று “நீங்கள் எனது வீட்டில் தங்குங்கள் என வேண்டிக் கொண்டபோது அவர் “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் நவ்ஃபலை சந்திக்காமல் வரமாட்டேன்” எனக் கூறிவிட்டார். அதன் பிறகு நவ்ஃபலிடம் அபூ ஸஅது வந்தார். அவர் ஹஜருல் அஸ்வத் அருகே சில குறைஷி பெரியவர்களுடன் அமர்ந்திருந்தார். அபூ ஸஅது வாளை உருவிய நிலையில் “இந்த இல்லத்தின் இறைவன் மீதாணையாக! நீர் எனது சகோதரியின் மகனுடைய உடமைகளைத் திருப்பியளிக்க வில்லை என்றால் இந்த வாளை உமது உடலுக்குள் பாய்ச்சி விடுவேன்” என்று கோபக்கனலுடன் கூறினார். அதற்கு நவ்ஃபல் “சரி! கொடுத்து விடுகிறேன்” என்று கூறி அதற்கு அங்கிருந்த குறைஷி பெரியவர்களைச் சாட்சிகளாக்கினார். அதன் பின்னரே அபூ ஸஅது அப்துல் முத்தலிபின் வீடு சென்று மூன்று நாட்கள் தங்கி, பின்னர் உம்ராவை முடித்து மதீனா திரும்பினார்.

இந்நிலையில் ஹாஷிம் கிளையாருக்கு எதிராக, தனக்கு உதவ வேண்டும் என அப்து ஷம்ஸ் இப்னு அப்து மனாஃப் கிளையாருடன் நவ்ஃபல் நட்பு ஒப்பந்தம் செய்துகொண்டார். மறு புறத்தில் அப்துல் முத்தலிபுக்கு நஜ்ஜார் கிளையினர் செய்த உதவிகளைப் பார்த்துக் கொண்டிருந்த குஜாஆவினர் கூறினர்: “அவர் உங்களுக்கு மட்டும் வாரிசு அல்ல எங்களுக்கும் வாரிசு ஆவார். எனவே, அவருக்கு உதவ நாங்களே மிகத் தகுதியானவர்கள். (இதற்குக் காரணம் அப்துல் முத்தலிபின் பாட்டனார் அப்து மனாஃபுடைய தாய் குஜாஆ வமிசத்தைச் சேர்ந்தவராவார்) குஜாஆவினர் தாருந் நத்வாவுக்குள் சென்று அப்து ஷம்ஸ் மற்றும் நவ்ஃபலுக்கு எதிராக உங்களுக்கு உதவி செய்வோம் என ஹாஷிம் கிளையாரிடம் நட்பு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். இந்த நட்பு ஒப்பந்தமே பிற்காலத்தில் மக்கா வெற்றிகொள்வதற்கு காரணமாக அமைந்தது. (தபரீ)

இறை இல்லம் கஅபா சம்பந்தமாக அப்துல் முத்தலிப் இரு முக்கிய நிகழ்வுகளை சந்தித்தார்.

ஜம்ஜம் கிணறு

முதலாம் நிகழ்வு: அப்துல் முத்தலிபுக்குக் கனவில் ஜம்ஜம் கிணற்றின் இடம் காண்பிக்கப்பட்டு அதை தோண்டுமாறு உத்தரவிடப்பட்டது. அதை அவர் தோண்டியபோது ஜுர்ஹும் கோத்திரத்தினர் மக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டபோது அதனுள் போட்டு மூடியிருந்த வாள்களும் கவச சட்டைகளும் தங்கத்தாலான இரு மான் சிலைகளும் கிட்டின. அப்துல் முத்தலிப் வாள்களை உருக்கி கஅபாவின் கதவாக ஆக்கினார். இரு தங்க மான் சிலைகளையும் உருக்கி கதவின் மேல் தகடாக ஆக்கினார். பிறகு ஹஜ் பயணிகளுக்கு ஜம்ஜம் கிணற்று நீரை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

ஜம்ஜம் கிணறு தோண்டப்பட்ட போது குறைஷியர்கள் அப்துல் முத்தலிபிடம் வந்து அதில் தங்களுக்கும் பங்களிக்க வேண்டுமென வாதிட்டனர். அவர் இது எனக்கு மட்டுமே உரித்தானது என்று கூறி அதை ஏற்க மறுத்துவிட்டார். அவர்கள் விடாப்பிடியாக தங்களுக்குப் பங்களித்தே தீரவேண்டுமென வலியுறுத்தினர். இறுதியாக, ஷாமில் பெரிதும் மதிக்கப்பட்ட ஸஃது ஹுதைம் என்ற கோத்திரத்தைச் சேர்ந்த குறி கூறும் பெண்ணிடம் தீர்ப்பு கேட்கும் முடிவுடன் ஷாம் தேசத்திற்கு கிளம்பினர். செல்லும் வழியில் தண்ணீர் தீர்ந்துவிடவே அப்துல் முத்தலிபுக்கு மட்டும் அல்லாஹ் மழை மூலம் தண்ணீரை வழங்கினான். குறைஷியர்கள் மீது ஒரு துளியும் மழை பொழியவில்லை. இதைக் கண்ட குறைஷியர்கள் ஜம்ஜம் கிணற்றில் அப்துல் முத்தலிபுக்கு உள்ள தனிப்பட்ட உரிமையை ஒப்புக் கொண்டு திரும்பினர். இச்சந்தர்ப்பத்தில் ‘அல்லாஹ் தனக்கு பத்து ஆண் பிள்ளைகளை அளித்து அவர்கள் எனக்கு உதவும் வயதை அடைந்தால் அதில் ஒருவரை கஅபாவிற்கருகில் அல்லாஹ்விற்காக பலியிடுவதாக’ அப்துல் முத்தலிப் நேர்ச்சை செய்து கொண்டார். (இப்னு ஹிஷாம்)

யானைப் படை

இரண்டாம் நிகழ்வு: நஜ்ஜாஷி மன்னரால் யமன் நாட்டு ஆளுநராக நியமிக்கப்பட்ட ‘அப்ரஹா’ புனித கஅபாவைப் போன்றதொரு ஆலயத்தைத் தானும் உருவாக்க விரும்பி ‘ஸன்ஆ’ நகரத்தில் பிரம்மாண்டமான கிறிஸ்துவ ஆலயம் (உhரசஉh) ஒன்றை நிர்மாணித்தான். மக்காவிற்குச் செல்லும் ஹஜ் பயணிகளைத் தனது சர்ச்சுக்குத் திருப்பிவிட முயற்சித்தான். இதுபற்றி கினானா கிளையைச் சேர்ந்த ஒரு மனிதர் கேள்விப்பட்டு இரவோடு இரவாக அந்த சர்ச்சுக்குள் புகுந்து அதனை அசுத்தப்படுத்தி விட்டார். அதைக் கண்ட அப்ரஹா கோபத்தால் கொதித்தெழுந்தான். 60,000 வீரர்கள் கொண்ட பெரும் படையுடன் பெரிய யானை ஒன்றில் அமர்ந்தவாறு கஅபாவை இடித்துத் தகர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கிளம்பினான். அவனது படையில் 9 அல்லது 13 யானைகள் இருந்தன. அவன் யமனிலிருந்து கிளம்பி ‘முகம்மஸ்’ என்ற இடத்தில் தனது படையை ஒழுங்குபடுத்தி யானைகளைத் தயார் செய்து மக்காவினுள் நுழைய ஆயத்தமானான். மினா மற்றும் முஜ்தலிஃபாவுக்கிடையே உள்ள ‘முஹஸ்ஸிர்’ என்ற பள்ளத்தாக்கை அடைந்ததும் அவன் வாகனித்த யானை தரையில் மண்டியிட்டு உட்கார்ந்து கொண்டது. அதனைத் தெற்கு, வடக்கு மற்றும் கிழக்குத் திசை நோக்கி செலுத்தப்பட்டால் விரைந்து சென்றது. ஆனால், கஅபாவை நோக்கிச் செல்ல மறுத்துவிட்டது.

அந்நிலையில் அல்லாஹ் அவர்கள் மீது சிறிய பறவைகளைக் கூட்டம் கூட்டமாக அனுப்பி வைத்தான். அவை சுடப்பட்ட கற்களை அவர்கள் மீது எறிந்தன. அதன் மூலம் அவர்களை தின்னப்பட்ட வைக்கோல்களைப் போன்று அல்லாஹ் ஆக்கிவிட்டான். இப்பறவைகள் சிறிய குருவிகளைப் போன்று இருந்தன. அவை ஒவ்வொன்றிடமும் பட்டாணியைப் போன்ற மூன்று கற்கள் இருந்தன. ஒன்று அதன் அலகிலும், இரண்டு அதன் இரு கால்களிலும் இருந்தன. அது எவர்மீது விழுந்ததோ அம்மனிதன் உறுப்புகள் துண்டிக்கப்பட்டு மரணமடைந்தான். கற்கள் வீசப்படாத சிலரும் இருந்தனர். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழ தப்பி ஓடினார்கள். வழியிலேயே ஒவ்வொருவராக வீழ்ந்து மரணமடைந்தனர். அப்ரஹாவுக்கு அல்லாஹ் ஒரு வியாதியை ஏற்படுத்தினான். அதன் காரணமாக அவனது ஒவ்வொரு விரலும் கழன்று விழ ஆரம்பித்தன. அவன் ஸன்ஆவை அடைந்தபோது ஒரு குருவி குஞ்சை போன்று சுருங்கி விட்டான். பிறகு அவனது மார்புப் பகுதியிலிருந்து இருதயம் வெளியாகி துடிதுடித்துச் செத்தான்.

அப்ரஹா கஅபாவை தகர்க்க வந்தபோது மக்காவில் வசித்த குறைஷியர்கள் அனைவரும் அப்படைகளை எதிர்க்க அஞ்சி மலை உச்சிகளிலும் கணவாய்களிலும் சென்று பதுங்கிக் கொண்டனர். அந்தப் படைகள் மீது அல்லாஹ்வின் தண்டனை இறங்கியதைக் கண்ட பின்பே அவர்கள் நிம்மதியுடன் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர். (இப்னு ஹிஷாம்)

இந்நிகழ்ச்சி நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு 50 அல்லது 55 நாட்களுக்கு முன் முஹர்ரம் மாதத்தில் (ஈஸவி ஆண்டு 571 பிப்ரவரி மாதம் கடைசியில் அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில்) நடைபெற்றது. அல்லாஹ் தனது நபி மற்றும் புனித வீட்டின் மகத்துவத்தை வெளிப்படுத்துவதற்கான தொடக்கமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. ஏனெனில், பைத்துல் முகத்தஸ் முஸ்லிம்களின் வசம் இருந்தும் இருமுறை இணைவைப்பவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. 1) புக்து நஸ்ர் கி.மு. 587 ஆம் ஆண்டிலும் 2) ரோமானியர்கள் கி.பி. 70 ஆம் ஆண்டிலும் கைப்பற்றினர். அக்காலத்தில் கிருஸ்துவர்களே (ஈஸா (அலை) அவர்களை ஈமான் கொண்ட) முஸ்லிம்களாக இருந்தனர். ஆனால், மக்காவாசிகள் நிராகரிப்பாளர்களாக, இணைவைப்பவர்களாக இருந்தும் ஹபஷாவைச் சேர்ந்த கிருஸ்துவர்கள் முஸ்லிம்களாக இருந்தும் அவர்களால் கஅபாவைக் கைப்பற்ற முடியவில்லை.

அப்ரஹாவின் யானைப் படைகளை அல்லாஹ் அழித்த செய்தி பாரசீகம், ரோம் போன்ற உலகின் பெரும்பாலான பகுதிகளை விரைவாகச் சென்றடைந்தது. ஏனெனில், ஹபஷியர் ரோம் நாட்டுடன் வலுவான தொடர்பு வைத்திருந்தனர். அவ்வாறே பாரசீகர்களின் பார்வை ரோமர்களின் மீது எப்போதும் இருந்தது. ரோமர்களுக்கும் அவர்களுடன் நட்பு கொண்டவர்களுக்கும் ஏற்படும் நிகழ்வுகளைத் துல்லியமாகக் கண்காணித்து வந்தனர். இந்த யானைச் சம்பவம் பற்றி அறிந்தவுடன் பாரசீகர்கள் விரைந்து சென்று யமனைக் கைப்பற்றினர். அக்காலத்தில் பாரசீகமும் ரோமும் நாகரீக உலகின் முன்னோடிகளாகத் திகழ்ந்தன. யானைச் சம்பவம் உலக மக்களின் பார்வையை கஅபாவின் பக்கம் திருப்பி அதன் மாண்புகளையும், அதையே அல்லாஹ் புனித பூமியாகத் தேர்ந்தெடுத்துள்ளான் என்பதையும் உணரச் செய்தது.

புனித மண்ணில் இணைவைப்பவர்களுக்கு அல்லாஹ் உதவி செய்த இந்நிகழ்ச்சி ஒரு மறைமுகக் கருத்தைச் சுட்டிக்காட்டுகிறது. அதாவது, யாரேனும் இப்புனித மண்ணில் இருந்துகொண்டு தன்னை இறைவனின் தூதர் என வாதிட்டால் அவர் உண்மையாளராகத்தான் இருக்க முடியும். ஏனெனில், நிச்சயமாக அவர் புனித மண்ணில் பொய்யுரைக்க முடியாது. அவ்வாறு கூறினால் அவரை அல்லாஹ்வே யானைப் படையை முறியடித்தது போல அழித்துவிடுவான்.

அப்துல் முத்தலிபுக்கு பத்து ஆண் பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் 1) ஹாஸ், 2) ஜுபைர், 3) அபூ தாலிப், 4) அப்துல்லாஹ், 5) ஹம்ஜா, 6) அபூ லஹப், 7) கைதாக், 8) முகவ்விம், 9) ழிரார், 10) அப்பாஸ்.

அப்துல் முத்தலிபுக்கு ஆறு பெண் பிள்ளைகளும் இருந்தனர். அவர்கள்: 1) உம்மு ஹகீம் என்ற ‘பைழாவு“, 2) பர்ரா, 3) ஆதிகா, 4) ஸஃபிய்யா, 5) அர்வா, 6) உமைமா. (தல்கீஹ், இப்னு ஹிஷாம்)

3. அப்துல்லாஹ்

இவர்தான் நபி (ஸல்) அவர்களின் தந்தையார். அவர்களது தாயாரின் பெயர் ஃபாத்திமா பின்த் அம்ரு இப்னு ஆம்த் இப்னு இம்ரான் இப்னு மக்ஜும் இப்னு யகளா இப்னு முர்ரா என்பதாகும். அப்துல் முத்தலிபின் மக்களில் ‘அப்துல்லாஹ்’ மிக அழகிய தோற்றமுடையவராகவும், ஒழுக்கச் சீலராகவும், தந்தையின் பிரியத்திற்குரியவராகவும் இருந்தார். அவரே ‘தபீஹ்’ (பலியிடப்பட்டவர்) என்ற பெயரையும் பெற்றவர். அப்துல் முத்தலிப் தனது பிள்ளைகள் வாலிப வயதை அடைந்தபோது தன்னுடைய நேர்ச்சையைப் பற்றி அவர்களிடம் தெரிவித்தார். பிள்ளைகள் அனைவரும் அதை ஒப்புக் கொண்டனர். அவர்களில் எவரைப் பலியிடுவது என்பது பற்றி சீட்டுக் குலுக்கிப் பார்த்தபோது அதில் அப்துல்லாஹ்வின் பெயர் வந்தது. அவர் தனது நேசமிகு மகன் என்பதால் அப்துல் முத்தலிப் “அல்லாஹ்வே! அப்துல்லாஹ்வை அறுக்கவா? அவருக்குப் பதிலாக நூறு ஒட்டகைகளை அறுக்கவா”? என்று கேட்டு அவ்வாறே எழுதி குலுக்கிப்போட்டு எடுத்ததில் நூறு ஒட்டகை என எழுதப்பட்ட சீட்டு வெளியானது.

சிலருடைய கூற்று என்னவெனில், அப்துல் முத்தலிப் அம்புகளில் தனது பிள்ளைகளின் பெயர்களை எழுதி ஹுபுல் சிலையின் தலைமை பூசாரியிடம் கொடுத்தார். அவர் குலுக்கி எடுத்த அம்புகளில் அப்துல்லாஹ்வின் பெயர் எழுதப்பட்டிருந்தது. உடனே அப்துல் முத்தலிப் அப்துல்லாஹ்வை பலியிட கஅபாவுக்கு அழைத்துச் சென்றார். அவரைக் குறைஷியர்கள் தடுத்தனர். குறிப்பாக மக்ஜூம் கிளையைச் சேர்ந்த அப்துல்லாஹ்வின் தாய்மாமன்களும், அப்துல்லாஹ்வின் சகோதரர் அபூதாலிபும் தடுத்தனர். அப்துல் முத்தலிப் அவர்களிடம் “நான் செய்த நேர்ச்சையை எவ்வாறு நிறைவேற்றுவது?” என்றார். அவர்கள் “குறி சொல்லும் பெண்ணிடம் இதுபற்றி ஆலோசனைக் கேள்” என்று கூறினர். அதை ஏற்று அவளிடம் சென்றபோது “அப்துல்லாஹ்வின் பெயரை ஒரு சீட்டிலும், பத்து ஒட்டகைகள் என்பதை மற்றொரு சீட்டிலும் எழுதிப் போட்டு அப்துல்லாஹ்வின் பெயர் வந்தால் அல்லாஹ் திருப்தியடையும் வரை பத்துப் பத்தாக அதிகரித்துச் செல்லுங்கள். எப்பொழுது ஒட்டகைகளின் சீட்டு வருமோ அத்தனை ஒட்டகைகளை பலியிடுங்கள்” எனக் கூறினாள். பத்து ஒட்டகைகளுடன் அப்துல்லாஹ்வின் பெயரை எழுதிக் குலுக்கிப் போட்டபோது அப்துல்லாஹ்வின் பெயரே வந்தது. அப்துல் முத்தலிப் பத்துப் பத்தாக ஒட்டகைகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே சென்றார். நூறு ஒட்டகைகளா? அப்துல்லாஹ்வா? என எழுதிக் குலுக்கிப் போட நூறு எண்ணிக்கை சீட்டு குலுக்கலில் வந்தது. எனவே, நூறு ஒட்டகைகள் பலியிடப்பட்டன. இந்த முறையை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள பொது அனுமதி வழங்கப்பட்டது. அதுவரை குறைஷியரிடமும் அரபியரிடமும் ஒரு மனிதனின் கொலைக்கான நஷ்டஈடு பத்து ஒட்டகைகளாக இருந்தன. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நூறு ஒட்டகைகளாக உயர்த்தப்பட்டன. இஸ்லாமும் அதனை அங்கீகத்தது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நான் பலி கொடுக்கப்பட்ட இருவரின் மகன்” அதாவது இஸ்மாயீல் (அலை) மற்றும் தந்தை அப்துல்லாஹ்வை குறித்து இவ்வாறு கூறினார்கள். (தபரீ, இப்னு ஹிஷாம்)

அப்துல்லாஹ்வுக்கு ‘ஆமினா’ என்ற பெண்மணியை துணைவியாக அப்துல் முத்தலிப் தேர்ந்தெடுத்தார். ஆமினா, வஹப் இப்னு அப்துமனாஃப் இப்னு ஜுஹ்ரா இப்னு கிலாப் உடைய மகளாவார். அக்காலத்தில் அவர் வமிசத்தாலும் மதிப்பாலும் குறைஷியரில் உயர்ந்த பெண்மணியாகத் திகழ்ந்தார். அவரது தந்தை ஜுஹ்ரா கிளையாரின் தலைவராக இருந்தார். அப்துல்லாஹ் மக்காவில் தனது மனைவியுடன் வாழ்ந்தார். சில காலங்களுக்குப் பிறகு அவரை அப்துல் முத்தலிப் பேரீச்சம் பழம் வாங்கி வர மதீனாவுக்கு அனுப்பினார். எதிர்பாராவிதமாக அவர் அங்கேயே மரணமடைந்தார்.

சில வரலாற்றாசியர்கள் கூறுவது: அப்துல்லாஹ் வியாபார நோக்கில் ஷாம் சென்றார். குறைஷியரின் ஒரு வியாபாரக் குழுவினருடன் திரும்பிக் கொண்டிருந்தபோது நோய் வாய்ப்பட்டு மதீனாவில் தங்கினார். நோய் அதிகரித்து அங்கேயே மரணமடைந்தார். ‘நாபிகா’ என்பவன் இல்லத்தில் அவரை அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அவரது வயது இருபத்தைந்தாக இருந்தது. அவரின் மரணம் நபி (ஸல்) அவர்களின் பிறப்புக்கு முன்பே நிகழ்ந்துவிட்டது. இதுவே பெரும்பாலான வரலாற்றாசியர்களின் கருத்தாகும். மற்றும் சிலர் நபி (ஸல்) அவர்கள் பிறந்து, குறைந்தது இரண்டு மாதங்களுக்குப் பின் அப்துல்லாஹ் இறந்தார் என்று கூறுகிறார்கள். அவரது மரணச் செய்தியை கேள்விப்பட்ட ஆமினா கல்லும் கசிந்துருகும் ஓர் இரங்கற்பாவைப் பாடினார்.

“ஹாஷிமின் மகன் பத்ஹாவின் சுற்றுப்புறத்தில் இப்போது இல்லை.
அவர் புதைக்குழிக்குள் போர்வையிலே புகுந்துவிட்டார்.
மரணம் அவரை அழைக்க அதற்கவர் பதில் தந்தார்.
மரணம் ஹாஷிமின் மைந்தன் போன்றவரை கூட விட்டு வைக்கவில்லையே!
அவன் கட்டிலை நண்பர்கள் அந்தியில் சுமந்தனர்.
நெருக்கடியால் ஒருவர் பின் ஒருவராக மாற்றினர்.
மரணம் அவரை அழித்தது.
ஆனால் அவரது புகழை அழிக்கவில்லை.
அவர் மிகுந்த இரக்க சிந்தையுள்ள வாரிவழங்கும் வள்ளலாக திகழ்ந்தார்.” (தபகாத் இப்னு ஸஅது)

ஐந்து ஒட்டகைகள், சிறிய ஆட்டு மந்தை, மற்றும் உம்மு அய்மன் என்ற புனைப் பெயருடைய ‘பரகா’ என்ற நீக்ரோ அடிமைப் பெண் ஆகியவற்றையே தனது குடும்பத்தாருக்கு அப்துல்லாஹ் விட்டுச் சென்றார்.

நபி (ஸல்) அவர்களை வளர்ப்பதில் இந்த நீக்ரோ பெண்மணியும் பங்கு கொண்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. (ஸஹீஹ் முஸ்லிம்)

Close